Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

புறப்பொருள் விளக்கம்
ந.சி. கந்தையா




1. புறப்பொருள் விளக்கம்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. புறப்பொருள் விளக்கம்

நூற்குறிப்பு
  நூற்பெயர் : புறப்பொருள் விளக்கம்
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 16 + 160 = 176
  படிகள் : 1000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,
  இராயப்பேட்டை, சென்னை - 600 014.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.

2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.

எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகவுரை
அகப்பொருள் புறப்பொருள் இலக்கணங்கள் மற்றெம்மொழிகளி லும் காணப் பெறாது தமிழ்மொழி ஒன்றனுக்கு மாத்திரம் உரிமை பூண்ட தனிப் பெரும் பொருள்களாம். இவ்விரு இலக்கணங்களும், கிறித்துவுக்குப் பல்லாயிரமாண்டுகளுக்கு முன் உள்ள தமிழர்களது வாழ்க்கை முறை களைக் காட்டும் படிமக்கலங்களாகும். ஆகவே தமிழர்களது பழைய சரித்திரங்களை ஆராயப் புகும் எவருக்கும் அகப்பொருள், புறப்பொருள் அறிவு இன்றியமையாதது. அகப்பொருள் இலக்கணத்தைப் பிரமாணமாகக் கொண்டு செய்யப்பட்ட நூல்கள் கோவைப் பிரபந்தங்களும், அகநானூறு, கலித்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலியனவும் பிறவு மாகும். புறப்பொருள் இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்டு செய்யப் பட்டன புறப்பொருள் வெண்பாமாலையும் புறநானூற்றிற் காணப்படும் செய்யுட்களுமாகும். புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தால் தொல் காப்பியத்தைவிடப் புறப்பொருள் இலக்கணங்கூறும் பன்னிருபடலம் என்னும் ஓர் நூல் இருந்ததாகத் தெரிகிறது. தொல்காப்பியம் கூறும் புறப் பொருள் இலக்கணத்திற்கும் பன்னிரு படலத்திற் கூறப்படுவன வற்றுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அவ் வேற்றுமைகளை ஒப்பு நோக்குவதற்காகப் பன்னிரு படலத்தைப் பின்பற்றிச் செய்யப்பட்ட புறப்பொருள் வெண்பா மாலையிற் கூறப்படும் பொருள்களும், தொல்காப்பியத்திற் சொல்லப்படும் பொருள்களும் வெவ்வேறாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

தொடர்பு பெறாது தனித்தனியாக விளக்க வேண்டிய பொருட் கூறுபாடுகள் ஒழிபியலில் விளக் கப்பட்டிருக்கின்றன. செய்யுள் நடையிற் காணப்படுவதும் பண்டிதர்கள் ஆட்சியில் மாத்திரம் இதுவரையில் இருந்து வருகின்றதுமாகிய புறப் பொருளை பள்ளிச்சிறாரும் கற்றறியும் முறையில் இன்னூல் ஆக்கப் பெற்றுள்ளது.
ந. சி. கந்தையா.

தமிழ்நிலையம்

நாவலியூர்,

01.02.1936

புறப்பொருள் விளக்கம்


தோற்றுவாய்
புறப்பொருள் பழந்தமிழரின் போரொழுக்கத்தைக் கூறும். இவ் வொழுக்கங்களை புறப்பொருள் வெண்பாமாலை, தொல்காப்பியம் முதலிய நூல்கள் திணைவகையானும் துறைவகையானும் இலக்கண முறையிற் கூறுகின்றன. அவ் விஷயங்கள் பலவற்றையும் தொடர்புபடுத்தி ஆராய்ந்து விளங்கி மகிழ்வது சாமானிய கல்வியாளர்க்கு எளிதன்று. ஆகவே புறப் பொருள் சம்பந்தமாகிய விஷயங்களனைத்தையும் பள்ளிச் சிறாரும் இலகுவில் அறிந்து உவகை எய்துமாறு இந் நூல் இலேசான முறையில் எழுதப்படலாயிற்று.

கூத்தர் கூத்தியர் முதலானோர் அகப்பொருள் புறப்பொருள் விஷயங்களை மன்னர் அவைகளில் நடித்துக் காட்டுதல் வழக்கு. காதல் சம்பந்தமாகிய அகம் வேத்தியல் எனப்படும். அகப்பொருள் நாடகங்கள் அரசர் அவைகளிலன்றி ஏனைய விடங்களில் நடித்தற்கு அரசரால் அனுமதிக்கப் பட்டில. 1புறப்பொருள் சம்பந்தமாகிய பொதுவியல் எல்லா விடங்களிலும் நடிக்கப் பெற்றது. “நாடக வழக்கினும் - பாடல் சான்ற புல நெறி வழக்கினும்,” என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தானும் அகப் பொருள் புறப்பொருள் விஷயங்கள் நாடக வழக்கிலுள்ளன என்று உய்த்து உணரப்படும்.

அகப்பொருள் பற்றியும் புறப்பொருள் பற்றியும் புலவர்களாற் பாடப் பட்ட தனிநிலைச் செய்யுட்கள் சந்தர்ப்பத்திற்கேற்ப நாடகங்களிற் பாடப் பட்டு வந்தன. புலவர்கள் பாடிக்கொண்டு வந்த அகப்பொருட் பாடல்களை அரசர்கள் மதித்து அவற்றிற்கு வெகுமதி அளித்தது இக் காரணம்பற்றிப் போலும். புறப்பொருட் பாடல்களை நாடகங்களில் பாடுவதால் வேந்தர்க ளுடைய புகழ் உலகின்கண் பரவா நிற்கும். இவ் விஷயம் ஆராய்ச்சிக் குரியது.

நிரை கவர்தல், நிரை மீட்டல், படை எடுத்தல் (மாற்றரசன்) எதிர்த்தல், மதிலை வளைத்துப் பொருதல், மதில் காத்தல், பொருதல் எனப் போர் ஏழு வகைப்படும். வென்றது வாகை எனப்படும்.

நிரை கவர்தலும் நிரை மீட்டலும் தமிழ் மக்களது முற்பட்ட காலத்துப் போர் ஒழுக்கங்களாகும். மக்கள் மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்த ஒரு காலத்து இவ்வகையான போரொழுக்கங்கள் மிகுதியும் நிகழ்ந்தன வாதல் வேண்டும்.

மேலே கூறப்பட்ட ஒவ்வோர் போர் ஒழுக்கத்தின் கண்ணும் படைவீரர் தமது கொண்டையிடத்தே ஒவ்வோர் அடையாளப் பூவைச் சூடினர்.

அக் காரணம்பற்றி அவ்வொழுக்கங்கள் அப் பூக்களின் பெயரைப் பெற்றன.

“வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேற்செல்வது வஞ்சியாம்-உட்கார்
எதிரூன்றல் காஞ்சி யெயில்காத்த னொச்சி
யதுவளைத்தலாகு முழிஞை”
“அதிரப் பொருவது தும்பையாம்
போர்க்களத்து மிக்கார் செருவென்றது வாகையாம்
அத்திணைத் தொழிலு மத்திணைப் பூவும்
அப்பெயர் பெறுத லந்நிலத் துரியவே” (திவாகரம்)

“வெட்சி ஆகவர்தலானும் கரந்தையுட்கு வரச்சென்று விடுத்தலானும் வெட்சியுங்கரந்தையுந் தம் முண்மாறே, வஞ்சிமேற் செல்லலானும் காஞ்சி அஞ்சாதெதிர் சென்றூன்றலானும், வஞ்சியுங் காஞ்சியுந் தம் முண்மாறே, உழிஞையாரெயின் முற்றலானும், நொச்சி விழுமி தினவ்வெற்றி காத்த லானும் உழிஞையு நொச்சியுந்தம் முண் மாறே”

“புறப்புறமாவன-வாகையும் பாடாண் பாட்டும் பொது வியற் றிணையும்.” (யாப்பருங்கலவிருத்தி)

புறப்பொருள் வசனம்
நிரை கவர்தல்
ஒரு வேந்தன் பிறிதோர் அரசனோடு போர் செய்யக் கருதினான்; கருதித் தனது படைத் தலைவரையும் போர் நிலத்தைக் காத்து நின்றோரை யும் அழைத்துப் பகைவனின் நிரைகளைக் கவர்ந்து வரும்படி பணித்தான். அவ் ஏவலை மேற்கொண்ட வீரக்கழலைக் காலிலே புனைந்த மறவர், “அரசனே! பகைவரது ஆநிரைகள் விடியற்காலத்தே நின் வாசலிடத்தன வாம்” எனக் கூறிச் சென்று மகிழ்ச்சிக்குரிய இச் செய்தியைப் போர்வீரர்க் குணர்த்தினர்.

போரின்மையால் தினவுகொண்டு, ‘மலை ஏறிக் குதித்தேனும் உயிர் விடுவேம்’ எனக் கவன்றிருந்த மறத்தொழில் மிக்கார் இந்நற் செய்தியைச் செவிக்கொண்டு அகமும் முகமும் மலர்ந்து ஆநந்தத் தாண்டவஞ் செய்தனர். அரசனது ஒற்றர் சிலர் பகைவரது ஆநிரை நிற்கும் இடம் முதலியவற்றை அறியும்படி மாறுவேடமிட்டுச் சென்றனர். போர் வீரருட் சிலர் இருள் சூழ்ந்த மாலைக்காலத்துப் பாக்கத்தே சென்று முற்றத் தின்கண் முல்லை மலரையும் நாழியிலிட்ட நெல்லையுந் தூவித் தெய் வத்தைப் பரவிக் கைகூப்பித் தொழுது நற்சொற்கேட்க நின்றனர். அஞ்ஞான்று அவ்விடத்துள்ளாள் ஒரு மாது “பெரிய கண்ணையுடைய பசுவைக் கொண்டுவா” எனக் கூறினாள். நற்சொற் கேட்டு வந்தோர் தாம் கேட்டதைப் படைத் தலைவர்க் குணர்த்தலும் அன்னோர் அதனை அறிவோரால் ஆராய்ந்து நன்றெனக் கொண்டனர்; கொண்டு பருக்கைக் கற்கள் செறிந்ததும் சிள் வண்டுகள் ஒலிப்பதுமாகிய காட்டு வழியே செல்ல வேண்டி ஆர்ப்பரித்துக் காலிடத்தே செருப்புத் தொட்டனர்; முடியிடத்தே வெட்சிப் பூச் சூடினர்; துடி கறங்கிற்று.

இஃதிவ்வாறாக பகைவரது மணிகட்டிய நிரைகள் நிற்கின்ற காட்டிடத்துள்ள காரி என்னும் புள் தனது கடிய குரலால் அவர்க்கு வருங் கேட்டினை முன்னர் அறிவித்தது. அதனைச் செவிக்கொண்ட நிரைகாவலர் தமக்கு நேர்வதோர் ஏதம் உண்டென ஓர்ந்து இமை கொட்டாது ஏந்திய விற்களுடன் நிரைகளைக் காத்து நின்றனர்.

சிங்கக் கொடியையும் கிளியையும் கலைமானையும் பேய்மிக்க படையினையுமுடைய கொற்றவையின் கொடியை முன்னே உயர்த்தியவர் களாய் கூற்றுவர் குழுவினை ஒத்த வெட்சிவீரர், கழுகும் பருந்தும் பின்னே படர்ந்து செல்ல, வில்லாளர் காவல் செய்வதும், மூங்கில் அடர்ந்த மலைச்சாரலிடத்ததுமாகிய மாற்றார் நிரையினைக் கவரும் பொருட்டுக் கடிதேகினர். முன் சென்ற ஒற்றர் பசுக்கள் நின்ற இடமும் அவற்றின்அளவும், அவற்றைப் புறங்காத்து நின்ற படையின் அளவும் ஆராய்ந்து நள்ளிருளில் வந்து சேனைத்தலைவர்க்கு உணர்த்தினர்.

பகைவர் நிலைமையினை நன்கறிந்துகொண்ட வெட்சி வீரர் மூங்கில் செறிந்த மலைச்சாரலிடத்தே செறிந்த இருளிற் பதுங்கியிருந்து தருணம் பார்த்து ஒய் யெனக் கிளம்பி நிரை காத்து நின்ற வில்லாளரை வீழ்த்தி நிரை யினை அடித்துச் சென்றனர். செல்லுமிடத்து நிரையினைப் பறிகொடுத்தார் சிலர். அபிமான மிக்கவர்களாய்ப் பின்தொடர்தலும் அன்னோரைப் பின்ன ணியத்தார் பொருது வீழ்த்த முன்னணியத்தார் நிரைகளை வருத்தமின்றிக் கடத்திச் சென்றனர்.

இஃதிவ்வாறாக நிரைகவர்தற் பொருட்டுச் சென்ற வீரர்களது செய்தியை அறியாத வேட்டுவிச்சியர் கையைக் கன்னத்தே கொடுத்து வியாகுலம் மிகுந்தவர்களாய் இருந்தனர். அஞ்ஞான்று நிரைகள் மன்றத்தே புகுந்தன. இடக்கண் துடிக்கப்பெற்ற வேட்டுவிச்சியர் தமது துன்பத்தைப் போக்கியவர்களாய் “எம்முடைய சுவாமி தலையிலுள்ள மாலை வாழ்வ தாக” என்று வாழ்த்தினர். மாற்றார் நிரையினைக் கவர்ந்து வந்த போர் வீரர்க்கு மரியாதை செய்தற் பொருட்டு ஊரார் மன்றத்தே பந்தரிட்டு ஆற்று மணல் பரப்பி ஆட்டு மாமிசத்தைச் சுவைபெறச் சமைத்துப் பெருவிருந் தளித்தனர்.1

அரசன், போர்வீரர் கொணர்ந்த நிரையினை2 நிமித்தம் பார்த்துத் தப்பா வகை சொன்ன அறிவுடையோர்க்கும், துடி கொட்டும் புலையனுக்கும், பாணிச்சிக்கும், பாணனுக்கும் இன்னும் தமக்கு வேண்டிய பிறர்க்கும் பகுந் தளித்தான்; தமது உயிரைப் பொருட்படுத்தாது பகைவர் ஊரிற் சென்று ஒற்றி வந்தார்க்கும், நிமித்தம் அறிந்து சொன்ன அறிவுடையோர்க்கும் மேலதிக மாகச் சில பசுக்களைக் கொடுத்தான். போர்வீரர் கள்ளுண்ணும்போது செருவிடத்துத் துடிகொட்டிய புலையனுக்குக் கள்ளினை மிகுதியாக வார்த் தனர். ஆபரணங்களை அணிந்த அழகிய பெண்கள் மணம் பொருந்திய மாலைகள் பக்கத்தே அசையும்படி1 வள்ளிக் கூத்தாடினர்.

நிரை மீட்டல்
நிரையினைப் பறிகொடுத்தோர் அபிமான மிக்கவர்களாய் நிரை கவர்ந்தோரைப் பின்தொடர்ந்து அவரைச் செருவிடை வீழ்த்தி நிரையினை மீட்டுக்கொண்டு வருதலுமுண்டு.

பகைவர் நிரைகளைக் கவர்ந்து சென்றனர்; ஆன்காத்து நின்றோரில் இறவாது எஞ்சியோர் சிலர் ஓடோடியுஞ் சென்று தமது வேந்தர்க்கு அவமான மிக்க அச்செய்தியை உணர்த்தினர். அதனைச் செவி மடுத்த வேந்தன் மண்டு தீயென வெகுண்டு முடியிடத்தே கரந்தைப் பூவினைச் சூடினான். போர்வீரர் காலிடத்தே வீரக் கழலைக் கட்டினர்; கூற்றுவரைப்போற் கோபித்துக் கரந்தை மலரை மயிர் மிசை மிலைந்து கொடிய வில்லைக் கையிடத்தே கொண்டனர். போர் செய்தற்கு ஏலாத சிறுவர் வயோதிபர் நோயாளிகளைத் தவிர, ஏனையோர் சங்கும், கரிய வீரக் கொம்பும் மயி லிறகு கட்டிய வாத்தியங்களும் பறையும் ஆர்ப்ப ஒளிவிடுகின்ற வேல் களுடன் கல் நிறைந்த காட்டிடத்தே கூற்றுவரைப்போல் வரிசையாகச் சென்றனர்; செல்லுதலும்2 நிரைகவர்ந்து சென்றோர் பசுக்களை முன்னே செல்லவிட்டு தழைகள் மூடிய காட்டிடத்தே தலைமறைந்திருந்தனர். நிரை மீட்கச் சென்றோர் அவர்களைப் பதுக்கிடங்களினின்றும் வெளியேறச் செய்து அவர்களுடன் அச்சம் தருகின்ற போரைச் செய்தனர். முடிவில் நிரை கவர்ந்தோர் வென்னிட்டனர்; நிரைகள் மீட்கப்பட்டன.

நிரை மீட்டோரிற் சில வீரர் மார்பிலும் முகத்திலும் பட்ட புண்களி னின்றும் உதிரம் பெருகச் சாதிலிங்கஞ் சொரியும் மலையைப்போல் மீண்டனர். விபரமறியாத சிறுபிள்ளைகளை ஒப்பப் பகைவரை வெட்டி வீழ்த்திய பின் நிரைகவர்ந்தோர் முதுகிட்டோடவும் தாம் போர்க்களத்தை விட்டுப் போகாராய்த் தனியே நின்றனர் சில வீரர். தலையறுபட்டு உடற் குறையாய் நின்ற வீரர் சிலர் பிள்ளைத்தன்மை யுடையராய் வாளை உறையி னின்றும் வாங்கிக் கையிலேந்திப் போர்க்களத்தே வீரர்களுடன் நின்று அடிமேலடி வைத்தாடினர். சிலர், பகைவர் மார்பைப் பிளந்த வேல்களை அவர் மார்புகளினின்றும் வாங்கி அவையிடத்தே குடல் மாலைகளைச் சுற்றி துடிகறங்க ஆடா நின்றனர். பகைவர் படை வெள்ளம்போல் வரவும் அதனைக் குறுக்கிட்டு “யானொருவனே தாங்குவனாகப் பிறர் மதுவை அருந்துகின்றனர்” என ஓர் வீரன் புகன்றான்.

போரிடத்தே காரி என்னும் குருவி விலக்கவும் விலகாராய் வீரரை வென்று நிரையை மீட்டு வந்த வீரருக்கு அரசன் மருத நிலம் பலவுங் கொடுத்து வரிசை செய்தான்; சிலருக்கு, 1ஏனாதி காவிதி முதலிய பட்டங்களை அளித்தான். அவ் வரிசைகளைப் பெற்ற வீரர் வேந்தனைப் போற்றினர். ஓர் அரசன் பிறிதோர் அரசனின் மகளைக் கேட்டவிடத்து அவன் கொடுக்க மறுப்பின் இவ் வகையான போர்கள் நிகழ்வது சகசம். இங்ஙனம் பெண் மறுத்துக் கூறுதலை “மகன் மறுத்து மொழிதல்” என இலக்கியங்கள் கூறும். குறிஞ்சி நிலத்தேயுள்ள மறக்குடித் தலைவர்கள் பெரும்பாலும் அயல் நிலத்தேயுள்ள நிரைகளைக் கவர்ந்து வந்து கள்ளுக்கு விலையாகக் கொடுப்பார்களென்றும் இலக்கியங்களிற் கூறப்படுகின்றது.2

வீரக் கல்
நிரைமீட்கு மிடத்துப் பலரும் ஆச்சரியமுறும்படி தமது வீரத்தைக் காண்பித்துப் படைமுகத்தே இறந்த வீரனுக்கு அவனுடைய பெயரும் ஊரும் ஆற்றலும் எழுதிக் கல் நடுவது பண்டைப் போர் வழக்கு. இவ் வழக்கினைப் பின்பற்றியே இறந்தவர் பொருட்டுப் பாடப்படும் பாடல்கள் ‘கல்வெட்டு’ என வழங்குவதாகும். இறந்தவர்களைச் சமாதி செய்து ஆலயங்கள் எடுத்தலும் கல் நாட்டும் வழக்கத்தைப் பின்பற்றியதெனக் கருத இடமுண்டு.

கல் நடுதலின் விபரம்
வீரர் காட்டிற் சென்று இறந்த வீரனுக்கு நாட்டத்தகுந்த கல்லினைக் காண்பர். கண்டு அதற்கு நறும்புகை முதலியவற்றைக் காட்டி, எடுத்து, வாசம் பொருந்திய நீரினாலே மஞ்சனமாட்டி வாவியிலும் முழுக்காட்டுவர். பின் மாலை தூக்கி, மணி ஒலித்து, மதுத் தெளித்து மயிலிறகுஞ் சூட்டி வீரன் பெயரை எழுதி “வேற்போரை விரும்பினோனுக்கு இது உருவமாகுக” என்று கல்லினை அழகுபெற நடுவர். நட்டபின் அக் கல்லின் நின்ற வீரனை எல்லோரும் வணங்கிக் கோயிலமைப்பர். போருக்குச் செல்லும் வீரர் அதனை வணங்கிச் செல்வர். அவ்வழிச் செல்லும் பாணர் யாழினை மீட்டுப் பாடி அக் கல்லினை வழிபடுதல் மரபு.

“கன்றுடனே கறவையையும் மீட்டுக்கொண்டு வந்து மறவரை யோட்டி நோக்கிய நெடுந்தகைக்குச் சிவந்த பூவுடைய கண்ணியுடனே அழகிய மயிலிறகைச் சூட்டிப் பெயரை எழுதி இப்பொழுதே கல்லை நட்டார்.” (புறம் 264.)

“ஊர் முன்னாகச் செய்யப்பட்ட பூசலின்கட் டோன்றிய வீரன் தன்னுடைய ஊரின்கண் மிக்க நிரையைக் கொண்ட வீரர் எய்த அம்பினை விலக்கி வென்று அவர் கொண்ட ஆநிரையை மீட்டான். தோலுரித்த பாம்பு போலத் தானொருவனுமேயாகத் தேவருலகத்தின்கட் போயினான். அவனதுடம்பு காட்டுச் சிற்றியாற்றினது அரிய கரையிடத்துக் காலுற நின்று நடுக்கத்தோடு சாய்ந்த விலங்கினை ஒப்ப அம்பாற் சலித்து அவ்விடத்து வீழ்ந்தது. உயர்ந்த கீர்த்தி மிகவுந் தோன்றிய பெயர் மென்மையமைந்த மயிலினது அழகிய பீலியைச் சூட்டப் பிறர் இடங்கொள்ளப்படாத சிறிய விடத்தும் புடைவையாற் செய்யப்பட்ட பந்தர்க்கீழ் நட்ட கல்மேலது.”
(புறம். 260).

“கெடாத நல்ல புகழினையுடைய பெயர்களை எழுதி நட்ட கற்கள் முதுகிட்டுப்போனவரை இகழும்.” (மலைபடுகடாம்.)

“பட்டார் பெயரு மாற்றலு மெழுதி
நட்ட கல்லு மூதூர் நத்தமும்” (சேரமான் பெருமாள்)
“நல்லமர் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலிசூட்டிய பிறங்கு நிலை நடுகல்” (அகம்)

நடுகல் பெரும்பாலும் வீரவான்களுக்கு நடுவதாயினும் நிரைமீட்டு அவிந்தார் பொருட்டு நடுதலே சிறப்பு.

வஞ்சி (படை எழுச்சி)
தன்னைப் பணியாத அரசனைப் பணிவித்து அவனது நாட்டைக் கைப்பற்ற விரும்பிய வேந்தன், போர்வீரர் மதுவருந்தி விற்போரை விரும்ப முடியிடத்தே வஞ்சிப் பூவைச் சூடினான். சிவந்த வேலைத் தாங்கிய படையின் நடுவே உகாந்த காலத்து நெருப்பை ஒத்த யானையும் மகிழ்ந்து முழங்கா நின்றது. சோதிட நூலார் தெரிந்த நாளிலே, கடல் போன்ற சேனை யினையும், கிட்டுதற்கரிய வலியினையுமுடையராய்ப் பணிந்தெழாத வேந்தர்களுடைய வாணாள் கெடும்படி அரசன் தனது குடையையும் வாளையும் புறவீடு செய்தான். பகைவரது உள்நாட்டில் கோட்டான் குரல் காட்டிற்று.

எட்கசிவும் நெற்பொரியும் அவரையும் துவரையும் நிணமும் குடரும் உதிரமும் நிரம்பிய தாழியைப் போர் வீரர் படையின் முன்னர் எடுத்துச் சென்றனர். விரைந்து செல்லும் நெருப்புப்போலப் போரிடத்து முற்படப் புகும் வீரர் பகைவர் நாட்டை அழித்து வென்றனர். அரசன் வேலை வலமாக உயர்த்தினான். ஆரந்தாழ்ந்த மார்பினையுடைய வேந்தனது கண்கள் சிவந்தன; வண்டுகள் மொய்க்கின்ற மாலையினையும் பொலிவினையு முடைய சிறுவரது அழகிய தேர்கள் ஆரவாரிக்கின்ற நாடு பாழாய்க் கண்டாரிரங்கும் படி கெட்டன. கோயில்களையும் பள்ளி யிடங்களையும் அந்தணர் இல்லங் களையும் நெருங்காது பகைவர் கெட்டோடும்படி பொருதுவென்ற வில் வீரர்க்கு வேந்தன் பல உபகாரங்களைக் கொடுத்தான். பகைவரது வேலை ஏற்றுக்கொண்ட போர் வீரர்களின் மார்புகள் முத்துமாலைகளைப் பூண்டன. வேந்தன் பகைவர் சேனையைக் கிட்டி “யாம் இன்னதன்மையினேம் என்று பிறர் சொல்லுதல் வேண்டா, மாறுபாட்டினையுடைய வேந்தர் கோபித்து என்முன்னே வருவார்களாக;

வரின் அன்னோரைப் பலரும் போற்ற வீர சுவர்க்கத்துக்குப் புதியராய் அனுப்புவேன்.” எனப் புகன்றான். பகைவ ருடைய வாட்படையை வென்று யானையை வெட்டிப் புண்ணுடனே வந்த வனுடைய மகனுக்கு வேந்தன் மருத நிலங்கள் பலவற்றைக் கொடுத்தான். குயில் பாட, ஆளுலாவ, வண்டு ஒலிக்கும் தலைமையையுடைய ஊர்கள், மயிலை ஒத்த மகளிர் வேலை ஒத்த விழியைப் புதைத்துப் பயப்பட்டு அலறிமன்றென்று பாராதே ஓடும்படி நெருப்பால் உண்ணப்பட்டன. பகைவர் சுற்ற மிரங்க, அடிமைகளையும் வயிர அரதனங்களையும் முத்தினையும் பொன்னினையும் வீடுகள் வறிதாகும்படி வில்லாளர் கொள்ளை கொண்ட னர். மகளிர் கலங்கி வயிற்றில் அடித்துக்கொண்டு கெட்டோடும்படி பகைவ ரிடத்துக் கைப்பற்றிய பொருள்கள் முழுவதையும் பாண்கிளைகள் கவர்ந்து கொண்டன.

அரசன் தங்கியிருந்த பாசறையிடத்து மகளிர் கூத்தாடினர்; மேளம் யாழுடன் ஒலித்தது; ஒருபால் கவிழ்ந்த மணியினையுடைய யானை மகிழ்ச்சி மிகுதியால் முழங்கிற்று. பகைவரது அளவிறந்த சேனை நெருங்கி வந்து மேலிடவும் நின்ற நிலையினின்றும் நீங்காத புலியை ஒத்த ஒருவனது வீரம் முத்தியினை அறிந்து எல்லாப்பற்று மற்றோர்க்கும் அற்புதத்தை விளைத்தது. தனக்குப் புறங் கொடுத்து ஓடுவோரைப் பார்த்து “பகைவர் சுவர்க்கலோகம் போதலைக் கருதி எதிர்க்கினல்லது புறங் கொடுத்து ஓடும் போது வீரர் வாளை ஓங்குவரோ’ எனக் கூறினான் ஓர் வீரன்.

கரும்பினையும் காய்ந்த நெல்லினையும் நெருப்பினை உண்ணப் பண்ணுவித்துப் பெரிய நீர் நிலைகள் பலவும் உடைந்ததற் பின்னும் வேந்தன் படை வீட்டில் தங்கியிருந்தான். பெருமை பொருந்திய மன்னர் நடுங்கப் பெரிய புகை ஆகாயத்தின்கண் பரக்க இரண்டாவதும் வேந்தன் தேயமுழு தும் நெருப்பை மூட்டினன். புலியை ஒத்த படைவீரர்க்கு அரசன் பெரிய விருந்தளித்தான். ஆரவாரமுடைய நெருப்புக் கொளுத்தின மலையை ஒப்ப ஓங்கின மாளிகைகளெல்லாம் பேய்ச்சுரையும் பேய்ப் பீர்க்கும் படர்ந்தன.

பகை அரசன் தனது நாட்டகத்தே படை எடுத்து வருதலை அஞ்சிய வேந்தன் திறையளப்பின் அவற்றைப் பெற்றுச் சினந்தணிந்து நாடு செல்லு தலும் அவ்வரசற்கியல்பு. இங்கு கூறப்பட்ட போர் முதலியன பகைவர் நாட்டகத்து நிகழ்வன; நகரத்தன்று.

படைகள் நாட்டைச் சூறை கொள்ளுதல் எரி கொளுவுதல் முதலிய செய்திகள் கலிங்கத்துப்பரணியில் அழகுறக் கூறப்பட்டுள்ளன; அவை வருமாறு:

“கடையிற் புடையொரு கடலொத் தமரர்
கலங்கும் பரிசு கலங்கப் புக்
கடையப் படரெரி கொளுவிப் பதிகளை
யழியச் சூறைகொள் பொழுதத்தே
கங்கா நதியொரு புறமாகப் படை
கடல்போல் வந்தது கடல்வந்தா
லெங்கே புகலிட மெங்கே யினியரண்
யாரே யதிபதி யிங்கென்றே
இடிகின் றனமதி லெரிகின் றனமதி
யெழுகின் றனபுகை யெழிலெல்லா
மடிகின் றனகுடி கெடுகின் றனமென
வலைகின் றனபடை படையென்றே.”

காஞ்சி (இருந்த வேந்தன் வந்த வேந்தனை மதிற்புறத்தே சென்று எதிர்த்தல்)

வேற்று மன்னன் நகர்ப்புறத்தே வருதலும் அவனது வலிமையை அழிக்கவேண்டி எயிலகத்தே இருந்த வேந்தன் முடியிடத்தே காஞ்சிப் பூவைச் சூடினான். செரு முனையிற் பொருவாரைப் பெறாமையால் போர்த் தினவு கொண்டிருந்த போர்வீரர் பூசல் விருப்பால் அணியிட்டு நின்றனர். மார்பிடத்தே வேல் பாய்ந்து சென்ற புண்ணினால் வேலைக் கையினாற் பிடிக்கவும் ஆற்றாத மேம்பாட்டினையுடைய வீரன் செருப்பறை கொட்டும் படி கூறத்துடியன் அது கொட்டா நின்றான். மாற்றரசனின் பரந்த சேனை தங்களெல்லையிற் புகாதபடி புலியை ஒத்த மறவர் காத்து நின்றனர். படை வீரர்க்கு வேந்தன் வேல் வாள் முதலிய படைக்கலங்களை வழங்கினான். அன்னோர் அரசனின் ஆற்றலைப் புகழ்ந்து போற்றினர். மாற்றார் படையின் மீது போர்வீரர் அம்பு மழை பொழிந்தனர். கோபத்தையுடைய யானைகள் பலவும் தினை யரிந்த தாளினையுடைய மலையை ஒத்தன. பகைவருடன் பொரும் பூசல் இன்ன நாள் என்று நிச்சயித்த வேந்தன் தனது குடையையும் வாளையும் புற வீடு செய்தான். “இற்றை நாள் ஆதித்தன்படுவதன் முன் பகைவரை வென்று போர்க்களத்தைக் கொள்ளாத வேலை எடுப்பேனாயின் எந்நாளும் யானிருந்த அரண் கெடத்தாக்கும் பகைவர் முன்னே தாழ்மை யான வார்த்தைகளைச் சொல்லி நிற்பேனாவேன்” என மன்னன் வஞ்சினங் கூறினான். கடலைப் போல் ஒலிக்கும் போர்வீரர் பூசலை ஏற்றுக்கொண்டதற் கடையாளமாக அரசன் வழங்கிய காஞ்சிப் பூவைச் சூடினர். பகைவர் போரினைத் தடுத்துத் தூசிப்படையை எதிர்த்து இறந்தவன், இப் பூமியிற் சிறப்பித்துச் சொல்லும் புகழினை எல்லாம் பெற்றான். பகைவரது தலைமைபெற்ற வீரனுடைய தலையைக் கொண்டுவந்தவர்களுக்கு அரசன் மிக்க பொருளைக் கொடுத்தான்.

போர்க்களத்தே பட்டவனது தலையை அவன் மனைவி பார்த்துக் கொங்கையாற் றழுவினாள்; ஒளி சிறந்த வதனத்தையும் கூட்டினாள்; அவ்விடத்தே வருந்தினாள்; உயிர் மேலே பறிந்தது. கறுத்த தலையையும் வெள்ளை நிணத்தையும் சிவந்த தசையையும் பருந்துங் கழுகும் இழுத்துக் கொண்டு செல்லும்படியாக வேந்தன் பூசல் விளைத்தான். பகைவரது மாறுபாட்டைப் பொறானாகி வேல்பட்ட தனது மார்பின் புண்ணைக் கிழித்து இறந்தான் ஒரு வீரன்.

பெண்பேய் அச்சந்தரும்படி உதிரமாகிய புலாலிடத்துக் கிடந்து அழல நோக்கும்; வீரரைப் பார்த்துச் சுழலும்; நீளும்; குடர்மாலையைச் சூடித் தன்னுள்ளம் விரும்பிச் சிரிக்கும்; போம். அகன்ற இல்லிலே கணவனுடைய புண்ணைமனைவி பரிகரிக்க நான்ற முலையினையும் பெரிய வாயினையு முடைய பேய்மகள் அவனைக் கிட்டி இருளின்கண்ணின்று கோபித்துப் பார்த்து நெருப்பைக் கக்கிக் கிட்டப்போய் பகைவர் ஆயுதம் பிளந்த தீராத புண்ணைத் தீண்டினாள். அவன் உயிர் பறிந்தது. இன்னோர் வீரனது புண்ணை வெண்சிறு கடுகு தூவிக் குங்கிலியம் முதலிய நறுநாற்றத்தைப் புகைப்பித்துக் குறிஞ்சிப் பண் பலவற்றைப் பாடி மலரிட்டு மனைவி பரிகரிக்கப் பேய்மகள் அஞ்சி விலகினாள். பூமியிலுள்ளார் மயங்கப் பூசலுக்குத் தெப்பமனையவனும், தன் பதிக்கும் பூமிக்கும் ஓருயிரை ஒப்ப வனும் உயர்ந்தோர்க்குத் தாணு ஒப்பவனும் வீரசுவர்க்கத்தை எய்தினான். தறுகண்மை மிக்க வீரர்க்கு களித்தாடும்படி மன்னன் வெவ்விய கள்ளைக் கொடுத்தான். சக்கரத்தாலேபட்ட புண்ணால் ஆவி இகந்த தனது கணவ னோடு தானும் நெருப்பிலே விழ வேண்டி மகரக்குழையை அணிந்தவள் தோழிமாரை “அகலப்போமி” னென்று கூறினள். ஒருத்தி தனது தலைவனது மார்பைப் பிளந்து உயிரைப் போக்கிய வேலால் தனது உயிரை ஒழித்தாள். மகட்கேட்ட அரசனது வேண்டுகோளைச் சினமிக்க மன்னன் மறுத்துரைத் தான். வீரக் கழலினை யுடையவன் வெற்றிக் கொடியான் மிக்க யானைகளை ஏவிப் பகைவரைச் செருப்புலத்தினின்றும் துரத்தினான்.

“தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்கு மருப்பியா ழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழுதிழகி
யையவி சிதறி யாம்ப லூதி
யிசை மணி யெறிந்து காஞ்சிபாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ” (புறம். 281)

நொச்சி (மதிற்புறத்தே சென்று பொருதிய காஞ்சியார் எயிலகத்தே சென்று மதிலைக் காத்தது)

கூரிய வேலினையுடைய போர்வீரர் நொச்சிப் பூவைக் கொண்டை யில் மிலைந்து சிவபெருமான் அழித்த திரிபுரத்தைக் காக்கும் அவுணரை ஒப்பத் திங்கள் ஊரும்படி உயர்ந்த மதில்களினின்றும் மலைந்தனர். மாற்றாரது போர் வீரர் பலர் வீரசுவர்க்கம் ஏகினர். சங்கும் கொம்பும் முழங்க வாள் வீசிக் காவற்காடு அழியும்படி காவலைக் கெடுத்த பகைவர் சேனை கெடும்படி மதிலிடத்து வீரர் பொருது ஆர்த்தனர். முட்செடிகள் பின்னிய காவற்காட்டையும் சிவந்த பூவுடைய பெரிய அகழியினையுங் காத்து நின்ற சிங்கமொத்த வீரர் மடிந்தனர். பரந்த மார்புகளினின்றும் உதிரம் பெருகிய விடத்தும் எயிலகத்தே உள்ளார் வெளியே சென்று பகைவரைக் கொல்லுதலை விரும்பினார்கள். வீரக் கழல் பொலிந்த வலிய கால்கள் அரணின் உள்ளே வீழ்ந்தன; போரினைச் செய்யும் திண்ணிய தோள்கள் மதிலின் புறத்தே வீழ்ந்தன; தெய்வ மகளிர் கொண்டாட போர்வீரர் வீரசுவர்க்கத்தை அடைந் தனர். கிடுகுப் படையாரை வென்று பகைவர் எதிர்த்தனர். அவர்கள் மதிலிற் காலிடாதபடி மதிலின்மேல் நின்றவீரர் பிணங் குவியும்படி வாளோச்சி வெட்டினர். கரிய கண்ணினை யுடையவளது கட்டிலின் கால்கள் மாற்றரச னின் இளைய யானையின் தந்தத்தினால் செய்யப்பட்டன.

உழிஞை (மதிற்புறத்தே நின்று பொருத வஞ்சியார் மதிலை வளைத்துக் கைப்பற்றி நகரைப் பாழாக்கியது)

மட்டஞ் செய்த மாலையை அணிந்த வேந்தன் முடியிடத்தே உழிஞை மாலையை அணிந்து கொடியசையும் பகைவர் கோட்டையைக் கைப்பற்ற நினைந்தான். நினைந்து கோட்டையைக் கைப்பற்ற ஓர் நல்ல நாளை நியமித்து குடையினையும் வாளினையும் புற வீடு செய்தான். (மலர் மாலை யணிந்தவனது வீர முரசம் மழைபோல் முழங்க வெற்றியையுடைய யானை குத்தக் குலைந்து வீழாத மதிலுமுண்டோ) ஆழ்ந்த கிடங்கினையும் மேகந் தவளும் ஞாயிலையுமுடைய மதிலைக் கைப்பற்ற விரும்பிப் பிரகாசிக்கின்ற வேலினையுடைய வேந்தன் வெற்றிக் கொடியையுடைய படையை ஒன்று சேர்த்துக்கொண்டு புறப்பட்டான். செல்வத்தையும் வெற்றியையுமுடைய அரசனுக்குக் கைகூடாதன இல்லை. சிவந்த சடையை யுடைய சிவபெருமானும் உழிஞையைச் சூடித் திரிபுரங்கள் மூன்றையுஞ் சுட்டான்;

ஆதலின் உழிஞையின் பெருமையை அறிபவர் யார்!
வீரக் கழலை யணிந்த அரசன் பகைவர் புகுமிடமும் ஓடிப்போகு மிடமுமின்றி பகைவர் எயிலை வளைத்து அவரது அரணத்தின் பக்கத்தே பாடி வீடு கொண்டிருந்தான் (மாயப்போர் செய்யவல்ல வேந்தனது மதிலை மயிலின் கணத்தை ஒத்த மகளிர் மதுத் தெளிவை ஊட்ட வீரக்கழலணிந்த உழிஞையார் விழி நெருப்பைச் சிந்த, அரணிடத்துள்ளார் பலரும் படப்பூசல் செய்தாலும் வெற்றிபெறுதல் அரிது.) “நிலைநின்ற கீர்த்திபோக நிலையில் லாத உயிரைக் காத்து இற்றைநாளிலே நாம் இவ் வெயிற்புறத்துத் தங்குவது நமக்குத் தாழ்வு; பகைவர் குறும்பினைக் கைப்பற்றவேண்டில் கிடுகுப்படை யார் கொள்ளல் எளிது” என்று அரசன் கூறினான். போர் யானைகள் கணைய மரங்களை மருப்பினாலே பெயர்த்துக் கதவுகள் ஒடியப்பாய்ந்தன. உழிஞை யாருடைய வாள்கள், காவற்காட்டிடத்தே பொரும்வீரர்கள் வென்னிடும்படி அவர்கள் மார்புகளிலே தங்கின. பரிசையினை எடுத்துச் சூழ்ந்து நின்றாடு தலை விரும்பிய உழிஞைவீரர், இயந்திரங் களமைந்ததும் பதுக்கிடங்களு முடையதுமாகிய மதிலின் நெற்றியிலே மலையிடத்துச் சென்று புகும் புட்களை ஒப்பக் கடுகிக் கிட்டினார். (ஆளைப் பற்றும் முதலையினை யுடையகுழிந்த அகழிடத்தே வாளினையுடைய மன்னன் வந்து விட்டான்; வளையலணிந்த பெண்கள் பெருமூச் செறியும்படி மதிலிடத்தே வெல்லு தற்கரிய போர் நிகழும் போலும்) சிவந்த மலர் நிறைந்த கிடங்கிலே ஓடமும் ஒருமுகத் தோணியுங்கொண்டு போர் செய்தனர். இரத்தஞ் சொரியும்படி அம்புகளாற் துளைக்கப்பட்டோர் அகழின்கண் மாண்டனர். குதிரைப் படையினையும் யானைப்படையினையுமுடைய உழிஞையாரை இடங் கணியும், அரவும், நெருப்பும், கடிகுரங்கும், வில் இயந்திரமும், அயிலும் இவையனைத்தும் உட் புகுதாதபடி விலக்கவும், அவர் அரணிடத்துப் பல ஏணிகளைச் சாத்தினர். சாத்திச் செங்கல்லாற் செய்த உயர்ந்த மதிலைச் சூழ்ந்து நீங்காராய் வேல் மார்பிலே பட்டு உருகிப்போக இறந்தார் அல்லாத மற்றையோர் பாம்பும் உடும்பும் போல ஏறினர். உயர்ந்த மலை உச்சியி னின்றும் இரையைப் பூமியிலே கண்டு பாயும் பறவைக் கூட்டம் போல முழவெனத் திரண்ட தோளையுடைய வீரர் அரணிடத்துப் பாய்ந்து இழிந்து ஆரவாரித்தனர்.

சிவந்த கண்ணினையுடைய வீரர் மதியை ஒத்த வதனத்தையுடைய மகளிர் அலற உயர்ந்த மதிலிலுள்ளாரை வென்றனர். விடியற்காலையில் அரணின்கண் முரசு ஒலித்தது. வெற்றியை விரும்பிய வேந்தன் மாலைப் பொழுதே சோறடுவோமென்று அரணினுள்ளே அகப்பையை எறிந்தான். பகைவர் யானையையும் தோட்டியையும் அவன் கைப்பற்றினான். 1சித்திர மெழுதிய அழகிய மாளிகை முழுதும் இடித்துக் கழுதையே ஏராகவும் கையில் விளங்கும் வேலே கோலாகவும் உழுது கவடியும் குடைவேலும் வேந்தன் வித்தினான். இரத்தக் கறையுள்ள தனது வீரவாளை தீர்த்த நீரும் மலருஞ் சொரிந்து மஞ்சனமாட்டி அரணிடத்தே களவேள்வி வேட்டான். அவன் தன்னைப் பணியாத வேந்தனின் மகளை வதுவை செய்தான்.

மாற்றார் திறை அளக்க கொற்றவேந்தன் அதனைப் பெற்றுத் தனது நாடு திரும்பினுந் திரும்புவன். அன்றேல் பகைவர் நாட்டில் சிறிது காலந் தங்கித் தனது ஆணையை நாட்டிச் செல்லினுஞ் செல்வன்.

தும்பை (போர்)
குற்றந் தீர்ந்த புகழினையுடைய மன்னன் போர்க்களத்தே ஒழுகுங் குருதி சூழ்ந்த பூசலை நினைந்து முடியிடத்துத் தும்பைமாலையைச் சூடினான். அவன், போர்வீரர்க்குப் போர் வெல்லும் அடையாளங்களையும் (பட்டங்களையும்) சிறு நாடுகளையும் மருத நிலத்தையும் கொல்லும் யானையையும் குதிரையையும் கொடுத்து அருள் செய்தான். பிரகாசிக்கின்ற வேலினையும் தலைமையினையுமுடைய கடல் போன்ற சேனை பகைவர் அஞ்சும்படி சென்றது. மாலையணிந்த அரசரது தசையினையும் உயிரையும் உண்ண வேண்டிக் கடல் போன்ற சேனையுள் கழுகும் கூற்றும் தன் பின்னே செல்ல யானை வெகுண்டது. பகைவரது சவளப்படையும், விற்படையும், வேற்படையும் வந்த வகையறியாது செய்யும் வாட்போரிடத்து அரசனது குதிரை வில்லிற்றொடுத்த அம்புபோல் வந்தது. “பகைவருடைய தூசிப் படையை ஒளி பொருந்திய வாளுடன் யான் நின்று தடுப்பின் அது சிறிய விளக்கின் முன் பெரிய இருளைப் போல் இரிந் தோடும்” என்றான் ஓர் வீரன்.

அரசன்மீது சென்ற மலையை ஒத்த யானை வேல் வீரன் கைவேல் படுதலால் கருமுகில் போலக் கீழ்மேலாய் வீழ்ந்தது. அரசனது அழகிய தேர் பிணத்திரளின்மேல் ஊர்ந்து உதிரவெள்ளம் தேர்க்காலைத் தொடர வரா நிற்கும். தம் மனைவியும் தாயும் சிறுவரும் அறியாது யானையை எறிந்து போர்க்களத்துப்பட்டோர்க்குப் பாணர் பறந்தலையிலே நெருப்பை மூட்டிச் சாப்பண் பாடினர். அவ் வீரர்க்குச் சுவர்க்கத்துள்ளார் நல்ல விருந்தைச் செய் தனர். போரிடத்துக் காலாள் வெள்ளம் இரிந்தோடவும் தான் போகானாகி வாட்படை நெருங்கி வரத் தறுகண் வீரன் அழல்போற் கோபித்து யானைப் பிணத்தின் நடுவே நின்றான். சிவந்த கண்ணினையுடைய மறவன் தோளே கொம்பாக மதர்த்த எருமை யேறுபோலக் கை வேலை யானைமீது எறிந்து மேல்வரும் படையை விலக்கி நிராயுதனாய் நின்று வெற்றிகொண்டான். பகைவர் மார்பை உருவின வேலைக் கையிலே கொண்டு, வீழ்ந்த குடரைச் சூடிஆடும் சுழலும்விழியையுடைய பேயினைப்போல் ஆடுதலை விரும்பி னான் ஓர் வீரன்.

(வீரக் கழலணிந்த வீரன் தன் மார்பைப் பிளந்த வேலைப் பறித்துக் கையிடத்தே கொண்டான். வேந்தர் கதி இனி என்னாமோ.) அரசனது தேரிலே நாட்டிய கொடிகள் மின்னலைப்போல் அசைந்தன. பாணிச்சியரும் வீரரும் தேரின் பின்னே ஆடினர். நிணத்தைக் கொண்ட வாயினையுடைய பேய் அரசனது தேரின் முன்னும் பின்னும் சாயைபோல் ஆடிற்று. ஆனையை எறிந்து அதன் கீழ்ப்பட்ட வேலையும் வீரக்கழலையுமுடைய வீரன் மலை பறிந்து வீழ அதன் கீழ்ப்பட்ட சிங்கத்தை ஒத்தான். பகைவர் சேனை மடிந்து கிடக்கும் கொலைக் களத்தே வாள்வீரர் அரசனுடனே வாளை அசைத்து ஆடினார். பகைவரது வலியைக் கவனியாதும் வாளை உறையினின்று எடாதும் யானைவீரர்க்கும் தேர் வீரர்க்கும் குதிரைவீரர்க்கும் நிலைத்தூண்போல் களத்தே நின்றான் ஒரு வீரன். வேற் போரிடத்து உயிர்நிலையான எவ்விடத்தும் வேல்தைப்பச் சிவந்த கண்ணினையும் புலால் நாறும் வாளினையுமுடையனாய் நிலத்தில் விழாது நின்றான் ஒரு வீரன். இளமையினையுடைய குலமகளிர் தங் கணவரின் அம்புபோழ்ந்த புண்ணுடைய மார்பைத் தழுவினர். வளையலணிந்த மனைவியர், பகைவர் வாளாற்றுணிபட்ட வெற்றிச் சிங்கத்தை ஒத்த கணவரைப் பார்த்து உள்ள மகிழ்ச்சியால் கண்ணீர் விட்டனர்.

வேந்தன் விண்ணுலகடைந்தானாக வீரன் வாட்போரிலே உயிரை விட்டான். வேலையுடைய வேந்தரிருவரும் போர்க்களத்துப்பட்டனர். அவர் தேவியரெல்லாம் கடிதாயெழும் தீயிற் குதித்தார்; இதனினும் கொடுமையுண்டோ! கூற்றத்தின் வயிறு நிறைந்தது..

வாகை (வெற்றி)
கடல்போன்ற சேனையினையுடைய அரசனைக் கொன்று வேந்தன் இலை விரவித்தொடுத்த வாகைமாலையைச் சூடினான். வேந்தன் வாள் வீரரை நோக்கி, “இனிமேல் துயரமில்லை, போரிடத்து வேல்பிளந்த சீரிய புண்கள் இத்தன்மையாயின; வீரக்கழலினையும் மாலையினையும் கச்சினையும் அணிமின்” எனக் கூறி அவற்றை அளித்தான்.

பூமியினை வேந்தன் காக்கின்றான். இவன் காத்தலால் பல்லுயிர்க்கும் மகிழ்ச்சி ஒழியாது. அவன் ஓதல் வேட்டல் ஈதல் படைக்கலம் பயிற்றல் பல்லுயிரோம்பல் என்னும் ஐந்தொழிலினையும் நான்கு வேதத்தையும் மூன்று தீயினையும் இரு பிறப்பினையும் பகைவரிடத்துத் தறுகண்மையையும் குளிர்ந்த அருளினையு முடையன். படை எழுச்சிக் காலத்து இடிபோன்று முழங்கிய முரசு அரசனது உயர்ந்த மாளிகையிடத்து ஓசையைச் செய்தது. அச்சந்தரும் போர்க்களமாகிய பெரிய வயலுள் பகையாகிய விதையை விதைத்துக் கீர்த்தியை விளைக்கும் வேலாகிய கோலினையுடைய உழவன் (அரசன்) காத்தலால் எம்போல்வாரிடத்து வறுமையடையாது. மகுடத்தலையாகிய மிடாவில் தோளுடனே வெட்டுண்டு வீழ்ந்த தோள் வளையுடைய கை அகப்பையாக மூளையாகிய அழகிய சேற்றை முகந்து, பிறழ்ந்த பற்களை யுடைய பேயுண்ணும்படி கொடியோடுகூடிய மன்னன் வழங்கினான். பகை மன்னர் நடுங்கும்படி வெட்டிக் களவேள்வி வேட்டவனது முரசு முழங்க வென்ற தேரின் முன்பு “அழியாத நன்மையைச் செய்தவன் நெடுங்காலம் வாழ்வானாக” எனச் சொல்லி பறட்டை மயிரினையுடைய பேய் கூத்தாடிற்று. வெற்றி வீரரும் இனிய மொழியையுடைய பாணிச்சியரும் கைகோத்து நின்று அரசனை வாழ்த்திக் கூத்தாடினர். நான்கு வேதத்தையும் உணர்ந்த அந்தணர் யாகங்களை இயற்றி அரசனது வெற்றியைச் சிறப்பித்தனர்.

உழுது அதன் பயன் கொண்டு, ஆநிரையை ஓம்பிக் குற்றமில்லாத பண்டங்களை விற்று நான்கு வேதம் முதலியவற்றைக் கற்று, அழலோம்பி, பொருளைச் சீர்தூக்காது கொடுக்கும் கொடையான் முதல் வணிகர் எல்லார்க் கும் தலைமையுடையர். முற்கூறிய மூவர் ஏவலையு மேற்று நீதிநூல் வழி ஒழுகி கழனியை உழுபவன் பூமியிலுள்ளார்க்கெல்லாம் உயிரெனத் தக்கவன். அறிவான் மிக்கோர் சூடாறிய பின்னல்லதுசாம்பர் பூத்ததழலைக் கையில் ஏந்தார்; அதுபோல, கடல்போன்ற சேனையுடையேம் யாமென்று மதித்துப் பகைவரை இகழார் மேலோர். நாகலோகம் பூலோகம் சுவர்க்க லோகம் என்னும் மூன்று லோகத்தினுமுள்ள இருளைப் போக்கும் சூரியனைப் போல இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் மூன்று காலத்தையு மறிதலால், தம்மில் தாம் மாறுபட்டுப் பால் புளித்துப் பகலிருண்டு மாறுபடினும் சான்றோர் மெய் மொழிகள் எக்காலத்தினுந்தப்பா. துறவோர் நீரில் பலகால் மூழ்கி வெறுநிலத்தில் படுத்து மான்றோலை ஆடையாக உடுத்து சோர்ந்த சடை வீழத் தீயோம்பி ஊரிடத்துச்சேராராய் காட்டிலுள்ள கீரைகளையும் மூலங்களையுங் கைப்பற்றித் தெய்வத்தையும் விருந்தையும் போற்றுவர்.

கொடியசையும் தேரினையுடைய அரசன் கவர்பட்ட தெருவில் வீரர் தழையாற்பண்ணின கூரையுடைய பாசறையிற் றங்கியிருக்கும் மனைக் கிழத்தியை அணைதலை நினையான். அவன் வாடைக்காற்று வருத்தத் தலைவியின் தோளைச் சேர விரும்பிப் பாசறையின்கண் இருந்தான். மயிர்க் கண் முரசு ஒலிப்ப ஆதித்தனை ஒப்ப நாவலந்தீவின்கண் எல்லாவுயிர்க்கும் செங்கோல் செலுத்தல் அரசனுக்கு முறைமை. புகழினையும் முத்தியினை யும், நான் மறையையுமுடைய அந்தணன் சந்துசெய்யச் சென்றானாகில் மன்னர் பகை தணிந்து மீள்வர்.அரசனது அவைக்களத்துள்ள சான்றோர்கள் வினாவையும் விடையையும் கவனித்து நடுவு சொல்வர். சோதிடவர் சோதிட நூல் உணர்ச்சியால் இப்புவியில் நிகழ்பவை எல்லாவற்றையும் நிச்சயித்துக் கூறுவர். மறக்குடியிற் பிறந்தவள் தங்கள்மேல் எடுத்து வந்த சேனையைப் பொறாளாய் பிள்ளை வாயின் முலையை வாங்கி முன் பகைவரைக் குத்தி வளைந்த வேலின் வளைவை நிமிர்த்தி தன் மரபிலுள் ளோர் நடு கல்லைக் காட்டிப் பிள்ளையைப் பூசலுக்குப் போவாயென்றாள். மறக்குடியிற் பேதை யானவள் “கல்லிலே பொருந்தி நின்றான் என் தகப்பன், என் கணவன் போர்க்களரியிலே பட்டான்; பகைவர் முன்னே நின்று எதிர்த்துப் பூசலிலே விழுந்தார் என் தமையன்மார்; தன் சேனை கெடவும் கெடாதே பின்னின்று தன்கை அம்பைச் செலுத்தவும் பகைவர் மேலே சென்று எய்பன்றி போலக் கெட்டுக் கிடந்தான் என்னுடைய மகன்” எனக் கூறி மகிழ்ந்தாள். பகை அரசனது மார்பிடத்தே வாளழுந்தப் போர் செய்த வனது வீட்டின் முன் வேட்டையாடும் சிறு பிள்ளைகளின் எதிரே முயல்கள் பாயும்.

வேந்தன் நாடு காத்தற்றொழிலை ஒரு நாள் தவறினும் பிறப்பு முதலிய எண்வகை இயல்புடைய பெரியோர் தன்மை நிலைபெறாது. மன்னுயிரைக் காத்து ஆறிலொரு கடன் பெற்று அதனைப் பிறர்க்கும் கொடுத்துண்டு சுவர்க்கத்தை எய்திய பிதாவின் நெறியை மன்னன் மேற்கொண்டான்.

வாட்சேனை உடையும்படி வென்று மத் தவாரணங்கெட்டோடும்படி வேந்தன் போர்க்களத்தைக் கொண்டான். வேந்தன் வீரனுக்கு அவன் விரும்பியதைக் கொடுக்கவும் அவன் அவற்றைக் கொள்ளானாகி உயர்ந்த வார்த்தை பலவற்றைச் சொன்னான். கீர்த்தியையுடைய வேந்தனது குடைக்குப் போர்வை ஆகாயம்; இலங்கும் பகுதி மேல்வட்டம் மேகம்; எதிரே சொரி யும் நீர்த்தாரை, சூழத் தூக்கப்பட்ட முத்துகளாகும்; சந்திராதித்தர் வழங்கும் மாமேரு காம்பாகும். இயமனை வருத்தும் வேலினையுடைய வேந்தனது வெண்கொற்றக் குடைக் கீழ் உலகம் தங்குதலால் அவனது கண்கள் கோபித் தலின்றி உறங்கின. வாட் பூசல் என்னும் நெருப்பிலே வீரர் செஞ் சோற்றுக் கடனாகிய பிராணனென்னும் அவியைக் கொடுத்தார். அவ் விடத்து வீரர் கிட்டுதற்குரிய வீரசுவர்க்கமுள்ளது. சங்கு போன்ற சான்றோர் தூய்மை வானத்து விளங்கும் நிறைமதி ஒப்பநிலை பெறுவதல்லது, மரக் கலம் பிளந் தோடும் குறையாத கடலிடத்துப் பல பொருளினைப் பெறினும் மாறு படுமோ.

கிணைப் பொருநன் ஆமையின் வயிறு போன்ற கிணையின் மாசைத் துடைத்து ஏர் வாழ்கவென்று சொல்லி நெற்போரையுடையவனது செல்வத்தை வாழ்த்த எங்கள் மிடி நீங்கும். இனி மூப்பும் ஆம்; இளமையும் கழிந்தது; நோய் தாமும் இனிமேல் வரும்; பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் மேற்கொள்ளச் சீவியாது விசேஷமாகிய பஞ்ச விருத்தியை நல்லறிவு செய்வ தாக. சரீரம் அழிவதற்குமுன் நன்னெறிக்கண் செல்லுதல் உறுதியுடைத்து. (வாகைத் திணையின் கண் பற்பல தொழில்கள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.)

பாடாண்
(ஒருவனுடைய கீர்த்தி, வலி, கொடை, தண்ணளி முதலியவற்றைப் பரிசில் வேண்டிய புலவன் ஆராய்ந்து சொல்லுதல்.)

பூவாற் றொடுத்த மாலையினையும், அழலும் சினத்தையும் வேற்படையையுமுடைய எம்முடைய அரசன், அரசர் பலர்க்குஞ் சிங்கம்; அந்தணர்க்குப் புகழ்மாலை; அன்ன நடையினையுடைய மகளிர்க்கு நிறைந்த அமிர்தம்; இரவலர்க்கு மழை என் வேந்தனின் தண்ணளியையும் கொடையையும் புகழ்ந்து சென்ற புலவன், வாயில்காப்போனை நோக்கி, “கொடி உயர்ந்த மதிலின் வாயிலிடத்துள்ளவனே! என் வரவை அரசற்குச் சென்றுணர்த்துவாய்” எனப் புகன்றான். வாயில் காப்போனால் அனுமதி பெற்று உட்சென்ற புலவன் வேந்தனைத் திருமாலோடு உவமித்துப் புகழ்ந்து, “எங்கள் தரத்தினை நினையாது மகிழ்ந்து போர்க்களத்தே பகைவரிடத்தி னின்றும் கைப்பற்றிய யானைகளையும் திரவியங்களையும் மழைபோல் வழங்குஞ் சீரிய வேந்தே! முல்லைக்கு பொற்றேரும் மயிலுக்கு மணிப்போர் வையும் உலகத்திலே புகழ் விளங்கும்படி கேளாதே கொடுத்த உபகாரிகளை ஒப்ப நீயும் ஒளியாது பரிசில் வழங்கல் கடன்” எனப் புகன்றான்.

பகைவரை வென்று செங்கோல் செலுத்திப் பூமியிடத்தே கொடு மையை நீக்குதலால் துயில்கொண்ட வேந்தனை “பூமியிடத்துள்ள அரசர் திறை அளக்க வந்து நிற்கின்றாராதலின், வேந்தே! தாமரை மலரை ஒத்த கண்களை விழித்துத் துயில் ஒழிக” எனக் கூறிப் பாணன் துயில் எழுப்பினான். துயில்விட்டெழுந்த அரசன் முன்னே பாணன், “பகைவர் சுவர்க்கத்தை விரும்பின் உன்னோடு மாறுபடுவர்; உலகை ஆள விரும்பின் உன்னை வணங்குவர்” என மங்கலங் கூறினான்.

காற்று வீசுமிடத்து விளக்கு வலமாகச் சுழன்று வேந்தனது வெற்றியை அறிவிக்கும். ஆதித்தன் முன் ஆகாயத்தின்கண் விளங்கும் நட்சத்திரங்கள் ஒளியின்றி மறைந்திருப்பதுபோல கொடியுடைய தேர் வேந்தன் முன் அரச அவையிடத்து வேந்தர் திரள் ஒளி மழுங்கிற்று. காவல் முரசம் முழங்க வேந்தன் பசுத்திரளை மணியுடனும் பொன்னுடனும் அந்தணர்க்குத் தானம் பண்ணினான். அழலாகிய நாவினால் தேவர்கள் அவியை அருந்தும்படி அரசன் யாகம் வேட்டான். ஆகாயத்திலுள்ள வெள்ளி ஒளிவிடும்படி மேகம் நாட்டில் மழை பொழிந்தது. வெற்றி வேலையுடைய அரசனது நாடு 1எட்டு இடர் ஒழிந்தது. கழனியில் நீலோற்பலம் கண்போல் மலர்ந்தது. வயலாமையினது வயிற்றை ஒத்த கிணையை உபகாரியின் தலைவாயிலிற் கொட்டி, “யானை வாழ்வதாக” என்று கூறுவதன் முன்னே என்னிடத்தினின் றும் துயர் ஒழிந்தது. (கிணைப்பொருநன் கூறியது) வேந்தே! முற்றிய மதுவை விலைக்கு விற்குமவள் அதன் விலைக்கு பருந்துகள் திரண்டு சிறகடிக்கும் போர்க் களரியில் யாம் விரும்பிக் கைக்கொண்ட யானைகளை விரும்பாள்.2 அரசர் நின்று வாழ்ந்த வெற்றி வேந்தன் சிங்காசனத்தின்மீது நாவலந் தீவுக்கு வேந்தனாகிச் செம்மாந்திருந்தான்.

பூமியிலுள்ளோர் வாழ்ந்த அவன் தன் மயிர்ச்சிகையைக் கூட்டி முடிந்தான். அரணினை யுடைய வேந்தன் வேய் போன்ற தோளினையும், கூரிய பல்லினையும், சிவந்த வாயினையுமுடைய காமவல்லியனையாளை மணமாலைசூட்டினான். அவனுக்குச் சிவந்த வாயினையும், பெரிய கண்ணினையுமுடைய மைந்தன் பிறந்தமையால் தேவுக்கள் மகிழ்ந்தனர்; பகைவர் மாறுபாடொழிந்தனர்; பூமியிலுள்ளார் வாழ்த்தினர். அவனது (அரசன்) பிறந்த நாளில் இரவலர் யானையும் பொன் னும் பெற்று மகிழ்ந்தனர்; பகை வேந்தரும் சங்கு வளை அணிந்த பெண் களின் மார்பை விரும்பி இந் நாளிற் படைஎடாரென்று அரணங்களிற் கதவுத் தாழ்களை தாமே நீக்குவர். குதிரை பூட்டிய தேரை அரசன் இரப்போர்க்கு வழங்கிய பின் விடை யளிக்கத் தாழ்ந்தான்; இரவலர் பரந்து நின்ற தோற்றம் பகைவர் நாட்டில் கடல் போன்ற சேனை பரந்து நிற்பது போன்றது. முடி மன்னர் பணியும் பாதங் களையுடைய அரசன் யானை, தேர், குதிரைகளைப் பாணர்க்கு வழங்கிப் பின்னே (ஏழடி) சென்று விடையளித்தான். விருந் தினரை வருக வென்று சொல்லும் புண்ணியத்தையுடைய வேந்தன் உயிர் களை மகிழ்ச்சி பெறக் காத்தலால் நிலையாகிய புகழோடு அவன் நெடுங் காலம் வாழ்வானாக.

யாழ்வல்ல பாணனே! எங்களை ஒப்ப யானை இயங்கும் காட்டைக் கழிந்து அரசனை அடையின் பொற்றாமரை மலரை அவன் நின் தலையிற் சூட்டுவான் (பாணாற்றுப்படை) கொல்லுஞ் சிலை போன்ற புருவத்தினை யுடைய வஞ்சிக்கொம்பன்ன விறலியர் நிருத்தத்துக்குத் தலைவனே! மேகத்தை வென்ற கொடையுடையவன் வழங்குஞ் செல்வத்தைத் தொகுத்துக் கொள்வதற்குத் தவறாது செல்வாயாக (கூத்தராற்றுப்படை). தெருவிலே சுழன்று திரியும் கிணையினையுடைய பொருநனே! போரை விரும்புவோனிடத்துச் செல்வையாகில் உயர்ந்த களிற்றின் நிரையைப் பெறுவாய் (பொருநராற்றுப்படை). வளையுடைய கையினையும் சிவந்த வாயினையுமுடைய பாண்மகளே! போரிற் சிறந்தவனது கீர்த்தியை வாழ்த்திப் போவாயாயின் அவையின் கண்ணுள்ளோர் புகழ ஆபரணத்தைப் பூண்டு மலர்ந்த மல்லிகையை ஒப்பப் பொலிவு பெற்று இப் பொழுதே மீள்வை (விறலியராற்றுப்படை) வெல்லுகின்ற சேனையையுடைய மன்னன் எம் முடைய வார்த்தையை எள்ளாது ஏற்றுக்கொள்வானாயின் பகை இரிந் தோடக் கடல் சூழ்ந்த பரந்த உலகத்தை அங்கையிடத்தே கொள்வான். (வாயுறை வாழ்த்து) மாலை வேந்தே! வேதியர் சான்றோர் அருந்தவத்தோர், தகப்பன், மாதா முதலியோர்க்கு முன்னோர் செய்த முறையில் நின்று, பின்பு ஞாலத்து வார்த்தையைக் கேட்பது வழக்கு (செவியறிவுறூஉ) அரசனது உயர்ந்த கொற்றக்குடை தன்னுடைய நிழலில் வாழ்பவர்க்கும் குளிர்ந்த நிறைமதியாகும்;

பகைவர்க்குக் கொடிய வெய்யிலாகும். தேன் மலரும் சுருள், குரல், அளகம், துஞ்சுகுழல், கொண்டையென்னும் ஐந்து பகுதியாயமைந்த கூந்தலையுடைய பெண்கள் அகன்ற மாளிகைகளிலிருந்து அரசனது உயர்ந்த வாள் வெற்றியை வேண்டிச் சினம் அழலும் மன்னன் கங்கை நீரை ஒத்த தீர்த்தத்திலே மங்கல நீராடினான். போர்க்களத்தே பகைவரை வென்ற மன்னவனே! கடல் சூழ்ந்த வையகத்தில் இந்திரியங்கள் ஐந்தையும் வென்று படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னும் ஆறினையும் பெருக்கி1 ஏழினையுங் கடிந்து இனிமையுற்று நெடுங் காலமிருப்பாயாக. வழிபடு தெய்வம் நின்னைக் காப்ப நாவலந்தீவிடத்து மாமேருவைப்போல நிலை பெறுவாயாக. பல யானைகளையுடைய வேந்தர் வணங்கக் குளிர்ந்த மாலை யணிந்த வேந்தனது வீரக்கொடி திருமாலின் கருடக் கொடிபோல் உயர்ந்தது. ஒள்ளிய சடையையுடைய முருகனுக்கு ஆடும் வெறியாட்டை விரும்புவை யாயின் வேடத்தை உடையோய்! அருவியாற் பொலிந்த திருவேங்கடத்துப் போவையாயின் சக்கரத்தையுடைய கடவுள் இந்திரியங்கட்கு மயக்கந்தரும் காசினியில் துயரெல்லா மொழிய அருளை வழங்கும். சூடிய பிறையையுடை யோய்! இப்பூமியினின்றும் பிழைத்து நன்னெறிக்கண்ணே போவே மென்று சொல்லிப் பழிச்சி சுடுகாட்டில் ஆடிவருத்தந் தீர்ந்த நின் பாதங்களைப் பல காலும் வணங்குவோமாக. திருக்கூத்தாடுதலை மேவினவன் சீபாதங்களைச் சேர்ந்தார் என்பெறார்.
புறப்பொருள்
(தொல்காப்பியத்திற் கூறியபடி)
வெட்சி
ஓர் அரசன் பிறிதோர் அரசனோடு போர் செய்ய விரும்பினான்; விரும்பிய விடத்துத் தனது படைத்தலைவரையும் போர் நிலத்தைக் காத்து நின்றோரையும் ஏவி பகைவரது ஆநிரைகளைக் களவினாற் கொண்டுவரும் படி பணித்தான்; அங்ஙனம் கொண்டுவரப்பட்ட ஆநிரைகளைப் பாதுகாத்தல் வெட்சி எனப்படும். நிரையினைப் பறிகொடுத்தோர் அவற்றை மீட்டலும் வெட்சியில் அடங்கும்.

நிரை கவருமிடத்தும் அவற்றை மீட்குமிடத்தும் நிகழும் பதினான்கு செய்திகள் ஆசிரியராற் கூறப்படும். (1) நிரை கவர்தற்கு எழுந்த படை பாடிப்புறத்துத் திரளுமிடத்து அரவமெழுதல்; (2) போர்வீரர் பாக்கத்தே இருளில் நல்வாய்ப் புட்கேட்டல்; (3) கேட்டபின் பகைவர் நிலத்து ஒற்றர் உணராமற் செல்லல்; (4) சென்று ஒற்றர் வாயிலாகப் பகைவர் செயலை அறிதல்; (5) அறிந்து நிரைப்புறத்து ஒதுங்கியிருத்தல்; (6) புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டு நின்ற நிரைகாவலரைக் கொல்லுதல்; (7) எதிர்ப்போர் இலராக நிரையை அகப்படுத்தி மீள்தல்; (8) தம் பின்னே தொடர்ந்து சென்று ஆற்றிடைப்போர் செய்தாரை வெற்றி கொள்ளல்; (9) சிலர் போர் செய்ய ஏனையோர் நிரையினைப் புற்காட்டி இளைப்பாற்றிக் கொண்டு போதல்; (10) நிரையினைக் கவர்ந்தோர் வருதல்; (11) நிரையினை ஊர்ப்புறத்து நிறுத்துதல்; (12) வேந்தன் ஏவலால் நிரைகளைத் தமக்குள் பகுத்துக்கொள்ளுதல்; (13) நிரையைப் பகுத்துக் கொண்ட மகிழ்ச்சியால் சுற்றத்தோடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதல்; (14) நிரையை இரவலர்க்கு வரையாது கொடுத்து மகிழ்தல். இச் செய்திகள் நிரைமீட்போருக்கு முரிய.

வஞ்சி
நாடு கவர்தல் வேட்கையால் மக்கள் அஞ்சும் படியாக அந் நாட்டிடத்தே சென்று ஒரு வேந்தனை மற்றொரு வேந்தன் வெற்றிகொள்ளல் குறித்தது வஞ்சி எனப்படும். நாடு கைக்கொள்ளச் சென்றவிடத்து இருந்த வனும் மண்ணழியாமற் காத்தற்கு எதிர்த்து மேற செல்வானாயின் அவ் விருவரும் வஞ்சிவேந்தர் எனப்படுவர். இவ் வஞ்சிவேந்தருடைய செய்திகள் பதின்மூன்று. (1) இரு படைகளும் எழுமிடத்து ஆரவாரஞ் செய்தல்; (2) இரு வகைப் படையாளரும் பகைவர் நாட்டிற் பரந்து சென்று எரியை எடுத்துச் சுடுதல்; (3) ஒருவர் ஒருவர் மேற் செல்லுமிடத்து பிற வேந்தர் தத்தம் படையுடன் அவர்களுக்குத் துணையாயவழி அவர் பெருமிதம் அடைதல்; (4) போர்மேற் செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கலம் முதலி யன கொடுத்தலும், பரிசிலர்க்கு அளித்தலுமாகிய கொடைத்தொழிலைச் செய்தல்; (5) பகைவர் நாட்டை அடைந்த படைகள் நாடு காத்து நின்றோரைக் கொல்லுதல்; (6) போரிடத்து வீரச் செயல்கள் காட்டிய தானைத்தலைவருக்கு ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களும், நாடு ஊர் முதலியனவும் அளித்தல்; (7) பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்திப் பேராண்மையுடையராய் விளங்குதல்; (8) தன் படை நிலையாற்றாது பெயர்ந்த வழி விசையோடு வரும் பெரு நீரைக் கல்லணை தாங்கினாற் போல தானே தடுத்துப் பெருமை அடைதல்; (9) போர் செய்த பிற்றை ஞான்று, வேந்தன், போர் குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்துவைத்த உண்டியைக் கொடுத்தல்;1 (10) இருவருள் ஒருவர் ஒருவர் மிகைகண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியாற் றிறை கொடுப்ப அதனை வாங்கினோர் விளக்க மெய்தல்; (11) திறை கொடுத்தோர் குறைபாடு எய்தல்; (12) பகைவர் நாடழிந்தமைக்கிரங்கித் தோற்றோனைச் சிறப்பித்துக் கொற்றவள்ளை பாடுதல்; (13) வென்றும் தோற்ற வேந்தர் தம் படையாளர் முன்பு போர் செய்த விடத்து கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டழிந்தவர்களைத் தாஞ் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவியும் உபசரித்தல்.

உழிஞை
பகைமேற் சென்ற வேந்தன் வேற்று வேந்தனது அரணை வளைத்த லும், அதனுள் இருந்த வேந்தன் அதனைக் கொண்டு காத்தலும் உழிஞை யாம். சென்ற வேந்தன் செய்திக்கு நான்கும் இருந்த வேந்தன் செய்திக்கு நான்குமாக எட்டுத் துறைகள் கூறப்படுகின்றன. (1) பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் வேண்டியோர்க்கு அவற்றைக் கொடுத் தலைக் குறித்தல். (இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது எனக் கூறுவர் நச்சினார்க்கினியர்); (2) அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத்தலைவர், தூதர் முதலியோரும் எடுத்துப் புகழ்தல்; (3) ஒரு காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகல் அழித்து மென்று கூறி அஃது அழித்தற்கு விரும்பல்; (4) அங்ஙனம் மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அம்புமாரி விலக்குதற்குக் கிடுகுங்கேடகமுமாகிய தோற் கருவியை மிகுதியாகக் கொண்டு செல்லுதல்.

அகத்தோன் செய்திகளாவன: (1) அகத்தோனது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, நீர்நிலை, ஏமப்பொருள் மேம்படுபண்டங்கள் முதலிய பெருஞ் செல்வங்களைக் கூறுதல்; (2) புறத்தோனை அகத்தோன் தன் செல்வத் தானன்றிப் போர்த்தொழிலால் வருத்தியது கூறல்; (3) அகத்திருந்தோன் தன்னரணழிவு தோன்றிய வழிப் புறத்துப் போர் செய்தலைக் கூறுதல்; (4) புறத்தோன் அகத்தோன் மேல் வந்துழி அவன் பகையினைப் போற்றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அடைத்த மதிலரணின் சிறப்பைப் கூறுதல்.

இன்னும் இருபெரு வேந்தர்க்கும் ஒன்றாய் வரும் பன்னிரண்டு துறைகள் உண்டு. (1, 2) தன் ஆக்கம் கருதியும் குடிகளைக் காத்தற்கும் குடையும் வாளும் நாட்கொள்ளுதல்1 (3) புறத்தோரும் அகத்தோரும் எயில் மதிலில் ஏணிமீது நின்று போர் செய்தல்; (4) அவ்விருபகைவரும் புறத்தும் அகத்தும் தம்படை கொண்டு போர் தொலைத்து அம்மதிலைக் கைப் பற்றுதல்; (5) உண் மதிலில் வளைத்து நின்றவன் போர் செய்யும் உள்ளத்தை விடாமலும், வளைக்கப்பட்டவன் மதிலைவிடாமலும் காத்தலை விரும்பிய நொச்சி; (6) இடைமதிலில் அகத்தோனிடத்தைப் புறத்தோனும் புறத்தோ னிடத்தை அகத்தோனும் விரும்பிக் கைப்பற்றுதல்; (7) அகத்தோரும் புறத் தோரும் எயிற்புத்தின் அகழின் இருகரையும்பற்றி நீரிடைப்படர்ந்த நீர்ப்பாசி போல் நின்று போர் புரிதல்; (8) மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பி நிற்றல்; (9) புறஞ்சேரி மதிலும் ஊர்மதிலுமல்லாத (அரண்மனை மதில்) கோயிற் புரிசைகளின் மேலும் ஏறி நின்று போர்செய்தல்; (10) போர் செய்த மதிற்கண்ணே ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரால் முடிபுனைந்து நீராடுதல்; (11) இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற வெற்றி வாளினைக் கொற்றவை மேல் நிறுத்தி அதற்கு நீராட்டும் வாண்மங்கலம்; (12) அவ்வாண்மங்கலம் நிகழ்ந்த பின்னர், வென்ற வேந்தன் தன் படைக் கெல்லாம் சிறப்புச் செய்தற்காக அவற்றை ஒருங்கு கூட்டி மகிழ்வித்தல்.

தும்பை
தனது வலிமையினை உலகம் புகழ்தல் காரணமாகப் பகைமேற் சென்ற வேந்தனை மாற்று வேந்தனும் அப்புகழ் கருதிச் சென்று வலியழித் தல் தும்பையாம். இதனகத்துப் படையாளரது வீரச் செயல்கள் கூறப்படும். அவையாவன: பலரும் ஒருவனை அணுகிப் போர் செய்தற் கஞ்சித் தூர நின்று அம்பாலும் வேலாலும் எறிந்து போர் செய்ய அவ் வாயுதங்கள் ஒன் றோடு ஒன்று முட்டும்படியாக நெருங்கித் தைத்தலின் குற்றுயிரான நிலையி லும் வீரச்செயலில் அவன் குறைவுபடாதிருத்தலும், வாள்முதலியவற்றால் தலையேயாயினும் உடம்பேயாயினும் அறுபட்ட நிலைமையினும் நிலத்திற் சாயாது அவனுடம்பு வீரச்செயல் காண்பித்தலும் போல்வன.

இத்திணைக்குப் பன்னிரண்டு செய்திகள் கூறப்படும். அவை பொரு வோர் எதிர்ப்போர் என்னும் இரு பகுதியினர் செயல்களைக் குறிப்பன. (1) பகைவர் அஞ்சத்தக்க தானை (காலாள்) நிலை, (2) யானை நிலை, (3) குதிரை நிலை முதலியவற்றின் தன்மைகளைக் கூறுதல், (4) வெற்றியையே நோக்க மாகக் கொண்ட வேந்தன் களத்து முகப்பிற் சென்று பொருதவிடத்து மாற்றார் சூழ்ந்து மொய்த்தனராக, அவன் படைத்தலைவன் ஒருவன் தான் வேறோ ரிடத்திற் செய்து கொண்டு நிற்கும் போரைவிட்டு வந்து வேந்தனோடு பொரு கின்றாரை எறிதல், (5) இருவர் படைத்தலைவரும் தம்மிற் பொருது மடிதல், (6) தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத்தலைவன் சென்று அதன் பின்னணியை மதர்த்த எருமைபோலத் தாங்கி நிற்றல், (7) கையிலிருந்த படையை எறிந்து விட்டு மெய்யாற் பொருதல், (8) பகைவன் ஊர்ந்து வந்த களிற்றை எறிந்து ஆர்த்தல், (9) களிற்றொடுபட்ட வேந்தனை மற்ற வேந்தன் படையாளர் சூழ்ந்து நின்று ஆடுதல், (10) இரு பெரு வேந்தரும் அவருக்குத் துணையாகிய வேந்தரும், தானைத்தலைவரும், தானையும் வாட்போர் புரிந்து ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்தல், (11) போரிடத்தே தன் வேந்தன் வஞ்சத்தாற் பட்டானாகச் சினங்கொண்டு பொரும் படைத்தலைவன் தலை மயங்கிப் போர் செய்தல் (“குரு குலத்தவனைக் குறந்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்களைவரையும் கொன்று வெற்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன”-ந-உரை). (12) புறங் கொடுத்தலின் அவரைக் கோறல் தரும மல்ல என்று உணராது அவரைக் கொன்று குவித்தல்.

வாகை
வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தால் நாற்குலத் தோரும், அறிவருந் தாபதர் முதலியோரும் தம்முடைய தொழிற் கூறுபாடு களை மிகுதிப்படுத்திக் கூறல் வாகையாம். 1மிகுதிப்படுத்தல், தன்னைத் தானே மிகுதிப்படுத்தலும் தன்னைப் பிறர் மிகுதிப்படுத்தலுமென இரு வகைப்படும். மேற்கூறியது போலத் துறைப்படுத்திக் கூறுதற்கியலாத பரந்த செய்கை பலவும் தொகுக்கப்பட்டு ஒரோ வொன்றாக்கி எழு வகையாகக் கூறப்படும். (1) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம். அவையாவன-ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. (2) ஐவகை மரபின் அரசர் பக்கம். அவையாவன: ஓதல் வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல் என்பன. (3) இரு மூன்று மரபின் ஏனோர் பக்கம். ஏனோர்-வணிகரும் வேளாளரும். வணிகர்க்குரிய ஆறு-ஓதலும், வேட்டலும், ஈதலும், உழவும். வேளாளர்க்குரிய ஆறு-ஓதல், ஈதல், உழவு, நிரை ஓம்பல், வாணிகம். வேளாளர்க்கு வழிபாடு உரித்தாகவுங் கூறுவர். அது பொருத்தமின்று. என்னை, “மன்னர் பின்னோரென்ற பன்மையான் முடியுடையோரும், முடி யில்லாதோரும்; உழுவித்துண்போரும், உழுதுண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார். வேளாண் மாந்தர்க்கு ‘வேந்து விடுதொழில்’ என்னும் மரபியற் சூத்திரத்தான் வேளாளர் இருவகையரென்ப. அரசரேவுந் திறமாவன. பகைவர் மேலும் நாடுகாத்தன் மேலுஞ் சந்து செய்வித்தன் மேலும் பொருள் வருவாய் மேலுமாம்.

“அவருள் உழுவித்துண்போர் மண்டில மாக்களுந் தண்டத் தலை வருமாய்ச் சோழனாநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற் றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமை எய்தினோருங் குறுமுடி குடிப் பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக்கு உரிய வேளாளராகும். ‘இருங்கோ வேண்மானருங் கடிப் பிடவூர்’ எனவும், ‘ஆலஞ்சேரி மயிந்தனூருண் கேணி நீ ரொப்போன்’ எனவுஞ் சான்றோர் செய்யுட் செய்தார். உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கோடலும் அவன் மகனாகிய கரிகாற் பெரு வளத்தான் நாங்கூர் வேளிடை மகட் கோடலுங்கூறுவர்” என ஆசிரியார் நச்சினார்க்கினியர் கூறினாராதலின். (4) மூவகைக் காலமும் நெறியினாற்றிய அறிவன்தேயம்-காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகைக் குற்ற மில்லாத ஒழுக்கத்தினை மூன்று காலத்தும் வழங்கும் முறைப்படி அமைத்த முழுதுணர்ந்த பெரியோர். இவர் கலசயோனியாகிய அகத்தியன் முதலியோ ரென்பர். “மழையும் பனியும் வெயிலும் ஆகிய குற்றமற்ற செயலையுடைய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறித்த அறிவன் பக்கமும் என்றவாறு.

“இனி இறந்தகாலம் முதலிய மூன்று காலத்தினையும் நெறியிற் றோற்றிய அறிவன் என்றாலோ எனின் அது முழுதுணர்ந்தோர்க்கு அல்லது புலப்படாமையின் அது பொருளன்று என்க. என்னை,

‘பனியும் வெயிலுங் கூதிரும் யாவும்
துனியில் கொள்கையொடு நோன்மை யெய்திய
தணிவுற் றறிந்த கணிவன் முல்லை’

எனப் பன்னிருபடலத்துள் ஓதுதலின்; ஆகவே அறிவன் என்றது கணிவனை.
“மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றல் ஆவது-பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர்கோளும், தூமமும், மின்வீழ்வும், கோணிலையும், மழை நிலையும், பிறவும் பார்த்துக் கூறல் என்பதாம். அங்ஙனம் வேண்டுதலின் ஆற்றிய அறிவன்” எனக் கூறுவர் ஆசிரியர் இளம் பூரணவடிகள். (5) எட்டு வகைப் பட்ட வழக்கினையுடைய தாபதப் பக்கம். அவையாவன-நீராடல், நிலத் திடைதல், தோலுடுத்தல் சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, கான் உணவு கோடல், தெய்வ பூசை, திதி பூசைகோடல் என்பன. (6) “அறிமரபிற் பொருநர்கட்பால்”-தாம் தாம் அறிந்த முறைமையானே போர் செய்வார் பகுதி “அவை சொல்லானும் பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் சூதானும் வேறலாம்.” (7) அனைநிலை வகை-வாளானும் தோளானும் பொருது வேற லன்றி அத்தன்மைத்தாகிய நிலைவகையான் வேறல். அவையாவன-சொல் லால் வேறலும், பாட்டான் வேறலும், கூத்தான் வேறலும், சூதான் வேறலும், தகர்ப்போர் குறும்பூழ்ப்போர் என்பனவற்றால் வேறலும் பிறவும் அன்ன.

“யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனைநிலைவகையோராவர்; அவர்க்கு மாணாக்காரகித் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத்தவராவர். தகர்வென்றி பூழ்வென்றி கோழிவென்றி முதலியன பாலறி மரபிற் பொருநர்கண் அனை நிலை வகையாம்” (ந-உரை).

இன்னும் வாகைத்திணைக்கு உரித்தாகிய பதினெட்டுத் துறைகள் கூறப்படும். (1) கூதிர் வேனிற் பாசறை நிலை, (2) 1களம்பாடுதல் களவழி பாடுதல், (3) தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டில் நின்று போர்த்தலைவரோடு கைபிணைத்துக் குரவையாடுதல், (4) வெற்றி வேந்தன் சென்ற தேரின் பின்னே கூழுண்ட கொற்றவையும் கூளிச்சுற்றமும் குரவைக் கூத்தாடுதல், (5) பெரிய பகை யினைத் தாங்கும் வேலினைப் புகழ்தல், (6) பகைவர் பெருமையை நன்கு மதியாது எதிர்செல்லும் ஆற்றல், (7) உயிர்வாழ்க்கையை வேண்டாது விண் ணுலகை வேண்டிய ஆண்டன்மை, (8) பகைவர் நாணும்படி உயர்ந்தோரால் நன்கு மதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனக் கூறி உயிரை அங்கியங்கடவுளுக்குப் பலி கொடுத்தல், (9) பகைவராயினும் அவர் சுற்றத்தாராயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும் போல்வன வேண்டியக்கால் அவர்க் கவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தல், (10) பகட்டினாலும் ஆவினாலும் குற்றந் தீர்ந்த சிறப்பினை யுடைத் தாகிய சான்றோர் (வேளாளர், வணிகர்) கூறுபாட்டைக் கூறல்.

11. அரசன் அரச வுரிமையைக் கைவிட்ட பகுதி கூறுதல் (“அது பரதனும் பார்த்தனும் போல் வார் அரசு துறந்த வென்றி”-ந-உரை.) (12) குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுநிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்னும் எட்டுக்குணத்தினைக் கருதிய சான்றோர் தன்மை கூறல், (13) அற நூல்களாற் கற்பிக்கப்பட்ட ஒழுக்கத்தோடு பொருந்தியிருத்தல். அவையாவன-அடக்க முடமை, ஒழுக்க முடைமை, நடுவு நிலைமை, பிறர் மனை நயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை ஆதியன (14) புகழினைத்தரும் கொடை, (15) தம்மாட்டுப் பிழைத் தோரைப் பொறுக்கும் பாதுகாப்பு, (16) அரசர்க்குரியவாகிய படைகுடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறுவனவு மாகிய பொருட் டிறத்துப்பட்ட வாகைப் பகுதி. (17) யாதானும் உயிர் இடர்ப்படு மிடத்துத் தன்னுயிர் வருந்தினாற் போல வருந்தும் ஈரமுடைமை. (18) ஆசையை அறவிடுத்த பகுதி.

காஞ்சி
வீட்டின்பம் காரணமாக அறம், பொருள், இன்பம் என்றவற்றாலும், அவற்றின் பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையும் முதலியவற்றால் நிலைபேறில்லாத உலகியற்கையைக் கூறுதல் காஞ்சியாம். வீடுபேறு ஏதுவாக வன்றிச் சிறுபான்மை நிலையாமைக் குறிப்புக் காரண மாகவுங் கூறப்படும். நிலையாமைக் குறிப்புத் தோன்றும் காஞ்சி, ஆண்பாற் காஞ்சி பெண்பாற் காஞ்சி எனத்துறைகள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் பத்துப் பகுதிகள் கூறப்படும். ஆண்பாற் காஞ்சி பத்தாவன. (1) பிறராற் றடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங் காஞ்சி, (2) வயசு முதிர்ந்த அறிவுமிக்கோர் இளமை கழியாத அறிவில்லா மக்களுக்குக் காட்டிய முதுகாஞ்சி, (3) போர்முகத்து விழுப்புண்பட்ட வீரன் ஒருவன் அதனை ஆற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கையை விரும்பாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சி, (4) போர்க்களத்தே புண்பட்டோனை கங்குல் யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாமின்மையின் அருகுவந்து புண்பட் டோனைப் பேய் காத்ததாகச் சொல்லப்படும் பேய்க் காஞ்சி, (5) ஒருவன் இறந்துழி அவன் இத்தன்மையோனென்று உலகத்தார் இரங்கிக் கூறும் மன்னைக்காஞ்சி, (6) இத்தன்மைய தொன்றனைச் செய்தல் ஆற்றேனாயின் இன்னவாறாகக் கடவேனெனக் கூறும் வஞ்சினக் காஞ்சி, (7) போரிலே புண்ணுற்றுக் கிடந்த தன் கணவனை அவன் மனைவி பேய் தீண்டுதலை நீக்கித் தானுந் தீண்டாத காஞ்சி, (8) உயிர் நீத்த கணவன்மேல் வேல்பாய்ந்த வடுவைக்கண்டு மனைவி அஞ்சிய ஆஞ்சிக் காஞ்சி (ஆஞ்சி-அச்சம்)1 (9) தம் பெண்ணைக் கொடுத்தற்கு மறுத்தது காரணமாகப் பெண்ணை வலிந்து கோடற்குப் படையெடுத்துவந்த அரசனுக்கு முதுகுடித் தலைவராகிய மக்கள் தம் மகளிரைக் கொடுக்க அஞ்சிய மகட்பாற் காஞ்சி, (10) தன் கணவன் தலையைத் தன் முகத்தினும் முலையினுஞ் சேர்த்துக் கொண்டு அவன் மனைவி இறந்த நிலை.

பெண்பாற் காஞ்சிபத்து ஆவன:- (1) பெரும் புகழுடையவனாய் மாய்ந்தானொருவனை பெண்கிளைச் சுற்றம் சூழ்ந்து அழுதல், (2) சுற்றத்தா ரின்றி மனைவியர்1 தாமே தத்தங்கொழுநரைத் தழீஇ யிருந்து அழுவதைக் கண்டோர்க் குண்டாகிய துயர். (3) தன் கணவன் மடிந்த பொழுதே மனைவி யும் உடன் இறந்து போனதைக் கண்டோர் பிறருக்குக் கூறிய மூதானந்தம். (ஆனந்தம்=சாக்காடு). (4) கொடிய சுரத்திடத்தே கணவனை இழந்த மனைவி தமியளாய்ப் புலம்பிய முதுமாலை, (5) கணவனோடு மனைவியர் இறந்த விடத்துச் சுற்றத்தார் பரிசிலாளர் முதலியோர் வருத்த முற்றுப் புலம்புகின்ற கையறுநிலை, (6) தன் மனைவியைக் கணவனிழந்து நிற்கின்ற தபுதார நிலை. (7) காதலனை இழந்த மனைவி தவம் புரிந்தொழுகும் தாபத நிலை. (8) கற்புடை மனைவி தன் கணவன் இறந்துழி அவனோடு எரிபுகுதல் வேண்டி தன் கணவன் இறந்துழி அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினா ரோடு மாறுபட்டுக் கூறும் பாலைநிலை (பாலை=புறங்காடு), (9) தன் மகன் போர்க்களத்துப் புறங்கொடுத்த செய்தி கேட்டேனும், வீரச்செயல் காட்டிக் களத்து மாண்ட செய்தி கேட்டேனும் தாய் இறந்து படுநிலை, (10) பிறந்தோ ரெல்லாம் இறந்தொழியவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங் காட்டினை வாழ்த்தல்.

“எதிரூன்றல் காஞ்சி” என்னும் கோட்பாடு தொல்காப்பியருக்கு உடன்பாடன்று.

பாடாண்
புகழ் முதலியவற்றை விரும்பிய தலைவனது குணாதிசயம் முதலிய வற்றை பரிசில் வேண்டிய புலவன் புகழ்ந்து பாடுதல் பாடாண் எனப்பபடும். இது மக்கள் தேவர் என்னும் இருதிறத்தார்க்கும் உரியன. இவற்றுள் தேவர்க் குரிய பாடாண் இருவகைப்படும். ஒன்று பிறப்பினாலன்றிச் சிறப்பினால் தேவ சாதியைச் சார்ந்தனவாகச் சொல்லப்படும்-முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்னும்2 அறுவரையும் வாழ்த்துதல். இஃது அறுமுறை வாழ்த்து எனப்படும். மற்றது தேவரிடத்தே சிறப்பில்லாத இம்மைப் பயன்களை வேண்டி, அவர்பால் அக் குறிப்பைக் கூறுதல். மேற் கூறிய அறுமுக வாழ்த்தோடு கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு வருமென்பர். கொடிநிலை-கீழ்த்திசைக் கண்ணே நிலை பெற்று தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம்; கந்தழி-ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி-தண்கதிர் மண்டிலம்.3

மக்கட் பகுதியாகிய பாடாண் திணைக்கு இருபது துறைகள் கூறப் படும். (1) கொடுப்போரை ஏத்திக் கொடாதாரைப் பழித்தல். (2) தலைவன் எதிர் சென்று அவன் செய்தியையும், அவன் குலத்தோர் செய்தியையும், அவன் மேல் ஏற்றிப் புகழ்தல் (இயன்மொழி வாழ்த்து) (3) சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந்தீர வாயில் காக்கிறவனுக்குத் தன் வரவைத் தலைவனிடத்து உணர்த்தும்படி கூறல், இழிந்தோரெல்லாம் தத்தம் இயங்களை இயக்கி வாயிற்கண் நிற்பர். (4) அரசரும் தலைவரும் அவைக் கண் நெடிது வைகிய வழி மருத்துவரும் அமைச்சர் முதலியோரும் அவர்க்கும் கண்துயில்தலைக்கூறுதல் (கண்படைநிலை). (5) சேதாவினை அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய வேள்வி நிலை. (6) செங்கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலை. (7) ஒரு தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாழ்த்திக் கூறும் வாயுறை வாழ்த்து. (8) உயர்ந்தோர் மாட்டு அடங்கி ஒழுகுதல் வேண்டுமெனக் கூறும்-செவியறிவுறூஉ. (9) இன்ன கடவுள் காப்ப நீ வாழ்வாயாகவெனக் கூறும் புறநிலை வாழ்த்து. (10) முற் காலத்து ஒத்த அன்பினராயிருந்து பிற்காலத்தே தலைவன் வேறுமகளிர் வசப்பட்டுத் துறந்ததனால் வருந்திய பெண்பாலைப் பற்றி இடைநின்ற சான்றோரும் பிறருங் கூறும் கைக்கிளைவகை. (11) தமது வலியினால் பாசறைக் கண் மனக் கவற்சியின்றித் துயின்ற அரசற்கு அவன் நல்ல புகழைக் கூறிச் சூதர் துயிலெழுப்பும் துயிலெடை நிலை. (12) 1கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் என்னும் நாற்பாலருந் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெற்றுக் கூறுதல். இது ஆற்றுப் படை எனக் கூறப்படும். அச்செய்யுட்கள் கூத்தராற்றுப்படை பாணாற்றுப் படை, பொருநராற்றுப்படை, விறலியராற்றுப்படை, 2முருகாற்றுப்படை என வழங்கும், (13) அரசன்தான் நாடோறுஞ் செய்கின்ற செற்றங்களைக் கை விட்டுச் சிறைவிடுதல், செருவொழிதல், கொலையொழிதல், இறை தவிர்தல் தானம்செய்தல் முதலிய சிறந்த தொழில்களைச் செய்யத் தொடங்கும் பெருமங்கலம் (மங்கல வண்ணமாகிய வெள்ளணியுமணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி யென்பர். (ந.உரை) (14) முடிபுனைந்த நாட்டொடு ஆண்டுதோறும் நீராட்டு மங்கலம் (15) உலகுட னிழற்றும் கொற்றக் குடையினியல்பு கூறுதல். (16) அரசனது வெற்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறகு மவாளினை வாழ்த்தும் வாள் மங்கலம்.

17. மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளை வரகுங் கொள்ளும் வித்திமங்கல மல்லாதன செய்து மங்கல நீராட்டு மங்கலம். (18) பரிசில் வேட்டுவந்தோன் தனது குடும்பத்தின் துன்பம் முதலியன கூறித் தான் விரும்பிய பொருள்களைக் கேட்டல். (19) வேண்டிய பரிசிலைப் பெற்றவன் தான் பெற்ற பரிசிலை உயர்த்திக்கூறித் தலைவன் விடை கொடுத்த பின் பேனும் தான் போக வேண்டுமென விடை பெற்றேனும் செல்லுதல். (20) நாள்நிமித்தத்தானும் புள்நிமிதித்தத்தானும் பிற வற்றினி மித்தத்தானும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய தீங்குகண்டு அவர்பாற் சகாயம் பெற்றவர் அவர்க்குத் தீங்கின்றாக என ஒம்படைகூறுதல்.

புறத்திற்கெல்லாம் பொதுவாகிய இருபத்தொரு துறைகளும் கூறப் படும் (1) செவ்வேளின் வேலைத் தாங்கிய வேலன் (படிமத்தான்) காந்தளைச் சூடித் தெய்வமேறி யாடுதல். (2) தமிழ் நாட்டு மூவேந்தருடைய படையாளர், படையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டி அவர்க்குரிய பனங்குருத்து வேம்பு, ஆத்தி என்னும் பூக் களைச் சூடுதல். (3) வள்ளிக் கூத்தாடுதல், (4) கழனிலைக் கூத்து-இளம் பிராயத் தானொருவன் போரில் ஓடாது நின்று வீரச் செயல் காட்டினதைக் கண்டு வீரக்கழல் கட்டி வீரர் ஆடும் கூத்து. இங்ஙனம் கழல் கட்டுதலே யன்றி அவற்குக் கொடி முதலியன கொடுத்தலும் மரபு. (5) போரிற் பின்னே அடிபெயராது நின்று போர்செய்த வேந்தனை உன்னமரத்தோடு சேர்த்துப் புகழ்தல். இம்மரம் தன் நாட்டகத்துக் கேடு வருங்கால் உலறியும், வராத காலம் குழைந்தும் நிற்கும் தெய்வத் தன்மையுடையது.

6.  பூவை நிலை-மாயோனுடைய புகழை அரசனுடைய புகழோடு உவமித்துக் கூறுதல். பிற கடவுளர் புகழை உவமையாக்கிக் கூறுதலும் மரபு. (7) குறு நில வேந்தரும் காட்டகத்து வாழும் மறவரும் போர்த் தொழில் வேந்தரைப்பொருது புறங் கொடுக்கச் செய்தல். (8) வெட்சி வீரர் கொண்ட நிரையைக் குறு நிலமன்ன ராயினும் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத் தருதல். (9) வேந்தற்கு உரிய புகழ் அமைந்த தலைமகளை ஒருவற்கு உரியளாக அவன் படை யாளரும் பிறரும் கூறுதல். (10) தன்னிடத்துள்ள போர்வலியால் வஞ்சினங் களைக் கூறுதல். (11) வருகின்ற கொடியையுடைய படையைத்தானே தாக்கு தல். (12) வாட்டொழில் வீரர் பகைவரைக் கொன்று தானும் வீழ்தல். (13) வாட் போரால் பகைவரை வென்ற அரசிளங்குமரனை அந் நாட்டிலுள்ளார் கொண்டாடிப் பறை ஒலிக்க ஆடி அவர்க்கு அரசு கொடுத்தல், (14) நிரை மீட்டோர் கரந்தைப் பூச்சூட்டப் பெறுதல், (15) போரில் வீரச்செயல் காண் பித்து இறந்த வீரனுக்கு நடுதற்கேற்ற கல்லைக் காணுதல் (16) அங்ஙனங் கண்ட கல்லை எடுத்தல். (17) அதனைப் புண்ணிய தீர்த்தத்திலே நீராட்டுதல். (18) கல்லை நடுதல். (19) அவன் செய்தபுகழை எழுதுதல். (20) அக் கல்லினை வாழ்த்தல்.

துறைகள் இருபத்தொன்று எனக் கூறப்பட்டாலும் இருபது செய்திகள் மாத்திரம் சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. இளம்பூரன அடிகள் இருபது துறைகளாகவே பொருளுரைத்தார். நச்சினார்க்கினியர். “ஆரம ரோட்டன் முதலிய எழு துறைக்குரிய மரபினையுடைய கரந்தையும் அக் கரத்தையே யன்றி முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லுங் கூடக் காந்தளும் பூவும் வள்ளியும் கழனிலையும் பூவை நிலையும் உளப்பட்டுச் சொல்லப்பட்ட பொதுவியல் இருபத்தொரு துறையினை உடைத்தெனக் கூட்டுக” எனக் கூறினர்.

இங்கே முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லும் எனக் கல்லை இரண்டாகக் கொண்டதனால் துறை இருபத்தொன்றாயிற்று. கரந்தையார்க்கு நாட்டும் கல், ஏனை வீரர்க்கு நாட்டும் கல் எனக் கல் இருவகைத்து.
துறை விளக்கம்
வெட்சி
இது இரு வகை:-
(1) மன்னுறு தொழில் - அரசன் ஏவச் சென்று நிரை கவர்தல்.
(2) தன்னுறு தொழில் - அரசன் ஏவாது சென்று நிரை கவர்தல்.
வெட்சி அரவம் - பகைவர் முனையிடத்துப் செல்லல்.

செலவு - போர் மறவர் மாற்றாரிடத்துப் போக விரும்பல்.

வேய் - நிரை நிற்கும் இடம் முதலியவற்றை ஒற்றி அறிதல்.

புறத்திறை - பகைவர் குறும்பைச் சூழ்தல்.

ஊர்க்கொலை - குறும்பிலுள்ளோரைக் கொன்று அரணைப் பிடித்தல்.
ஆகோள் - நிரைகளைக் கொள்ளல்.

பூசன் மாற்று - பின் தொடர்ந்தோரை நிரை கவர்ந்த வீரர் வீழ்த்தல்.

சுரத்துய்த்தல் - அரிய சுரத்திடத்தும் பெரிய காட்டிடத்தும் பசு நிரையை நோவுபடாது செலுத்தல்.

தலைத்தோற்றம் - போர்வீரர் நிரை கவர்ந்து வருதலையறிந்து உறவினர் மகிழ்ச்சி எய்தல்.

தந்து நிறை - ஆநிரைகள் மன்றத்தே சென்று நிற்றல்.

பாதீடு - கொள்ளை கொண்ட பசுநிரையை செய்தார் செய்த தொழில் முறையை அறிந்து கொடுத்தல்.

உண்டாட்டு - போர்வீரர் மதுவை உண்டு மனங்களித்தாடல்.

கொடை - கேட்டவர்களுக்குப் பசுக்களைக் கொடுத்தல்.

புலனறி சிறப்பு - பகைவர் நாட்டின் கண் சென்று ஒற்றறிவித்தார் முதலியோர்க்கு ஒன்று இரண்டு பசுக்களை அதிகமாகக் கொடுத்தல்.

பிள்ளை வழக்கு - நிமித்தஞ் சொன்னார்க்குச் சில பசுக்களை அதிக மாகக் கொடுத்தல்.

துடிநிலை - அரசன் ஏவலால் போரிடத்தே பறை கொட்டிய துடியனுக்கு வீரர் மிகுந்த கள்ளை வார்த்தல்.
கொற்றவை நிலை - நிரை கவரச் சென்ற வீரர் படைக்கு முன்னே கொற்றவையின் சிங்கக்கொடியை எடுத்துச் செல்லல்

வெறியாட்டு - ஆபரணங்களை அணிந்த பெண்கள் முருக பூசை பண்ணும் அவனோடு வள்ளிக் கூத்தாடுதல்.

கரந்தை
கரந்தை - பகைவர் கைப்பற்றிய நிரையை மீட்டல்.

கரந்தை அரவம் - பகைவர் பசு நிரையைக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற வீரர் விரைவிற்றிரளுதல்.

அதரிடைச்செலவு - போர் செய்ய இயலாதவர்கள் ஊரிலே தங்க ஏனையோர் பகைவர் போனவழியிடத்தே செல்லல்.

போர்மலைதல் - நிரைகவர்ந்து செல்கின்றோரை மறித்துப்போருதல்.

புண்ணொடு வருதல் - வீரர் தமது புகழை நாட்டி ஆயுதம் பட்ட புண்ணுடனே வருதல்.

போர்க்களத் தொழிதல் - வீரர் போர்க்களத்தே மடிதல்.

ஆளெறிபிள்ளை - பொருவாரை விலக்கித் தானொருவனாய் நின்று வீரரை வெட்டுதல்.

பிள்ளை யாட்டு - வேலிடத்திற்குடர்மாலையைச் சூட்டி மகிழ்ந்து ஆடுதல்.

கையறுநிலை - போரிடத்து இறந்தோனைப் பார்த்து அவன் இறந்த தன்மையை யாழ்ப்பாணர் கூறுதல்.

நெடுமொழி கூறல் - ஒரு வீரன் தன்னுடைய மேம்பாட்டைத் தானே உயர்த்திக் கூறல்.

பிள்ளைப் பெயர்ச்சி - போர் வென்ற வீரர்க்கு அரசன் வரிசை கொடுத்து மரியாதை செய்தல்.

வேத்தியன் மலைவு - அரசனது மேம்பாட்டினை வீரர் சொல்லுதல்.

குடிநிலை - பழமையும் தறுகண்மையுமுடைய மறக் குடியின் தன்மையைக் கூறுதல்.

வஞ்சி
வஞ்சி - வேந்தன் வஞ்சி மாலையைச் சூடிப் பகைவர் பூமியைக் கொள்ள விரும்பல்.

வஞ்சி அரவம் - சேனை கோபித்து ஆரவாரஞ் செய்தல்.

குடைநிலை - குடையைப் புற வீடு செய்தல்.

வாள்நிலை - வாளைப் புற வீடு செய்தல்.

கொற்றவை நிலை - கொற்றவையின் பொருட்டு நிணக்குடர் எட்கசிவு முதலியன நிறைத்த தாழியை முன்னே எடுத்துச் செல்லுதல்.

பேராண்வஞ்சி - போர் வென்ற வீரர்க்கு அரசன் உபகாரமளித்தல்; திறையளிப்பப் பெற்று மீண்டு செல்லுதல்.

மாராய வஞ்சி - மறமன்னனாற் சிறப்புப் பெற்ற வீரரின் தன்மையைக் கூறுதல்.

நெடுமொழி வஞ்சி - வேந்தன் மறவர் சேனையைக் கிட்டித் தன்னுடைய ஆண்மைத் தன்மையை உயர்த்திக் கூறுதல்.

முதுமொழி வஞ்சி - மறக்குடியிலுள்ள வீரனது தந்தையின் நிலையைச் சொன்னது.

உழபுல வஞ்சி - பகைவருடைய நாட்டைக் கொளுத்தியது.

மழபுல வஞ்சி - பகைவர் நாட்டிலுள்ள மனைகள் பாழ்படும்படி கொள்ளை கொள்ளுதல்.

கொடை வஞ்சி - பாடிய புலவர்களுக்குப் பரிசில் கொடுத்தல்.

குறு வஞ்சி - பகை அரசனுக்குத் திறைகொடுத்து, நாட்டுக்குரிய அரசன் குடிகளைக் காத்தல், மேற்படி தங்கியிருக்கும் பாசைறையின் தன்மையைச் சொல்லுதல்.

ஒருதனி நிலை - வெள்ளந் தள்ளாதபடி கல்லாற் கட்டின கரையைப் போலப் பெரும் படையை ஒரு வீரன் தடுத்து நிற்றல்.

தழிஞ்சி - தனக்குக் கெட் டோடுவார் முதுகுப் புறத்துக் கூரிய வாளோச்சாத மறப்பண்பு.

பாசறை நிலை - பல வேந்தர் பணியவும் அவ்விடத்தினின்றும் போகானாகி மன்னன் பாடி வீட்டில் இருத்தல்.

பெரு வஞ்சி - பகைவர் நாட்டை இரண்டாவது முறையும் நெருப்புக் கொளுத்தல்.
பெருஞ்சோற்று நிலை - பகைவர் நாட்டை அழித்துத்தருவர் என்று சொல்லி மிக்க சோற்றை வீரர்க்கு அளித்தல்.

நல்லிசை வஞ்சி - பகைவர் நாட்டை அழித்த வேந்தனது வெற்றியை மிகுத்துச் சொல்லுதல்.
மேற்படி - பகைவர் தேசத்துக் கேட்டிற்கு இரங்குதலைத் திரும்பவும் கூறுதல்.

காஞ்சி
காஞ்சி - வேற்று மன்னன் வந்துவிட அரசன் காஞ்சிப் புவைச் சூடித் தனது ஊரைக் காத்தல்.

காஞ்சி எதிர்வு - எதிர்க்க வந்த சேனை மேலிடுதலைப் பொறாத வீரனின் வெற்றியைக் கூறுதல்.

தழிஞ்சி - பரந்த சேனை தங்களெல்லையிற் புகாதபடி அரிய வழியைக் காத்தல்.

படைவழக்கு - அரசன் வீரர்க்குப் படை வழங்கல்.

மேற்படி - படை வழங்கிய பின் வீரர் அரசனை உயர்த்திக் கூறல்.

பெருங் காஞ்சி - எதிர்வரும் படையினைத் தடுக்கும் வலியினை யுடைய வீரர் தத்தம் வலிமையைப் பெருஞ்சேனையிடத்தே காண்பித்தல்.

வாள் செலவு - வாளைப் புற வீடு செய்தல்.

குடைச் செலவு - குடையைப்புற வீடுசெய்தல்.

வஞ்சினக் காஞ்சி - மன்னன் வஞ்சினங் கூறுதல்.

பூக்கோணிலை - போரை ஏற்றுக்கொண்டதற் கடையாளமாக வீரர் அரசன் கொடுத்த பூவினை ஏற்றல்.

தலைக் காஞ்சி - பகைவருடன் பொருதி வீரத்தைக் காண்பித்துப் பட்டவனது தலையின் மதிப்பைச் சொல்லுதல்.

தலை மாராயம் - பகைவர் தலைவனின் தலையைக் கொண்டுவந்த வனுக்கு அரசன் செல்வத்தைக் கொடுத்தல்.

தலையொடு முடிதல் - கணவனது தலையுடன் மனைவி இறத்தல்.

மறக் காஞ்சி - பகைவர் கெடும்படியாக அரசன் போர் செய்தல்.

மேற்படி - பகைவர் வேல்பட்ட புண்ணைக் கிழித்துக் கொண்டு வீரன் இறத்தல்.

பேய் நிலை - போரிடத்து வீழ்ந்தவனைப் பேய் பரிகரித்தல்.

பேய்க் காஞ்சி - போர்க்களத்தே பட்ட வீரரைப் பார்த்துப் பேய் அச்சமுறுத்துதல்.

தொட்ட காஞ்சி - வீரனது புண்ணைப் பேய் தீண்டுதல்.

தொடாக் காஞ்சி - வீரனது புண்ணைத் தீண்ட அஞ்சிப் பேய் பெயர்தல்.

மன்னைக் காஞ்சி - வீரசுவர்க்கஞ் சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து பிறர் வருந்துதல்.

கட்காஞ்சி - அரசன் வீரர்க்கு மதுவைக் கொடுத்தல்.

ஆஞ்சிக் காஞ்சி - கணவனோடு உடன்கட்டை ஏறும் இயல்பினை யுடையவள் தன்மையைக் கூறுதல்.

மேற்படி - கணவன் உயிர் நீங்கின வேலாலே மனைவி தனது ஆவியை ஒழித்தல்.
மகட்பாற் காஞ்சி - மகளைக் கேட்ட அரசனோடு மாறுபடுதல்.

முனைகடி முன்னிருப்பு - பகை வேந்தனைப் போர்க்களரியி னின்றும் போக்குதல்.

நொச்சி
நொச்சி - மதிலைக் காக்கும் வீரர் சூடிய பூவைப் புகழ்தல்.

மறனுடைப்பாசி - பகை அரசர் வீரசுவர்க்கத்திடத்துப்போன தன்மையைக் கூறுதல்.

ஊர்ச்செரு - காவற்காடும் அகழும் சிதையாதபடி போர் செய்தல்.

செருவிடை வீழ்தல் - காவற்காட்டையும் அகழியையும் காத்து நின்று பட்ட வீரரின் வெற்றியைக் கூறுதல்.

குதிரைமறம் - மதிலிடத்துப்பாயும் குதிரையின் தன்மையைக் கூறுதல்.

எயிற்போர் - மதிலிடத்து வீரர் கூரிய ஆயுதத்தால் செய்யும் போரைச் சிறப்பித்தல்.

எயில்தனை யழித்தல் - வீரக்கழலணிந்த வீரர் மதிலின்கண் இறந்த தன்மையைக் கூறல்.

அழிபடை தாங்கல் - மதிலின்மேல் நின்ற வீரர் பகைவரை வெட்டிக் குவித்து எயிலைக் காத்தல்.

மகள் மறுத்து மொழிதல் - பகை அரசன் பெண் கேட்க மறுத்து மொழிதல்.

உழிஞை - உழிஞை மாலை சூடி அரணை வளைத்து நாட்டைக் கைப்பற்ற நினைத்தல்.

குடை நாட்கோள் - குடையைப் புறவீடு செய்தல்
வாணாட்கோள் - வாளைப் புறவீடு செய்தல்.

முரசவுழிஞை - உயிர்ப்பலி உண்ணும் முரசின் தன்மையைக் கூறல்.

கொற்ற வுழிஞை - பகைவர் நாட்டைக் கவர விரும்பிப் பரந்த சேனையுடன் செல்லல்.

அரசவுழிஞை - அரசனது கீர்த்தியைக் கூறுதல்.

கந்தழி - திருமால் வீரசோ என்னும் அரணத்தை அழித்த வீரத்தைக் கூறுதல்.

முற்றுழிஞை - சிவபெருமான் சூடிய உழிஞையின் சிறப்பைக் கூறுதல்.

காந்தள் - கடலிடத்திற் சூரனைக் கொன்ற முருகனது காந்தட் பூவின் சிறப்பைச் சொல்லல்.

புறத்திறை - பகைவரின் அரணின் பக்கத்தில் பாடி வீடு கொள்ளுதல்.

ஆரெயிலுழிஞை - பகை அரசனது மதிலின் வலிமையைக் கூறுதல்.

தோலுழிஞை - கிடுகுப்படை வெற்றியை உண்டாக்குமெனக் கூறி அதனைச் சிறப்பித்தல்.

குற்றுழிஞை - அழிவில்லாத பகைவர் அரண்மீது தான் ஒருவனுமே போர் செய்தது.
மேற்படி - காவற்காட்டைக் கடந்து செல்லல்.

மேற்படி - பரிசையை யுடைய சேனைத்தலைவர் ஆடிப்பகை வருடைய அரணைக்கிட்டுதல்.

புறத்துழிஞை - காவற்காட்டைக் கடந்து கிடங்கின் அருகை அடைதல்.
பாசி நிலை - அகழியிடத்துப் போர் செய்தல்.

ஏணி நிலை - பகைவருடைய மதிலில் ஏணி சாத்துதல்.

எயிற்பாசி - ஏணிமேல் ஏறுதல்.

முதுவுழிஞை - மதிலினின்று பகைவர் குறும்பில் போர் வீரர் குதித்தல்.

மேற்படி - எயிலிற் குதித்தோரின் வலியைக் கூறல்.

அகத்துழிஞை - மதிலினுள் பாய்ந்த வீரர் வெற்றி கொள்ளல்.

முற்று முதிர்வு - மதிலினுள்ளோரின் காலை முரசொலிப்ப புறத்திருந் தோரது கோபத்தைக் கூறல்.

யானை கைக்கோள் - அரசன் யானையையும் தோட்டியையும் கைக் கொள்ளல்.

வேற்றுப்படை வரவு - வேற்று வேந்தன் துணையாக வருதல்.

உழுது வித்திடுதல் - பகைவருடைய அரணை அழித்துக் கடவியும் குடைவேலும் விதைத்தல்.

வாண் மண்ணு நிலை - நீராட்டிய வாளின் சிறப்புக்கூறல்.

மண்ணு மங்கலம் - பகை அரசன் மகளை வெற்றி வேந்தன் வதுவை செய்தல்.

மகட்பாலிகல் - மகள் வேண்டிய அரசனுடைய தன்மையைக் கூறுதல்.

திறை கொண்டு பெயர்தல் - திறையைப் பெற்றுத் தனது நாட்டுக்கு ஏகுதல்.

அடிப்பட விருத்தல் - பகைவர் தமது சொற்கேட்டு நடக்கும்படி பாசறையிலிருத்தல்.
தொகை நிலை - எல்லா அரசரும் அவன் தாள் வணங்கல்.

தும்பை
தும்பை - போர்க்களத்தே யுத்தத்தை விரும்பிய வீரர் தும்பைப் பூவைச் சூடுதல்.
தும்பை அரவம் - படைகளுக்கு மன்னன் யானை குதிரை முதலிய வற்றையும் பொன்னையும் வழங்குதல்.

தானைமறம் - இருவகைச் சேனையும் பொருது மடியாது பாதுகாத்தல்.

மேற்படி - படை கெடும், படும் என்று ஒராது போர் செய்தல்.

மேற்படி - பகைவருடைய கேட்டிற்கு இரங்கல்.

யானைமறம் - இளம் களிற்றின் வீரத்தைக் கூறுதல்.

குதிரை மறம் - குதிரைப் படையின் வேகத்தைக் கூறுதல்.

தார் நிலை - தூசிப்படையைத் தடுப்பனென ஒரு வீரன் தனது தறு கண்மையைக் கூறுதல்.

மேற்படி - ஒரு வேந்தனைப் பல வேந்தர் எதிர்த்த வழி வீரன் தானே எதிர்த்தல்.
தேர் மறம் - வேந்தன் தேரின் நன்மையைக் கூறல்.

பாடாண் பாட்டு - யானையை எறிந்து பட்ட வீரர்க்குப்பாணர் உரிமை செய்தல்.
இருவருந்தபு நிலை - இரு திறச் சேனைகளும் அரசரும் ஒருங்கே படுதல்.

எருமை மறம் - கை வேலை யானைமேல் விட்டெறிந்து வந்த படையை நிர் ஆயுதனாய் நின்று வெற்றி கொண்டது.

நூழில் - அரசர் சேனையைக் கொன்று வேலைச் சுழற்றி ஆடுதல்.

நூழிலாட்டு - தன் மார்பைப் பிளந்த வேலைப் பிடுங்கி பகைவர் மீது எறிதல்.

முன்றேர்க் குரவை - தேர் முன்னே வீரர் ஆடுதல்.

பின்றேர்க் குரவை - வீரரோடு பாணிச்சியர் தேரின்பின் ஆடுதல்.

பேய்க் குரவை - தேரின் முன்னும் பின்னும் பேயாடுதல்.

களிற்று நிலை - யானையை எறிந்து அதன் கீழ்ப் பட்டு இறத்தல்.

ஒள் வாளமலை - வாள் வீரர் வீரக்கழலணிந்தவனுடன் ஆடுதல்.

தானை நிலை - இரண்டு சேனையும் வீரத்தைப் புகழப் போர்க் களத்தில் வீரன் நிலைத் தூண்போல் நிற்றல்.

வெரு வருநிலை - மார்பைப் பலஅம்புகள் பிளப்பவும் வீரன் நிலத்தில் விழாது நிற்றல்.

சிருங்கார நிலை - பகைவர் புகழும்படி பட்டவனை கற்பின் மிக்க மனைவியர் தழுவுதல்.

உவகைக் கலுழ்ச்சி - வாளாற் போழப்பட்டுக் கிடக்கும் கொழுநனைக் கண்டு மனைவியர் மகிழ்ந்து கண்ணீர் விடுதல்.

தன்னை வேட்டல் - தனது அரசன் களத்துப் பட்டானாக ஒரு வீரன் உயிரை ஆகுதி பண்ணல்.

மேற்படி – க
ளத்துப் பட்ட கணவனைக் காண வேண்டி மனையாள் போர்க்களத்துச் செல்லுதல்.
தொகை நிலை - புகழை நாட்டி எல்லோரும் போர்க்களத்தில் மடிதல்.

வாகை
வாகை - வாகைப் பூவைச் சூடிப் பகை வேந்தனைக் கொன்று ஆரவாரித்தல்.
அரச வாகை - அரசன் தன்மையைக் கூறல்.
முரச வாகை - முரசின் தன்மையைக் கூறல்.
மறக்கள வழி - அரசனை வேளாளனாகச் சிறப்பித்தல்.
கள வேள்வி - பேய் உண்ணக் கள வேள்வி வேட்டல்.
முன்றேர்க்குரவை - அரசனது தேரின் முன் பேயாடுதல்.
பின்றேர்க்குரவை - தேரின் பின் பேயாடுதல்.
பார்ப்பன வாகை - பார்ப்பார் அரசன் வெற்றியை யாகம் வேட்டுச் சிறப்பித்தல்.
வாணிக வாகை - வாணிகனுடைய ஆறு செய்தியை உயர்த்திக் கூறல்.
வேளாண் வாகை - அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவரும் விரும்ப அவர் ஏவல் வழியே செல்லல்.

பொருந வாகை - நின் கீர்த்தியின் மிகுதியைப் பார்த்துப் பிறரை இகழுதலை ஒழி என்று சொல்லுதல்.

அறிவன் வாகை - மூன்று கால நிகழ்ச்சியையும் அறியும் அவனது தன்மையைக் கூறுதல்.

தாபத வாகை - தாபதருடைய தன்மையைக் கூறல்.
கூதிர்ப்பாசறை - மனைக்கிழத்தியின் பிரிவாற்றாமையை ஆற்றி பாசறையிற் றங்கியது.

வாடைப்பாசறை - வீரர் நடுங்கும்படி வாடைக்காற்று வீசப் பெறும்பாசறையின் தன்மையைக் கூறல்.

அரச முல்லை - உலகைக் காக்கும் அரசன் தன்மையைக் கூறல்.
பார்ப்பன முல்லை - பார்ப்பாரின் நன்மை மிகுந்த முறையைக் கூறல்.
அவைய முல்லை - நடுவு சொல்லும் சான்றோர் தன்மையைக் கூறல்.
கணிவன் முல்லை - சோதிட வல்லவனது கீர்த்தியைச் சொல்லியது.
மூதின் முல்லை - மறக்குடியில் உள்ள பெண்களது சினத்தைச் சிறப்பித்தது.
ஏறாண் முல்லை - மென்மேல் ஏறா நின்ற மறக்குடியின் ஆண்மைத் தன்மையை உயர்த்திக்கூறுதல்.

வல்லாண் முல்லை - இல்லையும் ஊரையும் இயல்பினையுஞ் சொல்லி ஆண்மைத் தன்மையைச் சிறப்பித்தல்.

காவன் முல்லை - அரசனது பாதுகாத்தலைச் சிறப்பித்தல்.
போராண் முல்லை - சின மன்னன் போர்க்களத்தில் கொண்ட மிகுதியைக் கூறல்.
மற முல்லை - மன்னன் விரும்பியது கொடுக்கவும் அதனைக் கொள்ளாத வீரனதுதன்மையைக் கூறல்.

குடை முல்லை - அரசனது குடையைப் புகழ்தல்.
கண்படை நிலை - வென்று பூமியைக் கைக்கொண்ட அரசனின் உறக்கத்தைக் கூறல்.
அவிப்பலி - போரிடத்து வீரர் செஞ்சோற்றுக் கடன் கழித்தது.
சால்பு முல்லை - சான்றோர் இயல்புரைத்தல்.

கிணை நிலை - கொட்டுபவன் வேளாளனது கீர்த்தியை உரைத்தல்.
பொருளொடு புகறல் - பூமியில் விருப்பத்தை நீக்கி மெய்யாய பொருளிடத்து விருப்பத்தைச் செலுத்தியது.

அருளொடு நீங்கல் - உலகத்துத் துயரத்தைப் பார்த்துப் பற்றொழித்தல்.

பாடாண்
பாடாண் பாட்டு - அரசனது இசையும், வலியும், கொடையும், தண்ணளியும் என்பனவற்றைத் தெரிந்து சொல்லுதல்.

வாயினிலை - புலவன் வாயில்காப்போனை தனது வரவை அரசற்குணர்த்தும்படி கூறல்.

கடவுள் வாழ்த்து - வேந்தனை அரி அயன் அரன் என்னும் ஒருவனாக உயர்த்திக் கூறல்.

பூவை நிலை - அரசனை மாயனோடு உவமித்துக் காட்டிடத்துக் காயாம் பூவைப் புகழ்தல்.

பரிசிற்றுறை - புலவன் அரசன் முன்னே தான் பெற விரும்பியது இதுவெனக் கூறல்.
இயன் மொழி வாழ்த்து - இன்னோர் இன்னவை கொடுத்தார். நீயும் அவைபோன்று எமக்கு ஈ என எடுத்துச் சொல்லுதல்.

மேற்படி - அரசனுடைய தன்மையைக் கூறுதல்.

கண்படை நிலை - அரசனது துயிலைப் புகழ்ந்து கூறல்.

துயிலெடை நிலை - அரசருக்கு அருள் செய்யும்படி எழுந்திருப்பா யென அரசனைத் துயில் நீக்குதல்.
மங்கலநிலை - துயில்விட்டெழுந்த அரசன் முன் மங்கலங் கூறல்.
மேற்படி - மங்கலத்துக் குரியவற்றை எல்லாம் அரசன் பெற்றா னெனக் கூறல்.
விளக்கு நிலை - அரசனது விளக்கின் தன்மையைக் கூறுதல்.
மேற்படி - அரசனைச் சூரியனோடு உவமித்தல்.
கபிலை கண்ணிய புண்ணிய நிலை - அந்தணருக்குக் கொடுக்க விரும்பிய பசுவின் தன்மையைக் கூறுதல்.
வேள்வி நிலை - அரசன் தேவர்கள் மகிழும்படியாகப் பண்ணிய வேள்வியின் தன்மையைக் கூறல்.
வெற்றி நிலை - உலகத்தில் துன்பம் நீங்க மழைபெய்யுமெனக் கூறி வெற்றியினது தன்மையைச் சொல்லுதல்.
நாடு வாழ்த்து - நாட்டின் வளத்தைக் கூறுதல்.
கிணை நிலை - அழகிய மாளிகையில் கிணை கொட்டுபவன் தன்மை கூறுதல்.
களவழி வாழ்த்து - போர்க்களத்துள்ள செல்வத்தை யாழ்ப்பாணர் கூறுதல்.
வீற்றிருந்த பெருமங்கலம் - அரசன் செம்மாந்திருந்த சிறப்பினைக் கூறுதல்.
குடுமிகளைந்த புகழ்சாற்று நிலை - அரசன் குடுமியைக் கூட்டி முடிந்த தன்மையைக் கூறுதல்.
மணமங்கலம் - அரசன் மகளிரை மணந்து மங்கலங் கூறுதல்.
பொலிவுமங்கலம் - அரசன் மகிழப் புதல்வன் பிறந்ததைப் பலருங் கொண்டாடுதல்.
நாண்மங்கலம் - தருமத்தினையும் செங்கோலினையும் விரும்பிய அரசனின் பிறந்த நாளின் தன்மையைக் கூறுதல்.
பரிசினிலை - அரசன் இன்பத்திலே அசைய இரவலர் இரக்கச் செல்லல்.
பரிசில் விடை - அரசனுடைய புகழ் கூறியவர்க்கு அரசர் பரிசில் வழங்கி விடை கொடுத்தல்.
ஆள்வினை வேள்வி - அரசனது இல்லறத்தின் தன்மையைக் கூறல்.
பாணாற்றுப்படை - பரிசில் பெற்ற பாணன் பரிசில்பெற அலையும் பாணனை வழியிலே சந்தித்துச் செலுத்துதல்.
கூத்தராற்றுப் படை - தலைவனைக் கண்டு துதித்து மீண்ட இரப்பாளன் கூத்தரை வழியிலே செலுத்துதல்.
பொருநராற்றுப் படை - கிணை கொட்டுபவனை வழிப்படுத்தல்.
விறலியராற்றுப்படை - விறலியை வழிப்படுத்தல்.
வாயுறைவாழ்த்து - எங்கள் வார்த்தையை ஏற்று நடப்பின் அதன் பலன் பின்னே பலிக்குமெனக் கூறல்.
செவியறிவுறூஉ - அரசனுக்கு அவனது சிறந்த ஒழுக்கத்தைக் கூறுதல்.
குடைமங்கலம் - அரசன்குடையைப் புகழ்தல்.
வாள்மங்கலம் - அரசனது வாளைப் புகழ்தல்.
மண்ணு மங்கலம் - அரசனது திருமுழுக்கின் தன்மையைக் கூறுதல்.
ஓம்படை - இன்ன காரியத்தைச் செய்தல் இயல்பென்று அரசன் முன்னின்று புலவன் கூறுதல்.
புறநிலை வாழ்த்து - வழிபடு தெய்வம் நின்னைக் காப்ப நின்வழி முறையில் உள்ளோர் மேம்படுவார்களெனக் கூறுதல்.
கொடிநிலை - அரசனது கொடியை அரி அயன் அரன் என்னும் மூவர் கொடியின் ஒன்றோடு உவமித்தல்.
கந்தழி - திருமால் சோவென்னும் அரணை அழித்த வெற்றியைக் கூறல்.
வள்ளி - பெண்கள் குமரனுக்கு வள்ளியென்னுந் கூத்தாடல்.
புலவராற்றுப் படை - தேவர்களிடை அறிவாளனை வழியிடைச் செலுத்துதல்.
புகழ்ந்தனர் பரவல் - தெய்வத்தின் பாதங்களைப் பணிதல்.
பழிச்சினர் பணிதல் - இறைவன் பேற்றை விரும்பி வாழ்த்தி வணங்கல்.
கைக்கிளை - பெண் தலைவனது மாலையை ஆசைப்பட்ட தன்மையைக் கூறல்.
பெருந்திணை - தலைவனது புல்லு தலை விரும்பி இருட்காலத்துப் போகின்றவனது தன்மையைக் கூறல்.
புலவி பொருளாகத் தோன்றிப் பாடாண் பாட்டு - தலைமகள் வீரனது மார்பையான் தருவேன் என ஊடிக் கூறுதல்.
கடவுண் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் - தெய்வமகளிர் கடவுளரை விரும்புதல்.
கடவுண் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் - மூன்று கண் ணுடைய கடவுளைப் புல்ல விரும்பிய மானிட மகளிரின் வருத்தத்தைக் கூறல்.
குழவிக்கட் டோன்றிய காமப்பகுதி - சிறு புதல்வரது நலத்தை விரும்பிய காமப்பகுதியுடைய தன்மையைச் சொல்லுதல்.
ஊரின்கட்டோன்றிய காமப் பகுதி - நீங்காத அன்புடைய ஆடவரும் மகளிரும் அழகு பொருந்தக்கூடும் பகுதியைச் சொல்லுதல்.
பொது
போந்தை - சேரன் சூடும் பனம்பூவைப் புகழ்தல்.
வேம்பு - பாண்டியனது முடியிற்சூடும் வேப்பம்பூவைப் புகழ்தல்.
ஆர் - சோழன் சூடும் ஆத்திப்பூவைப் புகழ்தல்.
உன்ன நிலை - அரசனை உன்ன மரத்தோடு சேர்த்துப் புகழ்தல்.
ஏழக நிலை - செம்மறிக் கிடாமீது சென்றாலும்அரசன் மனவெழுச்சி யுடையனென்று அவன் புகழைக் கூறல்.
மேற்படி - இளமையைப் பாராது அரசன் பூமியைக் காத்தல்.
கழனிலை - போர்க்களத்து அரசன் கழலிடத்து வீரக்கழலை அணிதல்.
கற்காண்டல் - போரில் இறந்தோர்க்கு நிறுத்தக் காட்டிடத்துக் கல்லைப் பார்த்தல்.
கற்கோணிலை - பார்த்த கல்லை எடுத்தல்.
கல்நீர்ப்படுத்தல் - கல்லினை நீரிலே கழுவுதல்.
மேற்படி - கற்களை நிரைத்தல்.
கன்னடுதல் - வீரன் நாமத்தை எழுதிக் கல்லை நடுதல்
கன்முறை பழிச்சல் - கல்லினைத் தொழுதல்.
இற்கொண்டு புகுதல் - கோயிலெடுத்துப் புகழ்தல்.
சிறப்பிற் பொது
முதுபாலை - கணவனை இழந்தவளது தன்மையைக் கூறல்.
சுரநடை - தலைவியை இழந்தவனது தன்மையைச் சொல்லுதல்.
தபுதார நிலை - மனைவியை இழந்த பின் இல்லிடத்து உறையும் ஆடவன் முறையைக் கூறல்.
தாபதநிலை - கணவனிறந்தபின் மனைவியின் கைம்மை நிலையைக் கூறுதல்.
தலைப்பெய் நிலை - மாதா இறந்த முறையைக் கூறல்.
பூசன் மயக்கு - பிள்ளை இறந்தானாகச் சுற்றத்தார் செய்யும் ஆரவாரத்தைக் கூறுதல்.
மேற்படி - அரசன் இறந்தமைக்குப் பூமியிலுள்ளோர் இரங்கல்.
மாலைநிலை - சுடுகாட்டிடத்து கணவனோடு நெருப்பிலே புகவேண்டி மனைவி மாலைக்காலத்தே நின்ற தன்மையைக் கூறல்.
மூதானந்தம் - மனைவி கணவனோடு இறந்ததைக் கண்டு வழியிடத்துச் செல்வார்அதிசயித்துக் கூறல்.
மேற்படி - தம்மேற் பகைவருடைய கூரிய அம்பு அழுந்தத்தான் நினைத்த வினையை முடிவு செய்யானாகி இறத்தல்.
ஆனந்தம் - நற்சொல்லும் நிமித்தமும் வேறுபடப் பயப்பட்டு நடுக்கமுறல்.
மேற்படி - போரிடத்திலுள்ள வீரன் பொருட்டு வருந்துதல்.
ஆனந்தபபையுள் - மனைவி கணவனிறப்ப மெலிந்து வருந்துதல்.
கையறுநிலை - அரசன் இறந்தானாக அணைந்தோர் இறந்தமையைச் சொல்லி வருந்துதல்.
மேற்படி - இறந்தவனது புகழை அன்புற்றுச் சொல்லுதல்.
காஞ்சிப் பொது
முதுமொழிக் காஞ்சி - அறிவுடையோர், முடிந்த பொருளாகிய அறம் பொருள் இன்பத்தை உலகினர் அறியக்கூறுதல்.
பொதுக் காஞ்சி - உலகத்து நிலையாமையைக் கூறுதல்.
பொருண்மொழிக் காஞ்சி - முனிவர் கண்ட தெளிந்த பொருளைக் கூறுதல்.
புலவரேத்தும் புத்தேணாடு - பற்றற்றோர் விரும்பும் மேலுலகத்தைக் கூறுதல்.
முதுகாஞ்சி - மேலாய் வரும் பொருள்களைத் தக்கபடி ஆராய்ந்து நிலையில்லாமையை முறைபடச் சொல்லல்.
காடுவாழ்த்து - சாப்பறை ஒலிக்கும் சுடுகாட்டை வாழ்த்துதல்.
முல்லைப் பொது
முல்லை - தலைவன் தனது மனைவியைக் கூடிய மகிழ்ச்சி நிலையை உரைத்தல்.
கார் முல்லை - பாசறையினின்றும் தலைவர் வர முன்கடல் நீரை முகந்து கொண்டு மேகம் வந்தது.
தேர் முல்லை - அரசர் பகையைத் திருத்திய காதலர் தேர் வந்த தன்மையைக் கூறுதல்.
நாண் முல்லை - கணவன் பிரிய இல்லிலே தங்கி மனை நாணத் தன்னைப் பரிகரித்தது.
இல்லாண் முல்லை - கணவனை வாழ்த்திக் கீர்த்தியாற் சிறந்த இல்லின் சிறப்பைக் கூறுதல்.
பகட்டு முல்லை - தலைவனை முயற்சியான் வந்த இளைப்பாறும் பாரம் பொறுத்தலாலும் ஏருடன் உவமித்தல்.
பான் முல்லை - ஆபரணத்தை யுடையவளை மணந்தவன் துன்பம் நீக்கிய மனத்துடன் விதியை வாழ்த்தல்.
கற்பு முல்லை - மனைவி கணவனின் நன்மையைப் புகழ்தல்.
மேற்படி - கணவன் நீங்கத் தனது காவலைக் கூறல்.
மேற்படி - மாளிகையில் கணவனது செல்வத்தை மனைவி வாழ்த்தல்.

4. ஒழிபு
அணி வகுப்பு
அணி வகுப்பை உணர்த்தும் பழைய சொற்கள் உண்டை, கை, ஒட்டு, யூகம் முதலியன.

திருக்குறள் உரையில் நால்வகை அணி வகுப்புகள் கூறப்படு கின்றன. அவையாவன:-
1. தண்டம்-சேனையை குறுக்காக நிறுத்துவது.
2. மண்டலம்-பாம்பு மண்டல மிடுவதுபோலச் சேனையை நிறுத்துவது.
3. அசங்கதம்-சேனையை வேறு வேறாக நிறுத்துவது.
4. போகம்-சதுரங்க சேனையை ஒன்றுக்குப்பின் ஒன்றாக நிறுத்துவது.
படை வீரர் தமது படைகளைப் பலவாறு அணிவகுத்துப் போர் புரிந்தனர். அவற்றுட் சில வருமாறு:-

தெண்ட வியூகம்-முன்னே சேனைத்தலைவனும் நடுவில் அரசனும் பின் சேனாதிபதியும் இரு புறமும் யானை குதிரைகளும் புறம்பே காலாட்களும் நிற்பது.

சகட வியூகம்-முன்னே சிறிது சேனையும் பின்னால் அதிக சேனையும் இருப்பது.
வராக வியூகம்-முன்னும் பின்னும் சொற்ப சேனைகளும் இடையில் பெருஞ் சேனைகளும் கொண்டிருப்பது.

மச்ச வியூகம்-சிற்றெறும்பின் ஒழுங்குபோல் வது.
காருட வியூகம்-ஊசியை ஒப்பது.
சூசிக வியூகம்-ஊசியை ஒப்பது.
சக்கர வியூகம்-எட்டு வட்டமாக ஒன்றினுள் ஒன்றாக எல்லாத் திசைகளையும் நோக்கி நிற்பது.

சர்வதோபத்திர வியூகம்-எட்டு திசைகளையும் நோக்கி நிற்பது.
பிறை வியூகம்-பிறைபோல் நிற்பது.
1ஆறு, மலை, காடு, கோட்டை முதலியவற்றால் இடையூறு நேர்ந்த காலத்தும் படைத்தலைவனது சேனையை அணிவகுத்துச் செல்லுதல் வேண்டும். முன்னால் ஆபத்துத்தோன்றின் படையினை மகரம் பட்சி ஊசி ஆகிய இவற்றில் ஒன்றாக வியூகம் வகுத்துச் செல்லுதல் வேண்டும். பின்னால் ஆபத்துத் தோன்றின் சகட வியூகமாகவும் பக்கத்தேயாயின் வச்சிர வியூகமாகவும் எல்லாப் பக்கங்களிலுமாயின் எண்கோணம் சக்கரம் அல்லது பாம்பு வியூகங்களில் ஒன்றாக அணிவகுத்துச் செல்லல் வேண்டும். குதிரை யானை காலாள் முதலியவற்றுக்கு வெவ்வேறு அணிவகுப்புச் செய்தல் வேண்டும்.
அரசன்

“சீருலவு மனுநீதி மந்திரி சொல்தன்புத்தி
தேசத் தியற்கை நான்குஞ்
சேர்ந்து செவி விழி மனது மூன்றினும் பொறுமை
சேர்ந்து செங்கோல் செலுத்தித்
தாருலவு கமலங் குமுதங் காலங்கள்
சார்ந்து மலர்கின்ற விதமுந்
தந்தியொடு முதலைபொரு தானபலமுங்கண்டு
தரியலரை வெற்றிகொண்டு
பாருலவு கொடிசேனை தனதானியமுஞ் சகல
பாக்கியமு மிகவிளங்கப்
பற்பல தன்மங்களோடு கீர்த்திப்ரதாபம்
படைத்த திறலோ னரசனாம்”
“மனுநீதி முறைமையும் பரராசர் கொண்டாட
வருமதிக ரணவீரமும்
வாள்விஜய மொடுசரச சாது விசேஷம்
வாசி மதகரி யேற்றமும்
கனமா மமைச்சரும் பலமான துரகமும்
கை கண்ட போர்ப் படைஞருங்
கஜரத பதாதியுந் துரகப்ர வாகமுங்
கால தேசங்க ளெவையும்
இனிதா யறிந்த ஸ்தானா பதிகளொடு சமர்க்
கிளையாத தளகர்த்தரு
மென்றும் வற்றாத் தன தானிய சமுத்திரமு
மேற்றகுள குடிவர்க்கமும்
அனைவோரு மெச்ச விவை யெலாமுடையபே
ரரச ராம்”

“அரசருட் சிறந்தோன் நாடு, அரண், பொருள், படை, பிற அரசரின் நட்பு என்னும் ஆறும் உடையவனாவன். வறியவராய் நலிவெய்தினார்க்கும் வறுமையுற்றிரந்தார்க்கும் காண்டற்கெளியனாய் யாவர் மாட்டும் இனிய சொற்களைக் கூறுபலனா யிருப்பின் அவ்வரசனை உலகம் உயர்த்துக் கூறும். வேண்டுவார்க்கு வண்டுவன கொடுத்தலும், யாவர்க்கும் முகமலர்ந் தினிய கூறலும், முறைமை செய்தலும், தளர்ந்த குடிகளைப் பேணலுமாகிய இந்நான்கு செயலையுமுடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன் (குறள்’)

அரசனது உறுதிச் சுற்றம்
அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர் என்ற ஐம்பெருங் குழுவும், கரும வினைஞர், தரும வினைஞர், தந்திர வினைஞர் பெருங்கணி என அரசியல் வகிக்கும் தலைவரும் அரசனது உறுதிச் சுற்றமாவர். கரும வினைஞர் தேசத்தின் ஆட்சியை நடத்துவர். கணக்கியல் வினைஞர் தேசத் தின் வரி வருவாய்களைக் கவனிப்பர். தரும வினைஞர் நாட்டின் அறங் களைப் பாதுகாப்பர். தந்திர வினைஞர் படைகளில் சம்பந்தமான தலைமை வகிப்பர். பெருங்கணி அரசனுக்குரிய காலங்களையும் நிமித்தங்களையும் கணித்துரைப்பான். இவர்களெல்லாம் அரசனது மந்திராலோசனை கூறுதற் குரியர். மேற்கூறியவாறன்றி கரணத்தியலவர் (கணக்கர்), கருமவிதிகள் (ஆணைநிறைவேற்றுவோர்) கனகச் சுற்றம் (பண்டாரம் வகிப்போர்), கடை காப்பாளர் (அரண்மனை காவலர்), நகரமாந்தர் படைத்தலைவர் யானைவீரர் குதிரைவீரர் என்னும் ஐம்பேராயத்தினரும் அரசனுக்கு உறுதிச் சுற்றத்தின ராவர். இவரையன்றி சாந்து முதலிய வாசனைப் பொருள்களைப் பூசுவோர், மாலைகட்டுவோர், வெற்றிலை மடிப்போர், பாக்கு வழங்குவோர், கச்சுக்கட்டு வோர், நெய் பூசுவோர், மருத்துவர் என்போரும் அரசனைச் சூழ்ந்திருப் போராவர்.

“அரசர்க் குக்குழு வைந்துமந்தியர்
புரோகிதர் சேனா பதியர் தூதர்
சாரண ரென்னச் சாற்றப் படுமே”
“மந்திரி யானவ ரரசர்க் குத்துணை
யிருந்தா லோசிப் பவரே யென்ப”
“புரோகித ரானவ ரரசர்க்கு வரும்
காரிய முரைத்துங் கிருத்திய மவைகளைச்
செயச் சொலுஞ் சோதிட ரென்னச்செப்புப”
“சேனாபதிய ரானவர் படை கொடு
பகைவரை வெல்பவ ரென்னப் பகருப”
“தூதரானவ ரொருவர்க் கொருவர்
சொன்ன செய்தியைச் சொல்பவரென்ப”
“சாரண ரானவர் புறம் பினுண்டாகுஞ்
செய்தி யெல்லாந் தெரிந்துரைப்பவரே”
“அரசர்க் குறுதிச் சுற்ற மைவராவர்
நட்பாள ரந்தனர் நன்மடைத் தொழிலர்
மருத்துவக் கலைஞர் நிமித்திகப் புலவரே”
“நட்பாள ரானவ ரரசன தின்பந்
துன்பந் தமதெனச் சூழ்ந்தியல் பவரே”
“அந்த ணாள ரரசன் வாழ்நாள்
செங்கோல் வளர நீதி செப்புவரே”
“மடைத் தொழி லாளரறு வகை யுண்டிக
ளுடம்பிற் கினியவா யூட்டுவோ ரென்ப”
“மருத்துவக் கலைஞ ருடம்பி னோயறிந்
தன்னாடகப் பரிகாரஞ் செய்பவர்”
“நிமித்திகப் புலவர் பல்லிச் சொன்முதல்
குறிகளை யாய்ந்து கூறுவோரே”

தானாதிபதி மந்திரி சேனாபதி களினியல்பு
“தன்னரசன் வலிமையும் பரராச ரெண்ணமுஞ்
சாலமேல் வரு கருமமுந்
தானறிந் ததிபுத்தி யுண்டாயினோன்
றானாதி பதியாகுவான்
மன்னவர் மனத்தையும் காலதே சத்தையும்
வாழ்குடி படைத் திறமையும்
மந்திரா லோசனையு மெல்லா மறிந்தவன்
வளமான மதிமந்திரி
துன்னிய படைக் குணங் கரி பரிபரீட்சையே
சூழ்பகைவர் புரிசூழ்ச்சியுந்
தோலாத வெற்றியுந் திடமான சித்தியுள
சூரனே சேனாதிபன்”
“காரியா காரியங் கொற்றவர் தெரிந்திடக்
கண்டு சொல்வோன் மந்திரி
காலமுந் தன்பலமு மெண்ணி யிகல்வென்றிடக்
கருதுவோன் றளகர்த்தனாம்
சீரிய தனங்களோடு ராச்சியஞ் சகலமுந்
திட்டமிடுவோன் ப்ரதானி
செய்ய வாசகத்தாட்டி யவதான வக்கணை
சிறக்கு மவனே ராயசன்
சூரியன் றிசை மாறினுந் தான்றொடுத்தவத்
தொகைவிடான் கருணீகனாஞ்
சொல்வன்மை சபைவன்மை பராரசர் வண்மைதெரி
சுமுகனே தனாதிபதி”
“மந்திரியர் கருமாதி காரர் கடைகாப் போர்கண்
மருவுநகர் மாக்கள் சுற்ற
மலைபடைத் தலைவரோ டிவுளி யேறிடுமவர்
மதயானை வீர ரெண்மர்
சந்ததமு மரசருக் குறுதுணைவ ராமியல்பு
தவறாத வந்தணாளா
சாந்தமுறு நட்பாளரொடுமடைத் தொழிலர்நோய்
தனையறிந் தவிழ்த்தமீயும்
புத்தியுண் மருத்துவக் கலைஞருநிமித்திகப்
புலவரிவரைவர் களுமெப்
போதுமர சர்க்குறுதி யாகின்ற சுற்றமிது.”

அரசாளும் முறை
மலையரன் காட்டரண் மதிலரண் நீரரண்
மருவுமிந் நான் கரணமும்
மந்திரிகட ளகர்த்தர் குடிபடை யுடையராய்
வலிய சதுரங்க சேனை
நிலையுடைய ராயெளிய ரெளிதினிற் கண்டுகொள
நேரிடுங் கருணையாளராய்
நிலமுழுதுங் குடிகள் பாலாறி லொருகடமையின்
னிதி கொண்டு தனது நாட்டிற்
கலக மிடுவோர்களைக் கொலை களவினோர்களைக்
கனதுட்ட மிருகங்களைக்
கண்டித்து மனு நூலறிந்து செங்கோலின் முறை
காத்திடுத லரசாட்சிகாண்”

அரண்1
நகரைச் சூழ்ந்து மதிலும் மதிலைச் சூழ்ந்து வெள்ளிடை நீலமும், வெள்ளிடை நீலத்தைச் சூழ்ந்து அகழும், அகழைச் சூழ்ந்து மலையும், மலையைச் சூழ்ந்து காடும் அரண்செய்யும். காவற்காடும், அகழும் மதிலு மாகிய அரண்கள் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. காவற்காடு அகழைப் புறஞ்சூழ்ந்து பலவகை முள் மரங்கள் நெருங்கி வளரப் பெற்றதாய் வெகு தூரம் பரந்திருக்கும். அது வஞ்சனை பலவுடையதாய் மழு முள் முதலியன பதிக்கப் பெற்றிருக்கும். அதனைக் காவல் செய்திருக்கும் வேட்டுவர் அரண் பல அவ்விடத்துண்டு. கோட்டையை அடுத்து அகன்று ஆழ்ந்த அகழ் உண்டு. அதனிடத்தே பெரிய முதலைகளும் ஆட்களை விழுங்கும் பெரிய மீன்களும் வாழும். நாட்டில் பெருகும் கழி நீரெல்லாம் கற்படை (மதகு) வாயிலாக வந்து இவ் வகழிலே விழும். இதனை அடுத்துள்ள மதில் புற மதிலெனப்படும். மதிலின் மேல் பலவகைப்பட்ட இயந்திரப் பொறிகளும், அம்பு எய்து மறைதற்குரிய பதுக்கிடங்களு முண்டு. அது ஏணி முதலியவற் றிற்கு எட்டாத உயரமும், பகைவர் தகர்க்க முடியாத திண்மையும் அகலமும் உடையது. அதன்வாயில் பல உயரமான வேலைப்பாடுகள் பெற்று பெரிய இரும்பினாலே கட்டிச் செவ்வரக்கு உருக்கி வழிக்கப்பட்டது. நிலையைத் தாங்கி நிற்பதாகிய சுவரின் பகுதி (உத்தரக் கற்கவி) இரண்டு யானைகளின் நடுவே திருமகள் வீற்றிருக்கும் வடிவமுடையதாய் அமைக்கப்பட் டிருக்கும். இடை வெளியில்லாமற் கடாவிய பல மரங்களின் கூட்டமாகிய நிலை நெய்பூசி வெண் சிறுகடுகு அப்பப் பெற்றிருக்கும். கதவுகள் ஒன்றோடு ஒன்று வாய் சேரும்படி இரண்டாகச் செய்யப்பட்டுத் தாழுடன் பொருத்தப் பட்டன. அதன் கதவுகள் உட்புறத்தே திரண்ட மரங்களினால் தாழிடப்பட் டிருக்கும். வெற்றிக் கொடியுடன் யானைகள் செல்லும்படியாக வாயில் உயர்ந்திருக்கும். அதன்தோற்றம் வெள்ளிமலையை இடையே திறந்தாற் போன்றது. வாயிலிடத்தே பந்தும் பாவையும் பசியவரைகளுடைய புட்டி லும் அவற்றை எறிந்து விளையாடும் மகளிராகிய பாவைகளும் அம்பின் முனையிற்கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அங்ஙனம் தூக்குவது பகைவரை மகளிராக்கி அவற்றை அவர் கொண்டு விளையாடுதற்கேயாம். பந்திற்கும் பாவைக்கும் பதில் சிலம்பினையும் தழையினையுங் கட்டித் தொங்கவிடுதலுமுண்டு. “சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கினவென் றது, ஈண்டு பொரு வீருளரேல் நும் காலிற் கழலினையும் அரையிற் போர்க் குரிய உடையினையு மொழித்து சிலம்பினையும் தழையினையும் அணிமி னென அவரைப் பெண்பாலாக்கி இகழ்ந்த வாறென்க.”1

மலையுள்ள விடங்களிலே அம்மலை தானேஅரணாகவும் வளைந் திருக்கும். மதில் வாயிலுக்கு அடுத்துள்ள அகழ் பலகைகளினால் மூடப்பட்டு போக்கு வரத்துக் கேற்றதாயிருக்கும்.போர்க்காலங்களில் அப்பலகைகள் எடுத்துவிடப்படும். வெளிமதிலின் உட்புறத்துள்ளது இடைமதிலெனப் படும்.

நெடுங்காலம் அடைமதிற்பட்ட காலத்து உணவுப்பொருள்களை விளைவித்தற் பொருட்டு மதிலகம் குளமும் வயல்களுமுடையதா யிருக்கும்.

“அது வஞ்சனை பலவும் வாய்ந்து தோட்டி முண் முதலியன பதிந்து காவற் காடு புறஞ் சூழ்ந்ததனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத் தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனரியற்றிய பல பொறிகளும், ஏனைய பொறிகளும் பதணமும் மெய்ப்புழைஞாயிலும் ஏனைய பிறவு மமைந்து எழுவுஞ் சீப்பு முதலியவற்றால் வழு வின்றமைந்த வாயிற், கோபுரமும் பிறவெந்திரர்களும் பொருந்த வியற்றப்பட்டதாம்.

“இனி மலையரணும் நிலவரணும் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போலவே வடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்கள் அமைந்தனவும் அன்றிக் காட்டரணும் அவ்வாறே வேண்டுவன அமைந்தனவாம்.

(ந. உரை) மூவகை ஆற்றல் உடையராய் பிறர்மேற் செல்வார்க்கும், அவையின்றித் தத்தம் மேல்வருவார்க்கும், அஞ்சித்தன்னையே அடை வார்க்கும் அரண் சிறந்தது. மணிபோன்ற நீரும் வெள்ளிடை நிலமும் மலையுங் குளிர்ந்த நிழலையுடைய காடுடையதும், ஏணி எய்தாத உயரமும் புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும் அகத்தோர்க்கு நின்றாள்வினை செய்யலாந் தலையகலமும் செங்கட்டி கல் முதலியவற்றாற் செய்தமையின் தகர்க்கலாகாத திண்மையும் உடைய கோட்டையுடையதும் சிறந்த அர ணாகும். காக்கவேண்டிய இடம் சிறியதாயும் உள்ளே அகன்ற இடமுடைய தாயும் அகத்தார் புறத்தார்மேல் அம்பு முதலியவற்றைச் செலுத்திப் போர் செய்தற்கரிய தன்மையுடையதாயும், அகத்தோர்க்கும் பொருள்கள் எல்லா வற்றையும் உள்ளேயுடையதும் புறத்தோரால் அழிவெய்து மெல்லைக்கண் அகந்து எய்தா வகை நல்ல வீரரையுடையதே அரணாவது. வீரர் உள் ளிருந்து வெளியே செல்லாவாறும், வெளியே இருந்து உள்ளே புகாவாறும் நெருங்கிச் சூழ்ந்து முற்றுகை இட்டும், அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த விடம் நோக்கி ஒரு முகமாகப் போர் செய்தும் துணிவுடையோரை ஏவிக் கத வினைத் திறந்தும் அகத்தோரைப் புறத்தோர் கொள்ளுதற்கரியது அரண். படைப் பெருமை சூழ்தல் வல்லவராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும் அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாது நின்று பொருது வெல்வதரண். போர் தொடங்கிய வளவிவே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் தொழில் வேறுபாட்டால் வீறுபெற்று மாட்சிமைப்பட்டதே அரண். மாட்சி என்றது புறத்தோரறியாமற் புகுதல் போதல் செய்தற்கு சுருங்கைவழி முதலிய வுடையதை. அரண்மேற் சொல்லப்பட்ட சிறப்புகளுடையன வாயினும், ஏற்ற தொழிலை அளவறிந்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியும் (குறள்.)

ஆயுதங்கள்
வில், அம்பு, பிண்டி, பாலம், சூலம், மழு, எழு, வாள், கவசம், தோமரம், கதை, தண்டம், நாராசம், இரும்புமுள், கழுமுள் கூன்வாள், சிறுவாள், கொடு வாள், அரி வாள், சுழல் படை, ஈர் வாள், உடை வாள், கை வாள், கணையம், கோடாலி, தோட்டி, வேல், வச்சிரம், குறுந்தடி, ஈட்டி, கவண், சிறுசவளம், பெருஞ்சவளம், சக்கரம், கன்னம், உளி, பாசம், தாமணிசாலம், ஊசி, முசுண்டி, முசலம், இடங்கணி, அள், பலகை முதலியன முற்காலத்தவர்கள் உப யோகித்த யுத்த ஆயுதங்களாகும்.

ஆயுதங்கள் சிலவற்றின் வடிவம்
அம்பு-இரண்டு முழநீளமுடையதாய் அடியில் இறகுகட்டப்பட்டது. வேல்-பலமான பிடியுடையதாய் மார்பளவு நீளமுள்ளது. ஈட்டி-இதன் அலகு நாவிதன் கத்தி போன்றதாய் கைபிடி இறுக்கப்பெற்று நான்கு முழ நீளமுடையது. குந்தம்-சங்கைப்போன்ற கைபிடியுடைய தட்டை வடிவின தாய் பத்துமுழ நீளமுடையது. சக்கரம் ஆறுமுழச் சுற்றளவுடையது; நாவிதன் கத்திபோன்ற அலகுடையதாய் நடுவிற் பிடித்துச் சுழற்றும் கைபிடி யுடையது. பாசம்-மூன்று ஊசிகள் இறுக்கப்பெற்று இரும்பால் முறுக்கிய கயிறுடைய தடி. கவசம்-உடம்பின் மேலுறுப்புகளைக் காப்பது. தலையைக் காக்கும் தொப்பி கோதுமையளவு கனமுள்ள இரும்புத்தகட்டாற் செய்யப் பட்டது. கரசம்-இரும்பாற் செய்யப்பட்ட கூரிய முனையுடையது. படைக் கலங்களைத் தடுக்கும் கருவிகள் வலகை, கேடகம் முதலியன. கேடகம்-வட்டவடிவினதாகத் தோலினாற் செய்யப்பட்டு உட்புறத்தேகையில் கொளுவிப்பிடிக்கக்கூடிய கைபிடியுடையது. பலகை-பலரைத் தாங்கக் கூடியதாக நீளமாகக் செய்யப்பட்டதாயிருக்கலாம். கவசம்-புலித்தோலி னாலாவது இரும்பினாலாவது செய்து உடம்பில் சட்டை போல் அணியப் பெறுவது. காலாட்கள் கவசமணிவது சிறப்பின்று.

ஆயுதவகை இரண்டு
“ஆயுதவகை யிரண் டத்திரஞ் சத்திரம்”
“அத்திரங் கைவிடு மாயுதமென்ப
சத்திரங் கைவிடா வாயுத மெனத்தகும்”

இரதம்
போரில் உபயோகிக்கும் தேர் இலகுவில் உருளக்கூடிய சில்லுகளை உடையது. அதன் முற்புறத்தின் சாரதிக்கு இடமுண்டு. அதனிடத்தே பல வகை எறி கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். மேலே கொடிகள் நாட்டப் பெற்றும் பக்கங்களில் மணி கோத்துக் கட்டப்பெற்றும் அலங்கரிக்கப் பட்டிருக்கும். வீரர் முதுகில் அம்பறாத் தூணி கட்டியவர்களாய் மத்தியில் நின்று வில்லை வளைத்தும் பாணங்களைச் செலுத்திப் போர் செய்பவர். சேம விற்களும் தேர்களில் வைக்கப்பட்டிருக்கும்.

இருவகைப் போர்
ஒரு வேந்தன் மாற்று வேந்தனின் அரணை வளைத்துப் பொருது கோட்டையைக் கைப்பற்றல் ஒன்று. போர் கருதிய இரு வேந்தரும் ஓர் இடத்தைப் போர்க்களமாகக் குறித்து அதனிடத்தே கை கலந்து போர் செய்வது மற்றொன்று. இருவர் பாசறைக்கும் மத்தியில் உள்ளவிடமே போர்க்களமாகும்.

உன்னம்
உன்னம் என்பது ஓர் மரம். இது தன்னாட்டகத்துக் கேடு வருங்காலம் உலறியும் வராதகாலம் குழைந்தும் நிற்கும்.

காவல்மரம்
பண்டைக்காலத்துத் தமிழரசர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக் கறிகுறியாக ஒவ்வோர் மரத்தைத் தமது ஊர்ப்பக்கத்துச் சோலைகளில் வைத்து, வளர்த்து அதனைக் குறிக்கொண்டு காப்பர். படையெடுத்து வரும் பகைவேந்தர் அக் கடிமரத்தையே முதற்கண் கடிய முற்படுவார்கள்; அங்ஙனம் அதனை அவர்கள் தடித்துவிடுவார்களானால், அம் மரத்துக் குரிய அரசருக்குப் பெருந் தோல்வியும் பேரவமானமும் எய்தியதாகக் கருதப்படும். பகைவேந்தர்கள் அம் மரத்தில் தம் யானைகளைக் கட்டுதலும், அதனை வெட்டிக்கொண்டு போய்த் தங்கள் யானைகட்குக் கட்டுத்தறியாக நட்டு வைத்தலும் அம் மரத்தால் தங்களுக்கு வீரமுரசஞ் செய்தலும் மரபு.

கைப்போர்
இடக் கையினாற் குடுமியைப் பற்றி இழுத்து நிலத்தில் வீழ்த்திக் கால் களால் அடித்தல், தலையில் உதைத்தல் நெஞ்சை முழங்காலால் அழுத்தல், கையை முட்டித் துக்குத்துதல், முழங்கையாற் குத்துதல், அடித்தல், சருவுதற்கு வசதியான இடங்களை ஆராய்தல் முதலியன ஆயுதமில்லாது போர் புரிவோர் செய்கைகளாம்.

சேரன்

“சேர னானவன் றிகழ்சீர் வஞ்சியுங்
குடக நாடுங் கொல்லி மலையும்
பொருகை யாறும் புகழ்பனை மாலையும்
பாடல மென்னப் பகருங் குதிரையும்
விற் கொடி யுமுள னென்ன விளம்புப”

சேனைத்தொகை
“சேனைத் தொகைபத் தாமவை பதாதி
சேனாமுகங் குமுதங் கணகம் வாகினி
பிரளயஞ் சமுத்திரஞ் சங்க மநீக
மக்கு ரோணி யென்ன வறையப்படுமே”
“பதாதியாவது யானை யொன்று
தே ரொன்று பரிமூன்றா ளைந்து
கூடிய தென்னக் கூறப் படுமே
பதாதி முதல் மேன் மேன் மும்மடி
கொண்டதாஞ் சேனா முக மாதியவே.”

யானை ஒன்று குதிரை மூன்று தேர் ஒன்று காலாள் ஐந்து கொண்டது ஒருபத்தி. இந்தப் பத்தி மூன்று கொண்டது சேனாமுகம். சேனாமுகம் மூன்று கொண்டது குமுதம். குமுதம் மூன்று கொண்டது கணம். கணம் மூன்று கொண்டது வாகினி. வாகினி மூன்று கொண்டது பிரளயம். பிரளயம் மூன்று கொண்டது சமுத்திரம். சமுத்திரம் மூன்று கொண்டது அநீகினி. அநீகினி பத்துக் கொண்டது அக்குரோணி எனப்படும். அக்குரோணிக்குத் தேர் 21870, யானை 21870, குதிரை 95610, காலாள் 109350.

இன்னொரு வகை:-சமுத்திரம் மூன்று கொண்டது சங்கம். சங்கம் மூன்று கொண்டது அநீகம். அநீகம் மூன்று கொண்டது அக்குரோணி. அக்குரோணி எட்டுக் கொண்டது ஏகம். ஏகம் எட்டுக் கொண்டது கோடி. கோடி எட்டுக் கொண்டது மகாசங்கம். மகாசங்கம் எட்டுக் கொண்டது விந்தம், விந்தம் எட்டுக் கொண்டது குமுதம், குமுதம் எட்டுக் கொண்டது பதுமம். பதுமம் எட்டுக் கொண்டது நாடு, நாடு எட்டுக்கொண்டது சமுத்திரம், சமுத்திரம் எட்டுக் கொண்டது வெள்ளம்.

“ஒருபெருந் தேரு மிருபெருங் களிறும்
துரக நான்கும் படைஞ ரைவருங்
கொண்டது பதாதி யென்பதாகும்
பதாதி முறை வழுவாமன் மும்மடங்கு
கொண்டது சேனை யென்பதாமே
ஆங்கது மும்முறை கொண்டது குன்மங்
குன்ம மும்முறை கொண்ட தனீகினி
அனீகினி ஐம்பதிற் றிரட்டு யோடாயிரங்
கொண்ட தக்குரோன யென்ன மொழிந்தான்
மூவகை யுலகமு முறைபட வேத
பாரதம் பகர்ந்த பராசரன் மகனே” (பெருந்தேவனார்பாரதம்)

சோழன்
சோழனானவன் றோல்லுறையூரூம்
தண்புன னாடும் தனி நேரி மலையுங்
காவிரி யாறுங் கவினார் மலையுங்
கோர மென்னுஞ் குதிரையும் வரிப்புலிக்
கொடியு முடையவ னென்னக் கூறுப.

துணங்கை
வீரர் ஆடுங் கூத்து,
“முடக்கிய இருகை பழுப்பு டையொற்றித்
துடங்கிய நடையது துணங்கை யாகும்”

தேரளாளர் நால்வகையினர்
அதிரதர்-தம்மையும் தமது சேனையையும் காத்துக்கொண்டு பல தேர்வீரர்களோடு போர்செய்யும் வீரர்.
மகாரதர் தம்மையும் தாமேறிய தேர் குதிரை சாரதி சேனைகளையுங் காத்துக்கொண்டு சில போர்வீரரோடு போர்செய்பவர்.
சமரதர்-தம்மையும் தம்முடையதேர் சாரதி குதிரைகளையும் காத்துக்கொண்டு ஒரு தேர்வீரனோடு போர்செய்பவர்.
அர்த்தரதர்-தம்மைமட்டுங் காத்துக்கொண்டு ஓர் தேர் வீரனோடு போர்செய்பவர்.

நகர்
கோட்டை வாயிலைக் கடந்து செல்லின் அதனைக் காவல் புரிவோர் நெருங்கியுறையும் விதிகளும், மீன் விலைஞரும், உப்பு வாணிகரும், கள் விற்போரும், பிட்டு அப்பங்கள் விற்போரும், வாசனைப்பண்டம் விற் போரும், இறைச்சி விற்போரும் வசிக்கின்ற வீதிகள்தோன்றும். இவ் வீதி களையடுத்து மட்கலஞ் செய்யுங் குயவர்களும், செம்பு வேலைசெய்வோர், வெண்கலக் கன்னார், பொற்கொல்லர், தச்சர், மட்பாவை செய்வோர், தையற் காரர், மாலை கட்டுவோர், சோதிடர், பாணர் முதலியோர் தெருக்களும், சங்கறுப்போர் இரத்தினப் பணியாளர் வீதிகளும்,நாடகக் கணிகையர் வீதியும், நெல்லுப் புல்லு முதலிய கூலவகை விற்போர் தெருவும், சூதர் மாகதர் வேதாளிகர் பொதுமகளிர் தெருக்களும், ஆடை நெய்து விற்போர், பொன் வாணிகர் இரத்தின வியாபாரிகள் வீதிகளும், அந்தணர் அக்கிரா காரமும் இராசவீதியும், மந்திரிகள் வீதியும், பல்வகை அரசாங்க அதிகாரிகள் வாழும் தெருக்களும் அமைந்திருக்கும். இவையேயன்றி யாவரும் வந்து தங்குதற்குரிய மரத்தடிகளும் அம்பலமும் முச்சந்திகளும் அருவியோடும் அழகிய செய்குன்றுகளும் அறச்சாலைகளும் பொன்னம்பலமும் விளங்கும். இவற்றின் மத்தியில் அரசனது அரண்மனை பொன்மயமான மேருப் போல் விளங்கும். அதன்கண் கொலுவிருக்கை மண்டபமும் மந்திராலோசனைச் சபையும் சமயத்திருக்கையும் நடன சாலையும் மாட்சிமைபெற்று விளங்கும் (மணிமேகலை.)

பட்டினம்

“பக்கமொரு நாற்காத நீளஞ் சவுக்கமாய்ப்
பலர்கணிறை தருமா வணம்
பனிவாவி மாடமாளிகை மேடை கோபுரம்
பகரால யங்களுடனே
மிக்கரத கசதுரக பதாதிகே தனமாடல்
வேசையர்க ளாடல் பாடல்
வீதியிருபாலினுந் தாழைகமு கஞ்சோலை
மேவுமொளி சூழு மணிக
டக்கபுக ழந்தணர்கண் மன்னர் மந்திரிமுதற்
சகலசா தியரு முளதாச
சற்சனரோ டட்டலட் சுமிவாச முள்ளதே
சதுரங்க பட்டண மதாம்.”
“பரத கீதப் ரபல வேசியர்களாடலும்
பாடலும் பெறு கோயிலும்
பலவாவி மண்டபங் கோட்டை யரணங்களோடு
பலர் மேவு கடை வீதியும்
இரத கஜ துரகம் பதாதிச துரங்கபல
மேற் கின்ற தளகர்த்தனு
மெண்ணமிகு மந்திரிப் ரதானி தானாபதிய
ரியலுத்தி யோக சனமும்
விரதமறை யோராதி நாற்குலமு மொன்றென்று
மிக்க சோடச தானமு
மேலாயச் சமீபித்த நதியுமாய் மனு நீதி
வேந்தனும் பெறு பட்டணம்.”

நால்வகை நிலை
வில்லாளர்களது நிலை ஆலீடம், மண்டிலம், பிரத்தியாலீடம், பைசாசம் என நாலுவகைப்படும்.

ஆலீடம்-வலக்காலை மண்டியிட்டு இடக்காலை முன் வைத்து நின்று பாணஞ் செலுத்துதல்.

மண்டிலம்-இருகால் மண்டியிட்டு நிற்கும் நிலை.
பிரத்தியாலீடம்-வலக்காலை முன்வைத்து இடக்காலையிட்டு நிற்றல்.
பைசாசம்-ஒருகாலிநின்று ஒருகால் முடக்குவது.

“நிலைநான் காகு மவைபை சாசம்
மண்டல மாலீடம் பிரத்தியாலீட
மிவைவிற் றொடுத்தம் பெய்வார்க்குரியவே”
1“பைசாச நிலையொரு காலினின் றொரு
காலை முடக்க லென்னக் கழறுப”
2“மண்டல நிலையிரு காலும் பக்கல்
வளையமண் டலித்த லென வழங்குப.
3“ஆலீட நிலை வலக்கான் மண்டலித்
திடக்கான் முந்துற வென்ன வியம்புப”
4“பிரத்தி யாலீட நிலைதான் வலக்கான்
முந்துற் றிடக்கான் மண்டலித்தலே”

நால்வகை உபாயம்
சாமம் பேதம் தானம் தண்டம்

“சாம வுபாயம் சமாதா னம்மே’
“தான வுபாயம் பொருளைத் தருதலே”
“பேத வுபாயந் துணைவலி பிரித்தலே”
“தண்ட வுபாயம் படைகொண்டு தாக்கலே”

படை
போரின்கண் மடிவதற்கஞ்சாது யானை தேர் குதிரை காலாள் என்னும் நாற்படையுடனும் நின்று பகையை வெல்வதாகிய படை அரசனுடைய செல்வங்களெல்லாவற்றுள்ளும் தலைமை பெற்றது. சிறிய படையாயினும் அரசனுக்குப் போரிடத்தே அசைவுவரின் தாம் மேற் செல்வதற்கஞ்சாது நின்று போர் கொடுக்கும் வன்கண்மை அரசனது முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கு (மூலப்படைக்கு) அல்லது உளதாகாது. எலியாய பகை திரண்டு கடல்போல ஒலித்தால் நாகத்துக்கு என்ன துன்பம் வரும்? அந் நாகம் மூச்சு விட்ட துணைத்தானே அவ்வெலிப்படை தானேகெடும். அதுபோல வீர ரல்லாதார் பலர் திரண்டார்த்தால் அதற்கு வீரனஞ்சான். போரின் கட்கெடுத லின்றி பகைவரால் கீழறுக்கப்படாத தாய்த்தொன்று தொட்டதறுகண்மை யுடையதே. அரசனுக்குப் படை. கூற்று வன்றானே வெகுண்டு மேல் வந் தாலும் நெஞ் சொத்து எதிர் நின்று மாற்றலுடையதே படை. தறுகண்மையும் மானமும் முன் வீரராயினார் சென்ற நெறிக்கட் சேறலும் அரசனாற் றேறப் படுத்துமென இருநான்கு குணமுமே படைக்கு அரணாவது. பகைவரால் வகுக்கப் பட்டுத் தன்மேல் வந்தபகையின் போரை விலக்கும் விலக்கறிந்து அணிவகுத்து அவர்கள் தூசியைத் தன்மேல் வராமற்றடுத்துத் தான் அதன் மேற் செல்வதே படையாவது. அது பகைமேற்றான் சென்று அடுந்தறு கண்மையும் தானை தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லை யாயினும் (தான்) அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும் பதாகைகொடி பல்லியம் காளம் முதலியவற்றுடனும் பொலிவெய்தும். தான் தேய்ந்து சிறிதாகிலும் மனத்தினின்றும் நீங்காத வறுமையும் வெறுப்பும் தன் படைக் கில்லையாயின் படை பகையை வெல்லும். போரின் காண் நினைவுடைய வீரரை மிகவுடைத்தே யாயினும் தானைக்குத் தலைவராகிய வீரரில் வழி தானைநில்லாது (குறள்.)

படைச் செருக்கு
பகைவீர்! இன்று இங்கு என் தலைவன் எதிர் போர் ஏற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர். நீர் அதன் கண் அல்லாது நும்முடற் கண்ணிற்றல் வேண்டின் என்றலைவ னெதிர் போரேற்று நிற்றலை யொழிமின். கானத்தின் கண் ஓடும் முயலை பிழையாமலெய்த அம்பை ஏந்தலினும் வெள்ளிடை நின்ற யானையை யெறிந்து பிழைத்த வேலை யேந்துதல் நன்று. மாற்றரசன் படையோடு பொருதானொரு வீரன் அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் இதனைத் தனக்குட் சொல்லலுற்றான் பகைவர் மேற்றறுகண்மையினாற் செய்யும் வீரத்தை நூலோர் மிக்க ஆண்டன்மை என்பர். அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயிற் கண்ணோடி அது தீர்த்துக்கோடற்கு உபகாரியாந்தன்மை எய்தல் அதற்குக் காரணம் என்று சொல்லுவர். அஃதாவது இலங்கையர் வேந்தன் போரிடைத்தன் றானை முழுதும் படத்தமியனாக்கப் பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியரிறை மேற் செல்லாது இன்றுபோய் நாளை நின்றானை யோடு வாவென விட்டாற் போன்றது. தன்கைப் படையாகிய வேலைத் தன்மேல் வந்தகளிற்றோடு போக்கி வருகின்ற களிற்றுக்கு வேனாடித் திரிவான் தன் மார்பின்கண் நின்றவேலைக் கண்டு பறித்துமகிழும் (இதனால் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடைப்போழ் நத்தறிந்தி லனென்பதூஉம், பின்னும் போர்மேல் விரும்பினனென்பதூஉம் பெறப்பட்டது.) பகைவரை வெகுண்டு நோக்கியகண் அவ்வேலைக் கொண் டெறிய அஃதாற்றாது அந்நோக்கை யழித்து இமைக்குமாயின் அது வீரர்க்குப்புறங் கொடுத்தலாம். தனக்குச் சென்ற நாள்களை எடுத்தெண்ணி அவற்றுள் முகத்திலும் மார்பிலும் புண்படாத நாள்களை யெல்லாம் பயன் படாது கழிந்தநாளுள்ளே வைக்கும் வீரன் (குறள்)

படைசெல்லும் காட்சி
“சின்னமுஞ் சங்குந் தாரையுங் கொம்புஞ் செம்பொனின் காளமுங் குழலுந்-துன்னுவங்கியமுந் தம்முனெம் மருங்குந் தொகுபுவி செவிடுறக் கறங்க.”

“சீர்மணி தாளஞ் சச்சரி கஞ்சஞ் சிலம்பவின்றண்ணுமை தடாரி-பேரிகை கரடி மத்தளஞ் சல்லி பெரும்பறை துடிகடி முரசம்-பார்புக ழடக்கை யுடுக்கை நன்னியாளம் படகம் வண்டிமிலை தெண்டுடுமை-வார்படு படகம் பெருந்தகு ணிச்ச மெங்கணும் வானுற முழங்க.”

“வில்லொடு கணைவாள் கேடகங் கடகு வென்மழுக் கடைத்தலைக் கழுக்கோ-றொல்கதை பாராவளை வளையெறிகோல் சுரிகை பத்திரங் கொடுங் கணிச்சி-பல்விதமுயலங் குந்தமொண் பிண்டி பாலம் வெஞ்சூல நீள் கழைக்கோல்-கொல்லெழுக்கோல் முதலிய வளவில் கோடி பல்படைக் கலம் பிறங்க”

“பொருந்து பூங்கொடிக ளாடைகளாடப் பொருவருஞ் சாமரை யிரட்டத்-திருந்து பல்கவிகை நிழற்ற வெம் மருங்குஞ் சேர்தரு தோரைகள் வீச-நெருங்கடையாளந் துளங்க மட்பாம்பு நெளிய நுண்டூளி வான் முட்டப் படர்ந் தொலிமிக்கு நடந்தது பெரும் படைச்சாத்து. (நம்பி திருவிளையாடல்.)

படைத்தலைவர் இடும் கட்டளை
வீரர்களுக்கு இடப்படும் கட்டளைகள் வாத்தியங்களை வெவ்வேறு வகையாக ஒலித்துச் செய்யப்படும் என்றும் ஒரு படையினருக் குரிய அடையாளங்களை மற்றவர்கள் அறிதல் கூடாதென்றும் சுக்கிர நீதியிற் சொல்லப்படுகிறது.

படையின் வகை
1“யானை தேர் குதிரை காலாள் எனப்படை நால்வகைப்படும். இவற் றோடு விற்படை வேற்படைகளையும் சேர்த்து படையினை அறுவகை யாகவும் கூறுவர் “தேர்த்தானை பரித்தானை களிற்றுத்தானை என ஆற்றல் சான்ற அறுவகைத் தானை” (திவாகரம்)

மூலப்படை கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை துணைப் படை, பகைப் படை எனப் படை ஆறு வகையாகவுங் கூறப்படும்.

மூலப்படை-அரசனிடத்து நெடுங்காலமாக உள்ள படை. கூலிப்படை-கூலி பெறுவதற்காகப் போர் செய்யும் படை. நாட்டுப்படை-போருக்கு உதவக்கூடிய நாட்டிலுள்ள படை. (Volunteers) காட்டுப்படை-காட்டில் வசிக்கும் வேடர் ஆகியபடை. துணைப்படை-துணை அரசர் களுடைய படை. பகைப் படை-பகை அரசரிடத்திருந்து யுத்தத்தில் அகப் படுத்தப் பட்டவர்கள், அல்லது பகைவரிடமிருந்து விலகியவர்கள்.

பாசறை
மாற்றார்மீது சென்ற படை அவரது காவற்காட்டை வெட்டி அழித்து அங்கு காவல் காத்து நின்ற வேட்டுவர் அரண்களை அழித்து அதனிடத்தே பாடிவீடு அமைப்பர் முதற்கண் பாசறை அமைத்தற்குரிய இடம் முட்களால் வளைத்த தடைத்த அரண் செய்யப்படும். அதனகத்தே வீரர்கள் விற்களை நாற்புறங்களிலும் நட்டுப் பரிசைகளை நிரையாக நிறுத்தி வைத்து விற்களிலே துணிகளைத் தூக்குவர். குத்துக்கால்களை நட்டுக் கயிற்றினால் இழுத்துக் கட்டிய கூடாரம் பலவகைத் தழைகளினால் வேயப்பட்டிருக்கும். படைகள் தங்கியிருக்கும் இடத்தின் ஒரு பகுதியை வீரர் எல்லோரும் சேர்ந்து அரசனுக்குக் கோயிலாகத் தெரிந்தெடுத்துக் கூடமாக எறிகோல்களை நட்டுக் குத்துக்கால்களில் தைக்கப்பட்ட பலநிறத் திரைச் சீலைகளை மறை வாக வைப்பர்.

வாயில் முகப்பில் புலிசங்கிலியிற் கட்டப்பட்ட வடிவினதாகிய சித்திரம் யௌனவரால் சித்தரிக்கப்பட்டிருக்கும். குழாய்களில் நெய்யுமிழும் திரிகளைக் கொளுத்திச் சிற்றாட்கள் எங்கும் விளக்குகளை எங்கும் ஏற்றுவர். விளக்குகள் அவியுந்தோறும் அவர்கள் பந்தங்களைக் கொளுத்திப் பிடிப்பர். காலத்தின் அளவை அளந்து சொல்லுவோர் அரசனை வணங்கி வாழ்த்தி நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்தனை என்று கூறுவர். அஞ்ஞான்று தூவெண்டுகிலுடுத்த பெண்கள் ஆலத்தி காட்டுவார். அரசன் திரைச்சீலையைத் தூக்கி உள்ளறையில் நித்திரைகொள்ளும்படி செல்வான்1. நடுயாமத்துத் தலைப்பாகையுங் சட்டையும் தரித்த மெய்க்காப்பளரும் ஊமைகளும் அரசனைக் காவலாகச் சூழ்ந்து திரிவார். அரசன் ஒரு கையைப் படுக்கையின்மேல் வைத்தும் ஒரு கையை முடியுடன் சேர்த்தியும் இருந்து, யானையை எறிந்து பட்ட வீரரை நினைந்தும், அம்பு தைத்த வருத்தத்தால் செவி சாய்த்துப் புல்லுண்ணாமல் நின்று குதட்டும் குதிரையை நினைத்தும், இப்படை நொந்த அளவுக்கு நாளை எவ்வாறு பொருதுமென்று நினைத்தும் நடு நடுங்குவான். தெருவின் நாற் சந்திதழையால் வேய்ந்த கூரையுடையது. அதனிடத்துக் காவலாய் நிறுத்தப்பட்ட யானை கரும்பையும் நெற்கதிரோடு கலந்து கட்டிய இலையையும் அதிமதுரத் தழையையும் உண்ணாது அவற் றால் தமது நெற்றியைத் துடைத்தும் அவற்றைக் கொம்பின் மேல் போட்டுக் கையிட்டதே கொண்டும் நிற்கும். யானைப் பாகர் யானைப் பேச்சாகிய வடமொழியைச் சொல்லிக் கவர்பட்ட பரிக்கோலாலே கவளத்தைத் தின்னும்படி யானைகளைக் குத்துவார்.

2மாற்றார் வாளாற் போழ்ந்த வீரரின் புண்ணைப் பரிகரித்ததற்கு அரசன் நித்திரை கொள்ளாது புறம்போந்து திரிவான். வாடைக் காற்று வீசுந்தோறும் விளக்குகள் தெற்கு நோக்கிய தலையுடையனவாய் எரியும். வேப்பமாலையைத் தலையிலே கட்டிய வேலுடன் முன் நடந்து செல்கின்ற சேனாதிபதி புண்பட்ட வீரரை முறையே முறையே காட்ட அவர்களுக்கு அகமலர்ந்து இன்னுரை கூறுவான். ஆங்காங்கு கட்டப்பட்டுள்ள குதிரைகள் தம் மீது வீழ்கின்ற மழைத்துளிகளை உதறும் அரசன் வாளெடுத்தற்கு தோளிலே வைத்த வலக்கையனாய் இடத்தோளில் நின்றும் நழுவி வீழ் கின்ற உத்தரீயத்தை இடப்பக்கத்தே அணைப்பான்.

“பாசறையிடத்து மதத்தையுடைய யானை கம்பத்தே நின்றசைந்தது; தம்மிடத்தே வாள் இல்லாதவர்கள் முத்துமாலை தூங்கும் வெண்கொற்றக் குடையே காவலாக உறங்கினார்கள். அசைகின்ற நெற்கதிரால் வேயப் பட்டதும் மெல்லிய கரும்பாற் கட்டப்பட்டதுமாகிய ஒழுங்குபட்ட கூரை விழாவெடுத்த களம்போல் செய்யப்படட இதழையுடைய பசிய தும்பை யோடு பனந் தோட்டைச் செருகிச் சினத்தையுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தொலி கடலொலி போலப் பொங்கப் படைப் பெருமையால் பகைவருட்கும் மதிப்புடைமையின் இடங்காவாது பரந்து கிடக்கின்ற அகன்ற பாசறையிடத்துக் காவலாள்.” (புறம்-உரை.)

பாண்டியன்

“பாண்டிய னானவன் பகர்சீர்ப் பொருநையுஞ்
செந்தமிழ் நாடுந் திகழ்பொதி யமலையும்
வையை யாறும் மலிவேம் பாரமும்
கனவட்ட மாகக் கழறுங் கற்கியு
மீனக் கொடியு முளனென விளம்புப.”

போர்
யானைக் கூட்டங்களையுடைய அரசர் போர் செய்தற்கு எழுந்த கொலைக்களம் விழாக் களம் போன்றது. மகிழ்ச்சி மிகுந்தவர்களும் ஆண்மையுடையவர்களுமாகிய போர் வீரர் ஒருவரோடு ஒருவர் கட்டிப் புரண்டு யுத்த களத்தே மாய்ந்தனர். நீரிலே தோன்றிய நீர்க்குமிழி போலத் தாக்கிய விசையிலே சிதறி நிலத்திலே வீழ்ந்து சிலர் மடிந்தனர். சிலர் கிடயும் கிடாயும் முட்டியதுபோல முகமும் முகமும் சிதறும்படி முட்டினர். சிலர் கையை முட்டித்து ஒருவரை ஒருவர் குத்தினர். சிலர் கைதட்டி நின்று காலைத் தட்டினர். சிலர் கையினாற்றட்டி யிழுத்தனர். வீரர்கள் என்னும் பெயர்வாங்கிய பகைவர் புகழைச் சிலர் கெடுத்தனர். சக்கரம் போலச் சிலர் சங்கை விட் டெறிந்தனர். சிலர் ஒலிக்கின்ற மேளங்களின் தலையை உடைத்தனர். சிலர் மற்போர் செய்தும் வில்லால் எற்றியும் தள்ளியும் உரப்பியும் நோக்கியும் வீரமொழிகளைக் கூறியும் வீரர்களை ஓடச்செய்தும் கோபித்தும் நாக்கைக் கடித்தும் பற்களை நெறுமியும் பலகயிறுகளை வீசியும் போர்க்களத்தே மயங்கித் திரிந்தனர். பிறப்பும் பெருமையும் சிறப்பும் செய்கையுமுடையோ ராகிய யுத்தவீரர் சென்று அடைகின்ற இடம் (வீர சுவர்க்கம்) ஒன்றே ஆதலின் அவர் ஒரே மனத்தினராய் பகைவரைக் கொன்று செஞ்சோற்றுக் கடன் தீர்த்துத் தமது பிணத்தைத் தமது மனைவியர் தழுவி வருந்தி இரங்கும் படியாகவும், புதிதாக வந்த தெய்வ மகளிர்க்கு மண மாலை சூட்டும்படியாக வும் விண்ணுலகை அடைந்தனர்.

“சிலைத்தன தூசி மலைத்தனயானை
யார்த்தனர் மறவர் தூர்த்தனர் பல்கணை
விலங்கின வொள்வா ளிலங்கின குந்தம்
விட்டன தோமரம் பட்டன பாய்மாத்
துணித்தன தடக்கை குனிந்தன குஞ்சர
மற்றன பைந்தலை யிற்றன பல்கொடி
சோர்ந்தன பலகுடர் வார் நன்குருதி
குழிந்தது போர்க்கள மெழுந்தது செந்துக
ளழிந்தன பூமி விழுந்தனர் மேலோர்,” (உதயணன் கதை)

காலாட் படைகள், அம்புகள் நிறைந்த அம்பறாத் தூணியை முது கிடத்தே தரித்தவரும், கருமையாகிய கச்சையை இழுத்துக் கட்டியவர்களும், மற்ற வீரர்களைப் பிறங்கிடச் செய்து அவர்கள் சிறப்பை அழித்துச் சிரிப்பது போன்று பலவாக ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்தவர்களும் ஆகிய வீரரைக் கொண்டன. விற்படையினர் வளைந்த வில்லிடத்தே கூரிய அம்பு களைத் தொடுத்து நெஞ்சிலும் நெற்றியிலும் நிணம்படும்படியாகக் கைப் பக்கத்தே பரந்து தாக்குவர். வாட்படையினர் பக்கத்தே நிரைத்தவர்களாய்க் கூரிய வாளைப் பிடி நொறுங்கும் படியாகப் பிடித்து மாலையும் வயிரமும் முறை முறையே எழுந்து வீழத்தாக்குவர்.

படையிடத்தே வரிசையாய் நிற்கும் குதிரைகள் அழகிய குளம்பை யுடையன; கையினால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடியோடு அசைகின்ற சாமரை அணியப்பெற்றன; சிவந்த போர்வையுடையன; கட்டுதலமைந்த கச்சினால் மறைக்கப்பட்ட சேணத்தையுடையன; விருது கட்டப்பட்ட முகத்தையுடையன; கடற்றிரைபோல மென்மேலும் தத்திவருகின்ற பொங்கு கின்ற பிடரி மயிருடையன; இவ்வாறு கெச்சை ஒலிப்ப வருகின்ற குதிரை களிலே வீரர்கள் ஏறி வருவர்.

யானைப்படை, வீரத்துடனே ஒன்றோடொன்று தாக்குவனவும், போர்ப் பறைமுழங்கினும் கோபித்துமழைபோல மதஞ்சொரியும் சுவட்டை யுடையனவுமாகிய கொல்லும் பல யானைகளையுடையது. மலை நிமிர்ந் தாற்போன்ற பெரிய யானையின் பிடரியில், நிலையும், கணையும், அழகிய வட்டும், மழுவும், குந்தமும், மயிற்குரல் போன்றொலிக்கும் சின்னமும், சங்கும், கணையமும், சத்தியும், வாளும், பிண்டி பாலமுமாகிய எல்லாம் குறைவில் லாது பயின்ற மாலையணிந்த மறவர் இருந்து நிலமதிரும்படி இடைவிடாது திரியும்படி கதியிற் பழக்கிக் கொன்று குவிக்கப் போர்க்கள வட்டம் கட லொலிபோலக் கலித்தது. அஞ்ஞான்று பனை வெட்டுண்பதுபோல துதிக்கை வெட்டுண்ணவும், வார்கட்டிய மேளத்தைப்போலக் கால்கள் அறுப்புண்டு கிடக்கவும், வால்கள் வில்லின் துணிபோற் கிடக்கவும், தாமரை மலர்போற் செய்யப்பட்ட கிம்புரி யிறுக்கப்பட்ட கொம்புகள் செக்கர் வானத்திற்றோன் றும் பிறையைப்போற் காணவும் யானைகள் வீழ்ந்தன. மார்பிலே கொடிய படைபடுதலால் வீரர் யானையோடு வீழ்ந்தனர். ஆரமணிந்த வேல்பாய அதனைப் பிடுங்கி வளைவெடுத்து யானையைக் கொன்று மாற்றார் உயிரை வாங்கி வீழ்வோரும், பெரிய கடலிடத்தேவரும் திரையைப் போலக் கடைக் கயிற்றைப் பிடித்துவரும் எழுச்சியைப் போல அழகிய பிடிவாரைப் பிடித்த கையினராய் இரத்த வெள்ளத்து வீழ்வோரும், கரிய தலைகளும் இரத்த வெள்ளத்திற் புரளவும், யானையும் குதிரையும் காலாட்களும் விழுந்து குழம்பாகிய சேற்றுள் பலரும் உழக்கலிற் சவர் நிலத்து எழும் தூசைப் போலத் தூளி ஆகாயத்திற் பரந்தது.

போர் செய்யும் முறை
போர்க் காலங்களில் வீரர்களை உற்சாகப்படுத்தக் கூடிய மதுவர்க் கங்கள் அளிக்கப்படும். குதிரை வீரரைக் குந்தத்தினாலும் வாளினாலும், தேர் வீரரையும் யானை வீரரையும் அம்புகளாலும் தாக்குதல் வேண்டும். தேர்கள் தேர்களுடனும், குதிரைகள் குதிரைகளுடனும், காலாட்கள் காலாட் களுடனும் ஒவ்வொருவராக எதிர்த்தல் வேண்டும். எறிபடைகளையும் மற்றும் படைகளையும் கொண்டு போர் செய்வோர் அவ்வப்படையாள ரோடு போர் செய்தல் முறையாகும்.

போர் உடை
போர் வீரர் காலில் வீரக்கழல் அணிந்திருப்பர். அரையில் வட்டுடை அணிந்திருப்பர். சிலர் முழங்காலுக்குமேல் காற்கட்டை தரித்திருந்தனர்.

மற நிலை யறம்

“மறநிலை யறமா வதுநீரை மீட்டுப்
பகை வென்று சோற்றுக் கடனது கழியா
தாரைத் தண்டித் துக்குறை செய்தலே”.

யுத்த தருமம்
யுத்தத்தில் புறங்கொடாது போர் செய்வோர் சுவர்க்கம் புகுவர். ஓராயுதத்தை மற்றொரு ஆயுதமாகக் காட்டியும், நுனியில் விஷந்தடவிய பாணங்கள், நெருப்பிற் காய்ச்சிய பாணங்கள் ஆகிய இவைகளைப் பிரயோகிக்காமலும் இரதத்தை விட்டுப் பூமியில் இறங்கியவன், பேடி, அஞ்சலி செய்தவன், தலை மயிரை அவிழ்த்துக் கொண்டிருப்பவன், அபய மென்று சொன்னவன், தூங்குகிறவன், ஆடையில்லாதவன் எதிர்க்காதவன், சண்டையைப் பார்ப்பவன், மற்றொருவனோடு சண்டை போடுபவன், ஆயுதம் ஒடிந்தவன், பயந்தவன், புறங்கொடுத்தோடுகிறவன் ஆகிய இவர்களைக் கொல்லுதல் கூடாது.

வாட்போர்
வாட்போர் செய்வோர் இடக்கையிற் கேடகமும் வலக்கையில் வாளுமாக நின்று பொருவர். “வட்டணை வாளெடுத்-தாதிசாரணையடர் நிலைப்பார்வை-வாளுடநெருக்கன் மார்பொடு முனைத்தல்-பற்றி நின்றடர்த்தலுட்கையின் முறித்த-லானனத் தோட்டலணிமயிர்ப் புரோக-முட்கலந்தெடுத்த லொசிந் திடமழைத்தல்-கையொடு கட்டல் கடிந்துளழைத் தலென்-றிவ்வகை பிறவும்…….” (கல்லாடம்). வட்டணை-கேடகம், ஆதி சாரணை-முதலிற் சார்ந்து நிற்றல், அடர் நிலைப்பார்வை-நெருங்கு நிலை யிலே பார்வை வைத்தல், மார்பொடு முனைத்தல்-வாளை மார்பிலேற்று எதிர்த்தல், பற்றி நின்றடர்த்தல்-ஒருவர் ஒருவரைப் பற்றி நின்று பொருதல், உட்கையின் முறித்தல்-கைக்குள் அடக்கி முறித்தல், ஆநநத் தோட்டல்-(கேடகத்துள் தாழ்ந்து) முகத்தோடடங்குதல், அணிமயிற் புரோகம்-அழகுள்ள மயில்போலும், ஞமலிபோலும் முறையே பின்னே பறிந்து முன்னே நடத்தல், உள்கலந்து எடுத்தல்-ஒருவருட லொருவருடலொடு மயங்கி மேலுற வெடுத்தல், ஒசிந்து-வளைந்து, இடம்-இடப்புறமாக, அழைத்தல்-அறைகூவல், கையொடுகட்டல்-ஒருவர் கையோடு ஒருவர் கையேற்றுச் சேரவிறுக்கல், கடிந்து-குறிவழி பிழைத்து, உள் அழைத்தல்-தாம்தாம் நிற்கும் நிலைக்களத்தே ஈர்த்தல்.

வீரக்கழல்
இது பொன்னாற் செய்து வீரத்துக்கும் வெற்றிக்கும் அறிகுறியாக வீரர் காலில் அணியும் அணி. இதனிடத்தே வீரர்கள் செய்த அரிய போர்த் தொழில்கள் பொறிக்கப்பட்டிருக்கும். போருக்குச் செல்லும் வீரர் அதனை அணிவர்.

வீர முரசம்
போரிடத்துத் தோற்ற பகை அரசனின் காவல் மரத்தை வெட்டித் துண்டுசெய்து வண்டிகளில் ஏற்றிப் பட்டத்து யானையை அவனது மகளிரின் கூந்தலாற் பின்னிய கயிற்றாற் பூட்டித் தமது நாட்டகத்தே கொண்டு சென்று முரசஞ் செய்தல் சிறப்புடைத்தாம். தனது வலியினாலே புலியோடு பொருது அதனைத்தனது கூர்ங்கோட்டாற்குத்திக் கொன்று, கொம்பிடத்து மண்ணைக் கொண்டு முக்காரமிட்டுச் செல்லும் இடபராசனுடைய ஆவி இகந்தபின் அதன் தோலை உரித்து மயிர் சீவாதே கொணர்ந்து சுருக்கு விழாது அம் முரசின்மேற் போர்க்கப்படும். அவ்வகை முரசினை மயிர்க்கண் முரசு என்பர். அம்முரசம் வெள்ளிய பூக்கள் பரப்பப்பட்ட அழகிய தட்டிலிலே வைக்கப்படும். அக் கட்டில் முரசு கட்டில் எனப்படும்.

அம் முரசினை வாத்தியம் முழங்கத் தினமும் நீர்த்துறைக்கு எடுத்துச்சென்று பயபத்தியுடன் முழுக்காட்டியபின் மயிலிறகும் உழிஞைத்தளிரும் சேர்த்துக் கட்டிய மாலையைச் சூட்டிப் பின் அம்முரசினை அதிட்டித்து நிற்கும் தெய்வத்தைப் பூசித்து, அக் கடவுளுக்கு இரத்தமும் நறவுங் கலந்த பயங்கரமான சோற் றுண்டையை மந்திரஞ் சொல்லிப் பலியாக இடுவது மரபு. அக் குருதிப் பிண்டத்தைக் கண்டு கொடிய கண்ணையும் முருக்கம் நெற்றுப் போன்ற விரலையுமுடைய பேய்களும் அஞ்சி அகல்வார்கள். எறும்புகளும் அவற்றை மொய்யா. காக்கையும் பருந்தும் அவற்றை உண்ணும். அவை உண்பது பலியிட்ட அரசனுக்குப் பின்னிகழும் போரில் வெற்றி யுண்டாவ தற்கு நன்னிமித்தமெனக் கருதப்படும். பலியூட்டுங்காலத்து அம் முரசம் உரக்க அடிக்கப்பெறும். அதன் முழக்கம் எவர்க்கும் பேரச்சத்தைக் கொடுக்கும். அக் காலத்து வீரரும் படைத் தலைவரும் வஞ்சினங் கூறிப் பலியினை எறிவார்கள். பலியினைப் பருந்தும் காக்கையும் உண்ணும் போது புதுப்புள் வந்துசேரப் பழம்புள் அகன்று போகும். வெற்றிவேந்தர் பகை வரது போர் முரசினைக் கைப்பற்றல் வெற்றிக்கு அடையாள மாகும். இம் முரசம் நீராட்டப்பெறாதும் இரத்தப் பலியூட்டிப் பூசிக்கப்பெறாதும் கிடக் கில் அரசனுக்குத் தீமை விளையும். போர்க்காலத்து வீரமுரசம் முழக்கப் படும்.

மதிற் பொறிகள்
கோட்டையைப் புறஞ்சூழ்ந்த மதில்களில் பகைவர் அணுகாதபடி தடுக்கும் பல இயந்திரப் பொறிகள் அமைக்கப் பெற்றிருந்தன. அக் காலத் தில் தமிழர்கள் பல இயந்திரங்கள் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். தமிழ் நாட்டு அரசரின் கீழ் உத்தியோகங்களில் அமர்ந்திருந்த கிரேக்கரும் இவ்வியந்திரங்களிற் பலவற்றைச் செய்தளித்தனர். அப்பொறிகளாவன:-

வளைவிற் பொறி (இது வளைந்து தானே எய்வது) கருவிரலூகம் இது குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கொல்வது), கல்லுமிழகவண், கல்லிடு கூடை (இடங்கணியென்னும் பொறிக்குக் கல்லிட்டு வைக்குங் கூடை) தூண்டில் (இது தூண்டின் வடிவாகச் செய்து அகழியிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் இழுத்துக்கொள்வது,) தொடக்கு (கழுத்திற் பூட்டி யிழுக்கும் சங்கிலி), ஆண்டலையடுப்பு (சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பறக்கவிட உச்சியைக் கடித்து மூளையை எடுப்பது), கவை (இது மதிலேறின் மறியத் தள்ளுமாயுதம்) கழு, புதை (அம்புக்கட்டு), ஐயவித்துலாம் (இது கதவை யணுகாதபடி அம்புகள் வைத்தெய்யும் யந்திரம்), கைபெயர் ஊசி, (மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப் பொதிர்க்கும் ஊசி), எரிசிரல் (இது சிச்சிலி வடிவாய்க் கண்ணைக் கொத்துமாயுதம்), பன்றி (இது மதிற்றலையில் ஏறினாருடலைக் கோட்டாற்கிழிக்க இரும்பாற் செய்தது), பனை (மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற்கமைந்த பொறி), தள்ளிவெட்டி, களிற்றுப் பொறி, தகர்ப்பொறி, ஞாயில் (குருவித்தலை) முதலியன.

புறப்பொருள் விளக்கம்
1.  “வெட்சிக் கரந்தை விறல் வஞ்சி காஞ்சி யுழிஞை நொச்சியுட்கிய தும்பை யென்றேழும் புறம்” - (வீரசோழியம்).

2.  புறப்பொருள் வெண்பாமாலை வசனமாக எழுதப்பட்டுள்ளது

3.  புறம். 262

4.  “சீமத்தையுடைய இளைய வேட்டுவ மகளே! முன்னாளில் நின் ஐயன்மார் கவர்ந்து கொணர்ந்த நல்ல ஆனிரைகள் வேல் வடிக்கும் கொல்லனும், துடிகொட்டும் புலையனும், பாடவும் புணர்க்கவும் அடைக்கவும் வல்ல யாழ்ப்பாணரு மென்னு மிவரது முன்றிலின் கணிறைந்தன; நீ இவற்றைக் காண்பாயாக.

“முருந்துபோலும் முற்றாத நகையுடையாய்! நின் ஐயன்மார் முன்னாட் கரந்தையார் அலறும் படி கைக்கொண்டு வந்த இளநிரைகள், கள்விற்குமவளும், நல்ல வேய்த் தொழிலை ஆராயுமவனும், புண்ணிமித்தங் கூறுமவனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் முன்றிலின் கண்ணிறைந்தன.” - (சிலப்பதிகாரம் வேட்டுவ வரி.)

1.  மண்டம ரட்ட மறவர் குழாத் திடைக்
    கண்ட முருகனுங் கண்களித்தான்-பண்டே
    குறமகள் வள்ளிதன் கோலங் கொண்டாடப்
    பிறமக ணோற்றாள் பெரிது. (சிலப்பதிகார உரை, தொல்காப்பிய உரை, மேற்கோள்.)

2.  புறம். 259

3.  ஏனாதிப் பட்டத்துக்கு மோதிரம் அளித்தல் மரபு.

4.  “கள் விற்குமவள் இவன் பழங் கடன் கொடாமையிற் பின் கட்கொடாது மறுப்ப, அது பொறாத வீரன் அந் நிலையே வில்லைக் கையிலேந்திப் புள் நிமித்தம் தன் கருத்திற்கு ஏற்பச் சேறலிற் பகைவர் நிரை கொள்ளுதலைக் கருதிப் போகுதலைச் செய்யும்; அங்ஙனம் போகுங்கால் தான் கைக்கொண்ட ஆளிக் கொடியை உயர்த்துக் கொற்றவையும் வில்லின முன்னே செல்லு மன்றோ வென்க.

“பெரிய மலர் போலுங் கண்ணையுடையாய்! நின் ஐயன்மார் அயலாரூர் அலறும்படி தலை நாளிற் கைக் கொண்டுவந்த நல்ல ஆநிரைகள், நயமில்லாத மொழியையும் நரைத்த நீண்ட தாடியையுமுடைய எயினரும் அங்ஙனமூத்த எயிற்றியருமாகிய இவர்கள் முற்றிலின் கண்ணிறைந்தன”. (சிலப்பதிகாரம் வேட்டுவ வரி).

“யானை தாக்கினும் அரவு மேலே ஊர்ந்து செல்லினும் இடியேறு இடிப்பினும் அஞ்சாத சூற்கொண்ட மகளிரையும் கொள்ளை கொள்ளும் உணவினையுமுடைய வாட்போர் செய்யும் மறக்குடியிற் பிறந்த மறவன் குறி வைத்த மிருகத்தைத் தப்பாமற் பிடிக்கும் வேட்டை நாயைப் போல காவலையுடைய பகைவரது ஊரின்கண் சென்று விடியற் காலத்தே கொண்டுவந்த பசுக்களைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்து வீட்டிலே சமைத்த கள்ளினைப் பருகிக் கிடாயை உரித்துத் தின்று ஊரின் நடுவேயுள்ள மன்றிலே மத்தளங் கொட்ட இடத் தோளை வலப்புறத்தே வளைத்து நின்றாடுவான். (பெரும்பாணாற்றுப்படை.)
“வேற்றுப் புலக்களவின் ஆதந்தோம்பல்” எனத் தொல்காப்பியங் கூறலின் நிரை கவர்தல் ஒருவகைக் களவென அறியலாகும்.

In ancient days too, cattle lift was a robbery but a daring one and of such great magnitude that it was nothing short of a call to arms (Studies in Tamil Literature-Deshikar.)

1.  மருத நிலங்களை நெருப்புண்டது. நாடென்னும் பெயர் பெற்றவிடம் காடென்னும் பெயர் பெற்றது. பசுத்திரள் தங்குமிடம் புலி தங்குமிடமாயிற்று. ஊராயிருந்த இடங்கள் பாழாய்க் கிடந்தன. வளையலையும் மடப்பத்தினையுமுடைய மகளிர் துணங்கைக் கூடத்தையும் தாள அறுதியுடைய குரவைக்கூத்தையும் மறந்தனர். சான்றோர்களிருந்த அம்பலங்களில் இரட்டையான அடிகளையும் அச்சந்தரும் பார்வையினையுமுடையய பேய்மகளிர் உலாவி ஆடினர் இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து நிலத்துள்ளாரையெல்லாம் உள்ளே போக்கும் வாயில் காப்போரின் வாயில் களிலிருந்து மனவருத்தமுடைய பெண்கள் வருந்தியழுதனர். பசியாலுலர்ந்த குடிகளுக்குப் பாதுகாவலாக அயல்நாடுகளிலுள்ள சுற்றத்தார் வந்து சேர்ந்தனர். பெரிய மாளிகைகளிலே வெந்து வீழ்ந்த கரிந்த குதிரிலே சூட்டினையுடைய கூகைச்சேவல் பேட்டுடனிருந்து யானை நின்றால் மறையும் வாட் கோரையுடன் சண்பகக் கோரையும் வளர்ந்தது. எருதுகளுழுது விளைகின்ற வயல்களில் பெண்பன்றியுடன் ஆண்பன்றி ஓடித்திரிந்தது. நின்னேவல் கேளாமையால் பகைவரது நாடுகள் இவ்வாறு கெட்டுப் பாழாயின. (மதுரைக் காஞ்சி).

2.  “விட்டில் கிளிநால் வாய் வேற்றரசு தன்னரசு
    நட்டம் பெரும் பெயல் காற்று…………..”

3.  ஆடற்பாட்டில் வல்ல யாழ்ப்பாணர் சொல்லியது.

4.  “நாடிய நட்புப் பகை செலவு நல்லிருக்கை
    கூடினரைப் பிரித்தல் கூட்டலா-றீடிலா
    வேட்டங் கடுஞ்சொன் மிகுதண்டஞ் சூதுபொரு
    ளீட்டங்கட் காமமிவை யேழு.”

5.  பெருஞ் சோற்று நிலை.

6.  புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாட்கொள்ளுமென்க. தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞை எனப் படாதாகலின். அகத்தோனும் முற்றுவிடல் வேண்டி மற்றொரு வேந்தன் வந்துழித்தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள்ளும். நாட்கொள்ளலாவது நாளும் ஓரையும் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக் காலத்துக்கோர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல். (ந-உரை),

7.  இகல்கொண்டாரை வென்று வாகைப்பூச் சூடி ஆரவாரித்தல் வாகை என்பர் ஐயனாரிதனார்.

8.  என்றது நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்து அழித்து, அதரி திரித்து (கடா விட்டு) சுற்றத்தோடு நுகர்வதற்கு போர் முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறு போல அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற்குவித்து எருதுகளிறாக வாள்பட ஓச்சி அதரிதிரிந்துப் பிணக்கு வையை நிணச் சேற்றோடு உதிரப் பேருலைக் கண் ஏற்றி ஈனா வேண்மாள் (பேய்) இடம் துழந்து (துழாவி) அட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சி நின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப்பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்து கொள்ளக் கொடுத்தலாம்.”

9.  தன்னை நீத்த கணவன்மேற் பாய்ந்த வேலினால் மனைவி தன்னுயிரையும் போக்குதல் எனவுங் கூறுவர்.

10. தாமே எனப் பன்மை கூறினார் ஒருவர்க்குத் தலைவியர் பலரென்பதற்கு. (ந.-உரை.)

11. அறுவகை என்பன் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் எனக் கூறுவர் இளம்பூரண வடிகள்.

12. புறப் பொருள் வெண்பா மாலைகாரர், கொடிநிலை யாவது-அரி அயன், அரன், என்ற மூவர் கொடிகளுள் ஒன்றோடு உவமித்துத் தன் அரசன் கொடியைப் புகழ்தல் என்றும்,
    கந்தழியாவது-திருமால் வாணாசுரனின் சோநகரத் தரணை அழித்த வெற்றியைச் சிறப்பித்தலென்றும், வள்ளியாவது-முருகக் கடவுள் பொருட்டு வெறியெடுத்தாடுவது என்றும் கூறுவர்.

13. கூத்தராயினார் எண்வகைச் சுவையும், மனத்தின் கட்பட்ட குறிப்புகளும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவார்; அது விறலாகலின் அவ்விறல்பட ஆடுவாளை விறலியென்றார். அவளுக்குஞ் சாதி வரையறை யின்மையிற் பின் வைத்தார். பாணரும் அசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணருமெனப் பலராம். பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் பரணிபாடுநருமெனப் பலராம். விறலிக்கு அன்னதோர் தொழில் வேறுபாடின்றித் தொழிலொன்றாகலின் விறலியென ஒருமையிற் கூறினார்-(ந-உரை.)

14. இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றாவகையினாலேதான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழி யாகிய செல்வத்தையாண்டுந் திரிந்து பெறாதார்க்கு அன்னவிடத்தே சென்றார் பெறலா

மென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடு.
முருகாற்றுப்படையுட் ‘புலம்புரிந்து துறையுஞ் சேவடி, யெனக் கந்தழிகூறி, ‘நின்னெஞ்சத் தின்னசை வாய்ப்பப் பெறுதி’ யெனவுங் கூறி,அவனுறையும் இடங்களும்கூறி ஆண்டுச் சென்றால் அவன் விழுமிய பெறவரும் பரிசில்னல்கும் எனவுங்கூறி, ஆண்டுத்தான் பெற்ற பெருவளம் அவனும் பெறற்கு கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க. இனி முருகாற்றுப்படை என்பதற்கு வீடு பெறுதற்குச் சமைந்தான் ஒரிரவலனை ஆற்றுப்படுத்த லென்பது பொருளாகக் கொள்க-

1.  சுக்கிர நீதி அத். IV, பகுதி VIII.
2.  கோட்டைகள் அகழினாலும், முட்காட்டினாலும், மலைகளாலும், பாலை நிலத்தாலும் அரண் செய்யப் பெறும். (சுக்கிர நீதி அ. VI பகுதி IV
    நில வெல்லையைக் கடந்த பாதலத்தேயுற ஆழ்ந்த அகழியினையும் வானைத் தடவும் மதிலினையும் அம் மதிலின் மீது பதுக்கிடங்களையும் வெயிற் கதிர் நுழையாத காவற் காட்டினையு முடைய (மதுரைக்காஞ்சி)

3.  பதிற்றுப் பத்து உரை.

4.  படையின் தோற்றப் பொலிவைக் கண்டு பகைவரஞ்சுவரெ ன்பது.

5.  “படுமணிவமருங்கின் பனைத்தாள் யானையுங்
    கொடி நுடங்கு மிசைய தேருமாவும்
    படையமை மறவ ரொடு துவன்றிக் கல்லென”

6.  முல்லைப்பாட்டு 2. நெடுநல்வாடை

7.  திரிகூடராசப்ப கவிராயர்.

8.  வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்.
9.  வில்லிபுரத்தூரரும் இவ்வரலாற்றைக் கூறியுள்ளார்.
10. இது பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடியது.
11. மகா வித்துவான் திரு. மு. இராகவ ஐயங்கார்.
12. முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிருந்து, நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்து, பாலை யென்பதோர் படிவங்கொள்ளும். (சிலப்பதிகாரம்)
13. “வருந்து கானிடை வானிடைச் சுழல்வன பருந்து
    பருந்து நீழலி லொதுங்குவ விரிபணப் பாந்தள்
    கரிந்த பாந்தளின் படநிழ லொளிப்பன கருப்பை
    பொரிந்த கானெரி தளிரெனப் புகுவனபுனமான்.”
    கருப்பை - காரெலி. (திரிகூடராசப்ப கவிராயர்.)
14. அன்னப்பிராசனஞ் செய்யும்.
15. அம்மானைக்காய், கொக்கான் வெட்டுங் கல்.
16. கூன் குறள் முதலாயினவே அரசர் அரண்மனை அந்தப்புரங்களில் ஏவல் செய்வோர்.
17. விசயதரன் இலங்கையையும் பாண்டிய நாட்டையும் செயித்த வரலாற்றை இச் செய்யுள் குறிக்கும்.
18. கடாரம் - பர்மா.
19. பிண்டிபாலம் - கையாலெறியும் ஒருவகைத் தண்டு.
20. ஈச்சோப்பி - ஈ ஓட்டுங்கருவி. வேப்பிலையைப் பிடியாகக் கட்டி ஒப்புவதும் மரபு.
21. கட்டியகாரப் பேய்.
22. “கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட்
    கரைத் திருந்த சாந்தைத் தொட்டப்பேய்
    மறைக்க வறியாது மற்றுந்தன் கையைக்
    மறைக்குமானால் கூர்ங்கத்தி கொண்டு”
    என பேயின் செய்தி ஒன்று யாப்பருங்கல விருத்தி உரையிற் கூறப்படுகின்றது.
    கடாரம் - பர்மா.
23. காலில் விழுந்து கும்பிட்டனர்.
24. பரியின்மீதேறி வேட்டையாடுதல்.
25. இவை மாதரின் உறுப்பு, நடை மொழி முதலியவற்றுக்குவமை.
26. கலிக்கப்போர் கண்ட பேய் அப்போர் நிகழ்ச்சிக்குக் காரணமாய் நின்றவற்றை முதற்கட் கூறுகின்றது.
27. பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி.
28. இவன் பாட்டு இசை முதலியவற்றிற் புலமையுடையவன் என்றவாறு.
29. புட்பகம் - உயர்ந்த சாதியானை.
30. மதம்பாயும் சுவடு.
31. வேகமாகச் செல்லும் என்றவாறு.
32. தேரின் முன்புறத்துத் தாமரைமுகை வடிவினதாக அமைக்கப்பட்டிருப்பது.
33. அம்பு உண்டாக்கிய நெருப்பு தலையிற்பட்டு எரிதலால் தலை அக்கினிச் சட்டி போன்றது.
34. ஆடை உரிந்தது தெரியாமல் ஓடி ஒளிந்தவர்கள் ஒளிந்தபின் ஆடை இல்லாதிருப்பதை உணர்ந்து ஒரு சீலையை ஏழு துணிகளாகக் கிழித்துடுத்தனர்.
35. அபிதா - அபயம்; அப்பிரமண்ணியம் - அபயம்.
    1 இது, கூளி, தேவிக்குப் போர்க்களத்தைக் காட்ட, அது கண்ட தேவி அதிசயித்துப் பேய் களுக்குக் கூறியதாகப் போர் நிகழ்ந்த களத்தினை வருணித்துக் கூறுகின்றது. கலணை - தவிசு.
36. இராமனாக அவதரித்தபோது.
37. இது, களங்காட்டிய தேவி, கணங்களைப் பார்த்து “களத்தை முற்றாகக் காட்டுவது முடிவதன்று. இனிக் கூழடுங்கள்” என்று கூற அதனைக் கேட்ட கணங்கள் தேவியைக் கும்பிட்டு ஒன்றை ஒன்று கூவி யழைத்துத் தம்மிற் பல படியாகப் பேசிக்கொண்டு காரியங்களைச் செய்து கூழட்டு உண்டு களித்ததாக வருணித்துக் கூறுவது.
38. ஓர் ஆபரணம். 3. கரிய கயிறு இதனைக் கறுத்தைப் பாசி எனவும் வழங்குவர்.
39. வாளி - காதணி.
40. “ஊழ்முறை யுலக்கை ஓச்சி வாழிய தரு, மனைக்கிழவர் தம்வளங் கூறி மகளிர் பாடுவது வள்ளைப்பாட்டே.” (திவாகரம்)
41. பிறந்த நாள் அன்று வெள்ளாடை உடுப்பது மரபு.
42. இவ்வளவும் வள்ளைப்பாட்டு. 2. முரசின் கண்ணாயிருத்தல் கூடும்.
43. மூலத்தில் விரற்புட்டி, விற்கூடை என்னும் சொற்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு அரும்பதம் எழுதியவர் மௌனம் சாதித்துள்ளார். இவ்வாறு இருக்கலாம் என்று ஊகித்து எழுதி உள்ளேம்.
44. பகவதி பிச்சை தா.
45. அணி வகுப்பு.

தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையா நூல் திரட்டு
நூல் திரட்டு 1
பத்துப்பாட்டு
பதிற்றுப்பத்து 75.00
நூல் திரட்டு 2
கலித்தொகை
பரிபாடல் 110.00
நூல் திரட்டு 3
அகநானூறு 105.00
நூல் திரட்டு 4
புறப்பொருள் விளக்கம்
கலிங்கத்துப்பரணி
விறலிவிடுதூது 80.00
நூல் திரட்டு 5
பெண்கள் உலகம்
பெண்கள் சமூகம் அன்றும் இன்றும்
பெண்கள் புரட்சி 75.00
நூல் திரட்டு 6
பொது அறிவு
பொது அறிவு வினா விடை
உலக அறிவியல் நூல்
உங்களுக்குத் தெரியுமா? 215.00
நூல் திரட்டு 7
அறிவுக் கட்டுரைகள்
நூலகங்கள்
அறிவுரை மாலை
அறிவுரைக் கோவை 110.00
நூல் திரட்டு 8
தமிழர் சமயம் எது?
சைவ சமய வரலாறு
சிவன்
இந்து சமய வரலாறு
தமிழர் பண்பாடு 140.00
நூல் திரட்டு 9
நமது தாய்மொழி
நமதுமொழி நமதுநாடு
திராவிட மொழிகளும் இந்தியும்
தமிழ்ப் பழமையும் புதுமையும்
முச்சங்கம் 115.00
நூல் திரட்டு 10
தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?
ஆரியர் தமிழர் கலப்பு
ஆரியத்தால் விளைந்த கேடு
புரோகிதர் ஆட்சி
இராமாயணம் நடந்த கதையா?
ஆரியர் வேதங்கள் 75.00
நூல் திரட்டு 11
திராவிடம் என்றால் என்ன?
திராவிட இந்தியா
திராவிட நாகரிகம்
மறைந்த நாகரிகம் 80.00
நூல் திரட்டு 12
ஆதி மனிதன்
ஆதி உயிர்கள்
மனிதன் எப்படித் தோன்றினான்?
மரணத்தின் பின்
பாம்பு வணக்கம் 80.00
நூல் திரட்டு 13
தமிழர் யார்?
உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
சிந்துவெளித் தமிழர்
தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் 100.00
நூல் திரட்டு 14
தமிழர் சரித்திரம்
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர்
நூல் திரட்டு 15
திருவள்ளுவர்
திருக்குறள் 175.00
நூல் திரட்டு 16
தமிழகம் 85.00
நூல் திரட்டு 17
தமிழ் இந்தியா 90.00
நூல் திரட்டு 18
திருக்குறள் அகராதி 65.00
நூல் திரட்டு 19
தமிழ்ப் புலவர் அகராதி 100.00
நூல் திரட்டு 20
தமிழ் இலக்கிய அகராதி 90.00
நூல் திரட்டு 21
காலக் குறிப்பு அகராதி 50.00
நூல் திரட்டு 22
செந்தமிழ் அகராதி 300.00
நூல் திரட்டு 23
கலிவர் யாத்திரை
இராபின்சன் குரூசோ
அகத்தியர் 45.00
நூல் திரட்டு 24
தமிழ் ஆராய்ச்சி
தமிழ் விளக்கம்
நீதிநெறி விளக்கம் 55.00